மன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்....

பிரேசிலில் இரண்டரை மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை என தெரிகிறது

இன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், தங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டர்களில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி…..! ஆம்! 1.30 மணியளவில் இருந்து சுமார் 1 மணி நேரம் சுத்தமாக வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை. இதனால், உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப்பியன்கள் அதிர்ச்சியடைய, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை வாட்ஸ்அப் சரிசெய்து வருவதாகவும் ஃபேஸ்புக்கில் தகவல்கள் தெறித்தன. இந்நிலையில், சில மணி நேரத்திற்கு பின், அதிகாலை 5 மணியளவில் வாட்ஸ் அப் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் தான் நம்மாளுங்க நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில், உலகம் முழுவதும் இன்று அதிகாலை சில மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்திய போது, ஏற்பட்ட இந்த இடையூருக்கு வருந்துகிறோம். இந்தப் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டு விட்டது” என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா, யுனைட்டட் ஸ்டேட்ஸ், கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தான் வாட்ஸ் இன்று அதிகாலை முடங்கியது. பிரேசிலில் இரண்டரை மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை என தெரிகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த முடக்கம்?

வாட்ஸ் அப் நிறுவனம், சோதனை முயற்சியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி, அண்மையில் தனது புதிய பதிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய பதிப்பினை விண்டோஸ் ஃபோன்களில் ‘டவுன்லோட்’ செய்யும்போது, ‘மீடியா கோப்பு’களை பெறுவதில் சிக்கல் உள்ளதாக அதன் பயனாளர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், மெசேஜ்களை அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக பரவலாக கூறப்பட்டது.

இதையடுத்து, பயனாளர்களின் குற்றச்சாட்டுகளின் விளைவாக, ‘வாட்ஸ் அப் பீட்டா 2.17.140’ எனும் பதிப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பதிப்பில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டிருக்கும் என நம்பப்பட்டது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை, எனவே இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு தெரிவித்திருந்தது.

இரண்டுநாட்களுக்கு முன், இப்படியோர் அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில் தான், இன்று (4.5.2017) அதிகாலை அதன் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close