நடையைப் பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை

நடை பொது இடத்தில் வெளிப்படும் ஒரு ரகசியம், தனிமனித ரகசியத்திற்குள் இருக்கும் ஒரு பொது உலகம்.....

By: Updated: December 23, 2019, 06:44:41 PM

நவீன வாழ்க்கை முறை நம்மை நடக்க உட்படுத்தவில்லை என்றாலும், ஏதோ இனம்புரியாத பயம் நித்தமும் நம்மை  நடக்கத் தூண்டுகிறது.

 

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

நம்மில் நடக்கும் பழக்கம் குறைந்துள்ளது என்பதை இங்கு நாம் அனைவரும் ஒருமித்த கருத்தாய் ஏற்றுக் கொள்கிறோம். குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங், மூன்று ரவுண்டு ஜாக்கிங், கையில் ஆப்பிள் இசிஜி வாட்ச், கார் இல்லாத சண்டே, கொழுப்புச் சத்து குறைக்கும் உணவு….. இவைகளே நடப்பதைப் பற்றிய கேள்விகளுக்கு பதில்களாய் உள்ளன.

நமது உடலுக்கு நடையின் பங்களிப்பு என்ன?’ என்ற கேள்விக்கு மட்டும் இந்த பதில் போதுமானதாக இருக்கலாம். ஆனால், நடையைப் பற்றிய கேள்விகளுக்கு இது பதிலாகாது . இன்றைய பூங்காக்கள் நமது நடையை பாதுகாக்கிறதே தவிர, நடையை பற்றிய கற்பனைகளை எழுப்புவதில்லை. நடையை இழந்துவிட்டோம் என்று ஒப்புக்கொண்டு நடைக்காக கட்டப்பட்ட ஒரு அருங்காட்சியகம் தான் இன்றைய பூங்கா. சாலையில் இழந்த நடையை நாம் சாலைகளில் தான் தேட வேண்டும்.

நடை என்பது  ஞாபகம் – மறதி என்ற பின்னலுக்கான சுழற்சி. ஞாபகமாக முன்னாடி ஒரு காலை எடுத்து வைக்கும் போது மறதியாக ஒருகால் பின்னாடி போகும். மறதி – ஞாபகம் இவைகளின் சுழற்சியே மனித நடை.

நன்மை, தீமை, உண்மை, பகைமை, மதவாதம், ஜாதி, சர்வதேசம், மாநிலம், நகரம், ஊராட்சி எல்லாம் நம் நடையால் உருவாக்கப்பட்டது.

இவற்றின் நியாபகங்கள் நமக்கு அழுத்தம் தருமானால், வன்முறையை தருமானால் இதற்கான மறதியையும் நம் நடையால் உருவாக்க வேண்டும். அனைத்து சமூக அறிவியலும் நமது நடையால் நித்தம் நித்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

நடை… வேகத்துக்கான இயல்பான எதிர்ப்பு. சமூகம் அதற்கான வேகத்தை அடையும் பொழுது, இளம் தலைமுறையினர்  நிதானத்தை மறுக்கும் பொழுது, ஒவ்வொரு முதியவர்களின் நடையும் ஒரு வகையான எதிர்ப்பு.

நடையின் ஒவ்வொரு அடியிலும்  ஒரு சமூகம், அரசியல் தடயங்கள் இருப்பதை நாம் உணர வேண்டும். நாம் நடந்து, நடந்து உருவாக்கிய சாலைகளில் பாலியல் வல்லுறவு , l g b t பாலியல் உறவுகள், அகதிகள், person with  disability போன்றோருக்கு பதில் சொல்ல தயங்கினால், அந்த சாலைகளை மறுசீரமைக்கும் வகையில் நமது நடை இருத்தல் வேண்டும்.

மனித நடை எப்போதும் மற்றவர்களுக்கானது. எல்லா நடைக்கும் ஏதோ ஒரு பார்வையாளர்களுக்காக இருந்தாக வேண்டும். தனிமனிதன் என்று யாருமில்லை, மனிதனுக்குள் தனிமைபடுத்தபட்ட ஒரு பொருளும் இல்லை என்பதன் வெளிப்பாடு நமது நடை. இன்னும் சுருங்கச் சொன்னால்,  நடை பொது இடத்தில் வெளிப்படும் ஒரு ரகசியம், தனிமனித ரகசியத்திற்குள் இருக்கும் ஒரு பொது உலகம் .

தேவைப்படும் அரசியல்:  

மனித உடல் முழுமையாக உருவான பின்பு நாம் நடக்க ஆரம்பிக்கவில்லை, மாறாக….என்றோ ஒரு காலத்தில் தொடங்கிய முதல் நகர்வு, முதல் நடை, முதல் தடுமாற்றம், முதல் மன இறுக்கம் போன்றவைகளால் தான் நமது உடல் முழுமையடைந்தது. உடலின் வெளிப்பாட்டில் நமது நடையில்லை, நடையின் ஓர் அன்பளிப்பு தான் மனித உடல் .

ஆனால், நமது சமூக அறிவியலும், அரசியல் சித்தாந்தங்களும் மனித உடலை (body politics) நோக்கியே கட்டமைக்கப்பட்டுள்ளன. நடையை தொப்பையைக் குறைக்கும் ஒரு கருவியாக மட்டும் காட்டப்படுகின்றன .

ஜிடிபி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிச் சான்றிதழ், இந்திய வரைபடம், வறுமைக் கோடு…..இவைகள் எல்லாம் ஒரு அரசு நிர்வாகத்தின் அடிப்படையான மொழி. எல்லாம் உடல் வழியான அரசியல் மொழி. உடலுக்கான மொழி. தலைநகரம், எல்லைக்கோடு, எதிரி நாடு, வெளியுறவுக் கொள்கை, மனித உடல் அரசியலாக்கப்பட்டதன் விளைவு.  நமது அரசியல் நகர்வைப்பற்றியதல்ல. ஒரு இடத்தைப் பற்றியது.

ஒருவேளை….

நமது அரசியல் நடையாக்கப்பட்டிருந்தால்? நடைக்கான அரசியலை நாம் உருவாக்கியிருந்தால்? மனிதர்கள் பூமிக்கும், வானுக்கும் இடையில் பயணிக்கும் நடைவாசிகள் என்ற உண்மையை நாம் முதன்மை படுத்தியிருந்தால், குடிமக்களும் ஒரு அகதிகளே, அகதிகளும் ஒரு குடிமக்களே என்ற உண்மையைக் கண்டறிந்திருந்தால்…… நான் யார்? நாம் யார்? நாங்கள் யார் ?  என்ற கேள்விகளோடு இந்திய ஜனநாயகத்தை நடக்க வைத்திருந்தால்……

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Walking is the yardstick for human existence walking and public sphere

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X