Violence against Women, pcvc ngo, crime prevention & victim care
உடன் பிறந்தவர்களில் ஆரம்பித்து, கணவன் அவனது குடும்பத்தார் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல ரூபங்களில் நிகழ்த்தப்படுகின்றன. பிரச்னைகள் உச்சக்கட்டத்தை அடையும் போது தான் சம்பந்தப்பட்ட பெண், சம்பந்தபட்டவர்களின் மூலம் எந்தளவுக்கு வன்முறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என வெளியுலகத்துக்கு தெரியவரும். ஆனால், பிரச்னைகளை வெளியில் சொல்லவும் முடியாமல், தாங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கும் பெண்கள் ஏராளம். இப்படி பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது, பி.சி.வி.சி எனும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம். குறிப்பாக இவர்கள், தீ மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த கடினமான சூழலை கடக்க தோள் கொடுத்து உதவுகிறார்கள்.
சென்னை அண்ணாநகரில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்தில், அதன் சீனியர் மேனேஜர் சஜிதாவை சந்தித்தோம்… “International Foundation For Crime Prevention & Victim Care தான் இந்த பி.சி.வி.சி. இந்த என்.ஜி.ஓ 20 வருஷமா இயங்கிட்டு வருது. நாங்க குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உதவுறோம். 24 மணி நேரமும் எங்களோட ஹாட் லைன் நம்பருக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம். அவங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நாங்க தயாரா இருக்கோம்.
பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது…
அவங்களுக்கு ஃபோன்ல கவுன்சிலிங் தேவைப்பட்டா ஃபோன்லயே கொடுப்போம். இட வசதி வேண்டி கட்டாய சூழலில் இருப்பவர்களுக்கு தங்கும் இடமும், சட்ட ரீதியான செயல்பாடுகள், விவாகரத்து, பராமரிப்பு தொகை போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் நாங்க நிச்சயமா ஹெல்ப் பண்ணுவோம். குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்டு வெளில வர பெரும்பாலான பெண்கள், என் குழந்தைங்கள நானே பாத்துக்குவேன், சொந்த கால்ல நிப்பேன்னு தான் முடிவெடுக்குறாங்க. ஸோ, அவங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளையும் நாங்க ஏற்படுத்தித் தர்றோம்.
எங்களுக்கு இந்தியா முழுக்க இருந்தும், தமிழ்நாட்டுல பல மாவட்டங்கள்ல இருந்தும் அழைப்புகள் வரும். அதுக்கு நாங்க அந்தத்த மாவட்டங்கள்ல இருக்க பங்குதாரர்கள் மூலமா உதவி புரிஞ்சிட்டு வர்றோம். எங்க பிசிவிசி-யோட ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் தான் ‘விடியல்’. இதுல தீ மற்றும் ஆசிட் காயம் ஏற்பட்டவங்களுக்கு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையோட இணைஞ்சு தேவையான உதவிகளை செஞ்சிட்டு வர்றோம்.
கிராமப் பெண்களுக்கு வன்முறையின் தீவிரத்தை எடுத்துக்கூறிய போது…
தீ மற்றும் ஆசிட் வன்முறைக்கு ஆளானவங்களுக்கு பிஸியோ தெரப்பி ரொம்பவே தேவைப்படும். உடற்பயிற்சி, மன ரீதியான ஆலோசனைகளும் அவங்களுக்கு கட்டாயம் தேவைப்படும். இவங்க மருத்துவமனைல இருந்து டிஸ்சார்ஜ் ஆனப் பிறகு, எங்களோட மறுவாழ்வு மையத்துல மேலே சொன்ன விஷயங்களை பயன்படுத்திக்கலாம். குறைஞ்ச பட்சம் 3 மாசத்துல இருந்து 1 வருஷம் வரைக்கும் இங்கயே தங்கி இருந்து எங்களோட சர்வீஸ்களை எடுத்துக்கலாம்.
எங்களோட சர்வீஸ் எதுக்குமே நாங்க கட்டணம் வாங்குறது இல்ல. பிரச்னைன்னு வந்ததுமே, அது அடித்தட்டு மக்கள் கிட்ட தான் இருக்கு, குறிப்பிட்ட சமூகத்துல தான் இருக்குன்னு நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. நிறைய இடத்துல படிச்சு விபரம் தெரிஞ்சவங்கக் கூட இந்த மாதிரி குடும்ப வன்முறைக்கு ஆளாகுறாங்க. ஆனா வெளில வந்து சொல்றவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். காரணம் இது வெளில தெரிஞ்சா என்னப் பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க, என் குடும்ப கவுரவம் போய்டும், குழந்தைங்கள யார் பாத்துக்குவா போன்ற பல விஷயங்களால அவங்க உள்ளுக்குள்ளேயே புழுங்கிட்டு இருக்காங்க.
’ரைட்டர்ஸ் கஃபே’வில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள்
இதுல இருந்து வெளில வர்றதுக்கு, நான் அனுபவிச்சுட்டு இருக்குறது வன்முறை தாங்கறத முதல்ல பெண்கள் உணரணும். ஏன்னா பல பெண்களுக்கு இது தெரிய மாட்டேங்குது. நான் தப்பு பண்ணா என் கணவர் என்ன அடிக்கட்டும்ன்னு சொல்ற பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. தப்பு பண்ணாலும் பண்ணாட்டியும், யாரும் யாரையும் அடிக்க உரிமை இல்லங்குறத யாரும் உணர மாட்டேங்குறாங்க. பெண் அப்படின்னாலே இப்படித்தான் இருக்கணும்ன்னு நம்ம சமூகம் காலம் காலமா ஒரு கட்டமைப்பை உருவாக்கி வச்சிருக்கு, அதோட விளைவு தான் இது. படிச்ச பெண்களே இதுல சிக்கித் தவிக்கிறாங்க. ஸோ, உங்களுக்கு நடக்குறது வன்முறைங்கறத முதல்ல நீங்க உணருங்க. முடிவெடுத்தல் பெண்களுக்கு ரொம்ப கம்மியா இருக்கு. என்ன தான் பெண்கள் கை நிறைய சம்பாதிச்சாலும் அதை ஆளுமை பண்றது ஆண்கள் தான். இது கூட ஃபினான்ஸியல் வையலன்ஸ் தான். பிசிக்கல், எமோஷனல், செக்ஸுவல்ன்னு பெண்களுக்கு எதிரா நடக்குற வன்முறைகளைப் பத்தி சொல்லிட்டே போகலாம். அதனால, பெண்களுக்கு விழிப்புணர்வு ரொம்ப ரொம்ப அவசியம்” என எச்சரிக்கிறார் சரிதா.
சென்னையில் இயங்கி வரும் ‘ரைட்டர்ஸ் கஃபே’ என்ற காஃபி ஷாப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இந்த பிசிவிசி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். ஆசிட் வீச்சு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மத்தியில் தான், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மனித நேயமிக்கவர்களும் தயாராக இருக்கிறார்கள் என்பது சற்று ஆசுவாசப்படுத்துகிறது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், பிசிவிசி அலுவலகத்தை தொடர்பு கொள்ள
044-43111143
டோல் ஃப்ரீ எண் – 1800 102 7282
வாட்ஸ் ஆப் – 9840888882
மின்னஞ்சல் – dvsupport@pcvconline.org
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”