அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் செல்வதற்காக விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தான் சான் பிரான்சிஸ்கோவில் இறக்கிவிடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வழக்கமாக நாம் பேருந்துகளில் இந்த நிகழ்வை கண்டிருப்போம். பயணி ஒருவர் பேருந்து மாறி ஏறினால், அடுத்த ஸ்டாப்பில் அந்த பயணியை இறக்கிவிட்டுவிடுவார்கள். முன்பதிவு செய்யப்பட்ட பேருந்தில் ஒருவர் தவறுதலாக மாறி ஏறினால், கண்டக்டர் விவரத்தை கூறி கீழே இறக்கி விட்டிருப்பார். ஆனால், இந்த சம்பவம் நடந்தது விமானத்தில் என்பது தான் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது.
லியூசி பாஹடௌக்ளே என்ற பெண்மணி அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியாத அந்த பெண்மணிக்கு ப்ரெஞ்ச் மொழி மட்டுமே தெரியுமாம். இந்நிலையில், அவரது போர்டிங் பாஸில் நெவார்க்(அமெரிக்கா) விமான நிலையத்தில் இருந்து சார்லஸ் டி கவுளே(பிரான்ஸ்) விமான நிலையம் என குறிப்பிடப்பட்டிருந்தது. விமான நிலைய ஊழியர்கள் இதை சோதனை செய்தபோதிலும், தவறுதலாக சான்பிரான்ஸிஸ்கோ செல்லும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கிவிட்டனர்.
இதையடுத்து விமானத்திற்குள் சென்ற அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட 22சி இருக்கையை நோக்கி வந்துள்ளார். அப்போது, தனது இருக்கையில் மற்றொருவர் அமர்ந்திருப்பதை கண்ட லியூசி, இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து விமான ஊழியர் லியூசியின் போர்டிங் பாஸை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, அவருக்கு மாற்று ஏற்பாடாக மற்றொரு இருக்கையை அளித்துள்ளார். லியூசிக்கு ஆங்கில மொழி தெரியாது என்பதால், ஊழியர்கள் கொடுத்த இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். எங்கு அமர்ந்தால் என்ன விமானம் பிரான்ஸுக்கு தானே செல்கிறது என்று நினைத்திருப்பார் போலும்.
இந்நிலையில், விமானம் தரையிறங்கியது கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸுஸ்கோவில். இதனால், அதிர்சியிடைந்த அந்த பெண்மணி, தான் பிரான்ஸ் செல்வதற்காக விமானத்தில் ஏறினேன், ஆனால் விமானம் சான் பிரான்ஸிஸ்கோ வந்துள்ளது என்பதை விவரித்துள்ளார். சுமார் 3000 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின்னரே இந்த சம்பவம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தவறுதலாக அப்பெண்மணியை சான் பிரான்ஸிஸ்கோவிற்கு கொண்டுவந்தது குறித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது அப்பெண்மணியிடம் மன்னிப்பு கோரியது. மேலும், அப்பெண்மணியின் டிக்கெட் பணத்தை திருப்பி வழங்கிய விமான நிறுவனம், இந்த தவறை சரிசெய்யும் வகையில் அவருக்கு பிரான்ஸ் செல்ல மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தது.
எனினும், இதனால் திருப்தியடைந்த லியூசியின் குடும்பத்தினர், பணம் என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல, விமான பயணிகளின் பாதுகாப்பு தான் கேள்விக்குறியாக இருக்கிறது என்று தெரிவித்தனர். இது தொடர்பாக லூயூசியின் மருமகள் டையன் மியன்ட்சோகோ கூறும்போது: இதுபோன்ற பயணத்தின் போது பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விமான நிறுவனங்கள் செயல்பாடு அலட்சியத்துடன் இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஒருவேளை எனது மாமியார் லியூசி ஒரு தீவிரவாதியாக இருந்து விமான பயணிகள் பலபேரை கொன்றிருக்கலாம் அல்லவா? ஆனால், விமான நிறுவனம் இதை கண்டும் பிடிக்கவில்லை, அவரை பிடிக்கவும் இல்லை. இந்த சம்பவமானது விமான பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.