Viralimalai Peacock Sanctuary | விராலிமலை மயில்கள் சரணாலயம்| பறவைகளில் மிகவும் வசீகரமானது மயில் மட்டுமே. நீண்ட தோகை, கொண்டையுடன் மயிலின் அழகைக் கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக 1963 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
Advertisment
அந்தவகையில் திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது விராலிமலை மயில்கள் சரணாலயம். பசுமையான புல்வெளிகள், பல்வகை மரங்கள் மற்றும் மாசுபடாத வனப்பகுதிகளால் நிறைந்துள்ள இந்த சரணாலயம் பல்வேறு வகையான மயில்களின் புகலிடமாக உள்ளது.
இந்த மலை மீது 15ம் நூற்றாண்டை சேர்ந்த சுப்ரமணியர் கோயில் உள்ளது.. சுமார் 2,000 வருடம் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன்.
இந்தப் பகுதி ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது. இப்போது இங்கு வெள்ளை மயில்கள், சாம்பல் நிற மயில்கள், பச்சை நிற மயில் என பல வகையான மயில் இனங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட மயில்கள் இந்த சரணாலயத்தில் வசிப்பதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இவை, அங்குள்ள பழங்கள், விதைகள், இலைகள், தேன், புழு, பூச்சிகள், தவளைகள், பாம்புகள் கரையான்களை உட்கொண்டு வாழ்கின்றன. இது தவிர முள்ளம்பன்றி உள்ளிட்ட பல வன உயிரினங்களையும் இங்கு காணலாம்.
விராலிமலை தவிர இங்கு குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. குமாரமலை, நர்த்தமலை, சித்தன்னவாசல், கொடும்பாளூர், குடுமியான்மலை ஆகியவை இங்கு பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“