திருமாவளவன் 58: சில குறிப்புகள்

விசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது.

தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்திருக்கும் திருமாவளவனுக்கு இன்று 58-வது பிறந்த நாள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். திருமாவளவன் தொடர்பாக ஒரு ஊடகவியலாளராக கவனித்த சில குறிப்புகள் இங்கே:

தமிழக அரசியலில் திருமாவளவனின் தனித்தன்மையாக ஒரு அம்சத்தை குறிப்பிட வேண்டுமென்றால், கட்சி நிர்வாகிகளுடனும் தொண்டர்களுடனும் அவர் கொண்ட பிணைப்பு. ஒரு இயக்கத்தின் தலைவர், அதுவும் கிட்டத்தட்ட அவரே உருவாக்கி வளர்த்த ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற நிலையில் சர்வாதிகாரத்தை ஒருபோதும் தன் இயக்கத்தில் பாய்ச்சாதவர் அவர்.

நிர்வாகிகளுக்கு அவர் அளிக்கும் பேச்சு சுதந்திரம், தமிழக சூழலில் வேறு கட்சிகளில் இல்லை. 2016-ல் விடுதலை சிறுத்தை இயக்கத்தில் ஒரு பிரச்னை. தேசிய அளவில் அப்போது தலித்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ‘தலித்களை தாக்காதீர்கள். என்னைத் தாக்குங்கள்’ என பேசினார் பிரதமர் மோடி. அதே காலகட்டத்தில் அம்பேத்கரை சிலாகித்தும் பேசியிருந்தார் மோடி.

மொத்த எதிர்க்கட்சிகளும் மோடியின் நாடகமாக இதை வர்ணித்த நிலையில், விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிகுமார் வெளிப்படையாக மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிப்படையாக முகநூலில் பதிவு செய்தனர். ரவிக்குமாரின் கருத்தில் திருமாவளவனுக்கும் உடன்பாடு இல்லை.

ஆனாலும் மிக லாவகமாக அந்தத் தருணத்தில் தன் கட்சியின் அறிவுஜீவியான ரவிக்குமாரையும் விட்டுக் கொடுக்காமல், எதிர்ப்பு கருத்துகளின் நியாயத்தையும் உள்வாங்கி மீடியாவிடம் அந்தப் பிரச்னையை சமாளித்தார் திருமா. அந்தத் தருணத்தில் அவர் சற்று பிசகியிருந்தாலும், சிறுத்தைகளில் சிலரை கட்சி இழந்திருக்கும்.

2018 டிசம்பரில் இன்னொரு நிகழ்வு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பேட்டியில், தலித்களுக்கு திராவிட இயக்கம் ஆற்றிய பணிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு டென்ஷனான வைகோ, ‘என்னை தலித்களுக்கு எதிராக சித்தரிக்க முயற்சிக்கிறீர்களா? என் வீட்டில் வேலை செய்கிறவர்கள் தலித்கள்தான்’ என்றார்.

இது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது முகநூல் பதிவில், ‘வைகோவின் பேச்சை ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். வீட்டில் தலித்களை வேலையில் அமர்த்துவதற்கும், அதிகார பகிர்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனத்தை வைகோ.வால் ஜீரணிக்க முடியவில்லை. ‘வன்னியரசுவை இப்படி எழுதச் சொன்னது யார் என எனக்குத் தெரியும்’ என கொந்தளித்தார் வைகோ.

கிட்டத்தட்ட திருமா சொல்லித்தான் வன்னியரசு எழுதியதாக வைகோவின் பேச்சு தொனி இருந்தது. தவிர, 2006 காலகட்டத்தில் தேர்தல் செலவுக்காக திருமாவளவனுக்கு பணம் கொடுத்தேன் என்றும் வைகோ சொல்ல, திமுக அணியில் இனி அந்த இரு கட்சிகளும் தொடர முடியுமா? என்கிற கேள்வியே எழுந்தது.

இந்த விவகாரத்தை திருமா அணுகிய விதமும் அலாதியானது. முதல் கட்டமாக கட்சித் தேர்தல் பணிகளுக்காக வைகோவிடம் பணம் பெற்றதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் திருமா. வைகோ வெளிப்படையாக இப்படி பேசிவிட்டாரே? என்கிற ஆதங்கமோ, கோபமோ அவரிடம் எழவே இல்லை.

பெரிதாக எந்த அரசியல் லாபமும் இல்லாத சூழலிலும், அடுத்த ஓரிரு நாட்களில் வைகோவை சமாதானப்படுத்த அவரது அண்ணா நகர் இல்லம் சென்றார். கூடவே, வன்னியரசுவையும் அழைத்துக் கொண்டு! வைகோவே இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. விசிக மீது கடும் கோபம் கொண்டிருந்த வைகோ, பின்னர் கூல் ஆனார். இந்த நிகழ்வில், ‘தனது எதிரி யார்? யாருடன் மோத வேண்டும்?’ என்கிற தெளிவு தெரிந்த தலைவராக வெளிப்பட்டார் திருமா. கூடவே, ‘ஈகோ’ இல்லாத தலைவராகவும்!

அதே வன்னியரசு அண்மையில் வேலூர் தேர்தல் முடிவு தொடர்பாக, ‘திமுக.வுக்கு பின்னடைவு’ என கருத்து கூறி, இன்றளவும் கட்சிக்குள் கருத்து ஜனநாயகம் இருப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கூட்டங்களில் பெரிய ஒழுங்கை எதிர்பார்க்க முடியாது. செய்தியாளர்களுக்கு உரிய இடங்கள், மேடையின் பெரும்பகுதி என தொண்டர்கள் ஆக்கிரமிப்பார்கள். கூச்சல், குழப்பங்களுக்கும் குறைவிருக்காது. மேடையில் இருக்கும் திருமா, சில நேரங்களில் எழுந்து வந்து பொறுமையாக அவர்களிடம் பேசி உட்கார வைக்க முயற்சிப்பார். சில நேரங்களில் இதை சகஜமாக எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். செய்தியாளர்களுக்கு இது பெரும் சிரமம்.

திருமா இதற்கு கொடுக்கிற விளக்கம், ‘இப்போதுதான் அவர்கள் (ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்) எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் அடக்கச் சொல்கிறீர்களா?’ என்பதுதான். ‘அடக்கி வைக்கப்பட்ட வெள்ளம், திறந்து விடப்படும்போது அங்கும் இங்குமாக சீறற்று பாய்வதை தவிர்க்க இயலாது’ என்கிற பார்வையும் திருமாவுக்கு உண்டு.

கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல, தொண்டர்களையும் முகத்திற்கு நேராக கேள்வி கேட்கவும், வாதாடவும் அனுமதிக்கிற தன்மை திருமாவுக்கு உண்டு. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டிக்காக திருமாவிடம் முன் அனுமதி பெற்று சென்றேன். பகல் 1 மணிக்கு சென்னை அசோக் நகரில் கட்சி நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் சந்திப்பதாக ஏற்பாடு.

ஆனால் பிற்பகல் 2.30 மணிக்குத்தான் திருமா வந்தார். மொத்தக் கூட்டமும் அவரை நெருக்கித் தள்ளி, மேடையில் கொண்டு போய் விட்டார்கள். என்னால் நெருங்க முடியவில்லை. விசிக செய்தி தொடர்பாளரான நண்பர் பாவலன் என்னை முன்னால் அழைத்துச் சென்று, ‘இவர் அப்பவே காத்து நிற்கிறார். பேட்டி கொடுத்துட்டு, அப்புறம் கூட்டத்தில் பேசுங்க’ என்கிறார். திருமாவோ, ‘எப்பா, இவ்வளவு கூட்டம் இருக்கு. இப்போ பேட்டி கொடுக்க விடுவாங்களா?’ என்கிறார், பொறுமையாக.

பாவலன் மீண்டும் வற்புறுத்த, நானே குறுக்கிட்டு கூட்டம் முடிந்ததும் பேசலாம் எனக் கூறினேன். திருமா புன்னகைத்தார். பெரிதாக அடையாளம் பெறாத சிறு கட்சிகளின் தலைவர்களிடம் கூட, நிர்வாகிகள் இந்த அளவுக்கு உரிமை எடுத்துப் பேசும் நிலை இல்லை என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

வேளச்சேரியில் விசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது. ஒருமுறை நான் பேட்டிக்காக முன் அனுமதி பெற்று போய் நிற்க, திருமாவும் வந்துவிட்டார். ஆனால் அலுவலக நிர்வாகி எங்கோ சென்றுவிட்டார். அலுவலகம் பூட்டிக் கிடந்தது. திருமாவுடன் வந்த தொண்டர் ஒருவர் போன் போட்டு, நிர்வாகியை அழைத்தார். சுமார் அரை மணி நேரம் கழித்துதான் அங்கு நிர்வாகி வந்து சேர்ந்தார்.

அதுவரை, மிகப் பொறுமையாக அலுவலக வாசலில் அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமிகளுடன் வாஞ்சையுடன் பேசியபடி நின்றார் திருமா. முன்பே சொன்னபடி, தாமதமாக அங்கு வந்த நிர்வாகியிடம் பெரிதாக பதற்றம் எதுவும் இல்லை. இவரும் கண்டிக்கவில்லை. ஒழுங்கு என்கிற பெயரில் தொண்டனிடம்கூட அதிகாரமோ ஆதிக்கமோ காட்டுவதில்லை என்கிற இந்த நிலைப்பாடு, மிக அபூர்வமானது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பல இடங்களில் தகறாறுகள் ஏற்படுவது இயல்புதான். இது தொடர்பான பஞ்சாயத்துகள் அவரிடம் வரும். கட்சிக்குள் குழுக்கள் அமைத்து இதை விசாரிக்கிறார்கள். முடிந்த அளவு சமரசம் செய்கிறார்கள். 99 சதவிகிதம் யாரையும் கட்சியை விட்டு நீக்குவதில்லை என்பது திருமாவின் நிலைப்பாடு.

அதேபோல, திமுக, இடதுசாரிகளை தவிர்த்துப் பார்த்தால் இரண்டாம்கட்ட நிர்வாகிகளை பல ஆண்டுகளாக அப்படியே தக்க வைக்கிற கட்சி விசிக.தான். திருமாவின் அணுகுமுறையே இதற்கு காரணம். செல்வப் பெருந்தகை உள்ளிட்ட ஓரிருவர் வெளியே சென்றிருந்தாலும், திருமா மீது அவர்களுக்கு விமர்சனம் கிடையாது.

கலைஞர் மீது நிஜமாகவே அளப்பரிய அன்பு கொண்டவர் திருமா. அரசியல் ரீதியாக 2015-ம் ஆண்டு, ‘ஆட்சியில் பங்கு தருகிறவர்களுடம் மட்டுமே கூட்டணி’ என்கிற கோஷத்தை எழுப்பினார் திருமா. இதற்காக மதிமுக, இடதுசாரிகளை உள்ளடக்கி தி.நகரில் ஒரு கூட்டம் நடத்தினார். அடுத்த ஆண்டு (2016) தேர்தல் வரவிருந்த நிலையில், திமுக.வுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டமாக அது பார்க்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு பிறகு திமுக- திருமா இடையே விரிசல் அதிகமானது. எனினும் வழக்கம்போல அந்த ஆண்டும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூற திருமாவுக்கு விருப்பம். யாருக்கோ தகவல் கொடுத்துவிட்டு, சென்னை வேளச்சேரி அலுவலகத்தில் காத்திருந்தார். அழைப்பே வராதபோது, மிகவும் நொந்தார். சரியாக அந்த நேரம் மற்றொரு பேட்டிக்கு அங்கு சென்றிருந்த நான், காண நேர்ந்த நிகழ்வு இது.

சம காலத்தில் தமிழக தலைவர்கள் பலரிடமும் இணக்கமான உறவு அல்லது நட்பு பாராட்டுகிற ஒருவர் திருமாதான். பாஜக.வில்கூட பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோருடன் இவருக்கு ஆத்மார்த்தமான நட்பு உண்டு. தொண்டர் கூட்டம் ஒருபுறம் இருந்தாலும், அதைத் தாண்டி திருமாவளவன் என்கிற தலைவரின் ஆளுமையும், அரசியல் வியூகங்களும்தான் விடுதலை சிறுத்தைகளை தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் நிறுத்தியிருக்கின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close