/indian-express-tamil/media/media_files/2025/11/02/trichy-2025-11-02-14-25-15.jpg)
திருச்சி மாநகரில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மிகவும் பிரபலமான பிரேத எரியூட்டும் மைதானமான ஓயாமாரி மின் மயானம், அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண் 15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் இரண்டு எரிவாயு தகன மேடைகள் (LPG Gas Furnace) செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தத் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டுள்ளதால், அவற்றை முழுவதுமாக மாற்றம் செய்யும் முக்கியப் பணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, நாளை (03.11.2025) முதல் அடுத்த மாதம் 18-ம் தேதி (18.12.2025) வரை 45 நாட்களுக்கு ஓயாமாரி இடுகாடு மயானத்தில் பிரேத உடல்களை எரியூட்ட இயலாது. எனவே, இந்த 45 நாட்களுக்கும் ஓயாமாரி மின் மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது. ஓயாமாரி மயானத்தைப் பயன்படுத்தி வந்த பொதுமக்கள், இந்த காலகட்டத்தில் பின்வரும் மாற்று மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவானைக்கோவில் உள்ளவர்கள் வார்டு எண்: 4-ல், அம்பேத்கார் நகரில் செயல்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மையத்தையும் உறையூர், கோணக்கரை பகுதியினர் வார்டு எண்: 11-ல் செயல்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மையத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தத் தற்காலிக மூடலை கவனத்தில் கொண்டு, இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மாநகராட்சி அறிவித்துள்ள மாற்று மையங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us