கடந்த வாரம் அனைத்து செய்தித்தாள்களிலும் வரி வரியாய் எழுதப்பட்டது ஜம்மு-காஷ்மீர் சட்ட மசோதா. அந்த சட்டத்தை நியாயப்படுத்த நமது அரசாங்கத்திற்கு கிடைத்த வாதம் "இந்த நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீரில் ஆன்மிக சுற்றுலா, சாகச சுற்றுலா, சூழலியல் சுற்றுலா வளப்படுத்தப்படும்" என்பதே.
நல்ல வாதம் ! நல்ல முயற்சி! வாழ்த்துகள்.
"சுற்றுலா" இந்த வார்த்தைக்கான நீளம் வெறும் நான்கு எழுத்தில் இருந்தாலும், இது மனித இனத்தின் ஒரு அதீத கற்பனையே! வாஸ்கோடகாமா வின் கடல் சுற்றுலாவில் தான் நமது உலகம் ஆழமாக்கப்பட்டது, அகலமாக்கப்பட்டது. சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜியக் கதையும் ஒரு சுற்றுலாவாகத் தான் ஆரம்பித்தது. சுருங்கச் சொன்னால், யாரோ? எவரோ? சென்ற/செல்ல திட்டம் போட்ட ஒரு சுற்றுலாவில் தான் இன்றைய நாடுகள் உருவானது.
ஆனால், வரலாறுகளை படம்பிடித்த , நாடுகளை உருவாக்கிய இந்த சுற்றுலா அன்றாட வாழ்க்கை பயணத்தின் வெளிப்புறத்தில் தான் உள்ளது.
சுற்றுலா நமது அடையாளத்தை உருவாக்குகிறது என்றால், நமது தேய்ந்துபோன தெருக்கள் நமது அடையாளத்தை இழக்க முன்வருகிறது. வரலாற்று சுற்றுலா நமது வரலாற்று கதைகளையும்,அதன் இரும்புகரத்தையும் நடைமுறை படுத்துகிறது என்றால், நமது இறந்த காலத்தை தேடிய பயணம் நமக்கு மரியாதைக்குரிய ஞாபக மறதிகளைத் தருகிறது.நேரத்தை செலவளிப்பதற்காக தேன்நிலவு சுற்றுலா இருக்கும் என்றால், அதே நேரத்தை மன்னிப்பதற்காகவும்,மறைப்பதற்கும் தான் நமக்கான இல்லறப் பயணம் தொடங்குகிறது. நம்மால் முடியும் என்னும் வாசகத்தோடு எவரெஸ்ட் சாகச சுற்றுலா தொடங்குகிறது என்றால், "இனியும் முடியாது" என்ற வார்த்தையின் குறியீடாக கிராமத்திலிருந்து சென்னைக்கான பயணம் துவங்குகிறது. ஒரு கலாச்சார உரையாடல்கள் சாத்தியம் என்பதில் காஷ்மீர் சுற்றுலா தொடங்கும் என்றால், கலாச்சார உரையாடல்கள் சாத்தியம் இல்லை உரையாடல்கள் என்றுமே சத்தம் போடப்போவதில்லை என்ற புரிதலில் காஷ்மீர் மக்களுக்கான அரசியல் பயணமும் தொடங்கும்.
இந்த வகையான அன்றாட அனுபவங்களை நாம் ஒரு சுற்றுலாவாக கருதுவது இல்லை.ஏனெனில் இவைகள் நமக்கு சொல்லப்பட்ட வரலாறைத் தாண்டியுள்ளது, தெளிவான குழப்பத்தில் ஆரம்பிக்கிறது, எதிர்காலத்தின் இயலாமையை நம்பியே செல்கிறது.
சுற்றுலா சென்ற மிக குளிர்ந்த கொடைக்கானல் வானங்களும், வெளிப்படைத் தன்மை இல்லாத சஹாரா பாலைவனத்தின் வெப்பங்களும் தான் இன்று நமது ரசனையாகிவிட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம் என்னவென்றால் 32 °C என்ற சாராசரி வானிலையின் கற்பனையை நாம் என்றைக்கோ இழந்து விட்டோம் என்பதுதான். நமது தெருவில் இருக்கும் அந்த வெயில் என்றைக்கோ மறைந்து விட்டது.
நண்பர்களே! ஊட்டியும்,கொடைக்கானாலும் நமது சுற்றுலா வில்தான் தனது அன்றாட வாழ்க்கையை இழந்தது. அங்குள்ள முதியோர்கள் இல்லத்தையும், அரசு மருத்துவமனையையும், இடுகாடுகளையும் நமது trivago செயலி காட்டத் தயாராக இல்லை .
ஜம்மு-காஷ்மீர் ஒரு தொலைக்கப்பட்ட எழுத்தாய் உள்ளது, ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா வழிகாட்டி என்ற புத்தகத்தில் அதை எழுத நினைக்காதீர்கள்! அங்கு சுற்றுலா சென்று, உங்கள் தெருக்களின் அன்றாட சத்தங்களை நீங்களும் இழந்து விடாதீர்கள்.