மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா மகாராணியின் நினைவிடம், Tripadvisors Travellers என்ற பயண இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியக பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் சின்னமாக பல்லாண்டுகளாக நிலைத்து நிற்கும் விக்டோரியா நினைவகத்திற்கு இந்த சிறப்பு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளும், விக்டோரியா நினைவிடத்தைக் காணும் வாய்ப்பை நழுவவிட மாட்டார்கள்.
Tripadvisors Travellers இணையத்தளமானது, பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு சுற்றுலா பயணிகள் அளித்த மதிப்புரை, மதிப்பெண்கள், தரம் இவற்றை கருத்தில்கொண்டு உலகில் உள்ள அருங்காட்சியகங்களுள் சிறப்பு வாய்ந்தவற்றின் பட்டியலை வெளியிட்டது. இதனை வெளியிட இந்த இணையத்தளம் ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், இந்தியாவில் மிகச்சிறந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் விக்டோரியா நினைவிடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் அமைந்துள்ள பெருநகர அரண்மனை பிடித்துள்ளது. இதனை 1729-1732 காலகட்டத்தில் மன்னர் சவாய் ஜெய் சிங் கட்டினார். பிங்க் சிட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக் கூடியது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள பாகூர் கி ஹவேலி அருங்காட்சியகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 138 அறைகளுடன் கூடிய மேன்சன், பண்டைய ராஜஸ்தானின் கலாச்சாரம், நடனக்கலையை பிரதிபலிக்கும் வகையிலான கலாச்சார மையம் ஆகியவை இதில் அமைந்துள்ளன.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள யோதஸ்தால் அருங்காட்சியகம் நான்காவது இடத்தையும், காஷ்மீர் மாநிலம் லே-யில் அமைந்துள்ள ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உலகிலேயே மிகச்சிறந்த அருங்காட்சியகமாக, அமெரிக்காவின் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகச்சிரந்த அருங்காட்சியகங்களின் முழு பட்டியலை இங்கே சென்று காணுங்கள்