தங்கள் திருமண நாளில் அழகாக இருக்க பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வெயிட்லாஸ் டயட் முயற்சிக்கின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் சுயமாக எடை குறைக்க முயற்சிப்பதால், கூடிய விரைவிலேயே பல உடல்நல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இன்னும் சிலர் என்ன நடந்தாலும் தங்கள் ஆரோக்கியம் குறித்து அக்கறைக் கொள்வதே இல்லை.
திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் ராஜலட்சுமி திருமணத்துக்கு முன் அவசியம் கடைபிடிக்க வேண்டிய டயட் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துக்கு அளித்த நேர்காணல் இங்கே..
திருமணத்துக்கு முன் டயட்
எப்போதும் பலரும் தங்கள் உடல்நலனில் அக்கறைக் கொள்வதில்லை. அதிலும் திருமணம் நிச்சயம் ஆன உடன் சில ஆண்களும், பெண்களும் 2, 3 மாதங்களுக்குள் எப்படி சீக்கிரம் உடல் எடை குறைப்பது, ஒரு நாளைக்கு எப்படி ஒரு கிலோ எடை குறைப்பது என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதில் பல ஆரோக்கிய சிக்கல் இருப்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
அந்த ஒருநாள் மட்டும் தான் அவர்கள் பார்க்கின்றனர். ஆனால் டயட் என்பது வாழ்க்கை முழுக்க வரக்கூடியது. இப்படி சீக்கிரம் உடல் எடை குறைப்பதால், திருமணத்துக்கு பிறகு முடி கொட்டுவது, சருமம் சுருங்கி மந்தமாவது. கருவளையங்கள் என பல பிரச்னைகள் வரும்.
மேலும் பத்திரிக்கை வைக்க போகும் போது நிறைய வீடுகளில் காபி குடிப்பதால், சரியாக உணவு எடுத்துக் கொள்வது கிடையாது. நிறைய தண்ணீர் குடிப்பது கிடையாது. அதனால் சிறுநீர் கழிப்பது உட்பட சீறுநீரக பாதை நோய்த் தொற்று வரலாம்.
எனவே அதற்கேற்ற மாதிரி திருமணத்துக்கு 3 மாதங்களுக்கு முன் அல்லது குறைந்தது 1 மாதத்துக்கு முன்னதாக என்னென்ன டயட் எடுக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்ட வேண்டும்.

உதாரணமாக நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் குறையாமல் தண்ணீர் உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியிருக்கலாம், நிறைய அலைச்சல் இருக்கும். எதுவாக இருந்தாலும் நேரத்துக்கு தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
வெளியில் தண்ணீர் குடிக்கும் போது Throat infection வரலாம். குறுகிய நாட்களில் திருமணம் நிச்சயம் ஆனவர்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், எப்போதும் கையில் வாட்டர் பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பானது.
உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போகும் இடங்களிலெல்லாம் சாப்பிடக் கூடாது. பெண்கள் இந்த நேரங்களில் பியூட்டி பார்லர் செல்லும் போது என பல நேரங்களில், அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுவதை மறந்து விடுகின்றனர். இரவு முழுவதும் போன் பேசுவதானால் டார்க் சர்க்கிள் வருகிறது. அதையெல்லாம் நாம் உணவு மூலமாக சரி செய்யலாம்.
திருமணத்துக்கு முன் என்னென்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம்?

நிறைய காய்கறிகள், சாலட், கூழ் மாதிரியான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
மாதுளை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், கரும்பு ஜூஸ், லெமன் சோடா, நன்னாரி சர்பத் குடிக்கலாம். அப்படி எதுவும் இல்லை என்றால் கம்மங்கூழ் கூட குடிக்கலாம். இதில் நிறைய நீர்ச்சத்து இருக்கிறது. இந்த நேரங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முடி வளர்ச்சியும் இருக்கும். இதை திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
என்னென்ன செய்யக்கூடாது?
வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது. வெளியில் சென்று பசியோடு வீட்டுக்கு வந்தவுடன் தட்டில் நிறைய சாப்பாடு வைத்து சாப்பிடுவோம். இது செய்யக்கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு சிப்ஸ், கார்பனேடட் டிரிங்ஸ், அதிக காரமான உணவுகள் இந்த நேரங்களில் அவசியம் தவிர்க்க வேண்டும்.
உணவு மூலம் பாலுணர்வு அதிகரிக்க
ஆண்களும், பெண்களும் பாலுணர்வு அதிகரிக்க நிறைய மீன் சாப்பிடலாம், ஆனால் எண்ணெய்யில் வறுக்காமல் குழம்பு வைத்து சாப்பிடுவது தான் நல்லது. சிப்பி மீன், கனவா, இறைச்சி மீன்களை சாப்பிடும் போது முகத்தில் நல்ல பொலிவு கிடைக்கும்.

அதிகம் மீன் சாப்பிடுவதால் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் மூலம் இந்த நேரங்களில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இது பிசிஓடி உள்ள பெண்களுக்கும் பொருந்தும். ஆடு, மாடு, பன்றி இறைச்சி சாப்பிட வேண்டாம். இதனால் உடல் எடை கூடும்.
திருமணம் முடிந்த பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருப்பார்கள். அதனால் உடல் எடை அதிகமாகும். மீன் சாப்பிடும் போது உடல் எடை கூடாது. பளபளப்பும் கிடைக்கும். மேலும் பிசிஓடி உள்பட அனைத்து பெண்களுக்கும் கருவுறுதலுக்கு இது உதவியாக இருக்கும்.
பழங்கள், காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். டீடாக்ஸ் டிரிங்ஸ் நீங்களே செய்து குடிக்கலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு இப்போது சீசனில் உள்ளது. இதுபோல சீசனில் கிடைக்கும் காய்கறிகள், மேலும் பூசணி, வெள்ளரி, தடியங்காய் போன்ற நீர்க் காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
இதனால் தண்ணீர் குறைவாக குடித்தாலும், இந்த நீர் காய்க்கறிகள் உடலின் நீர்ச்சத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
ஆண்கள் பேச்சுலர்ஸ் பார்ட்டி என்று மது அருந்துவது, புகைபிடிப்பது, ஃபிரைட் ரைஸ், புரோட்டா, எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வால்நட், பாதாம், வாழைப்பழம் மில்க் ஷேக் குடிக்கலாம். இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் டிரை ஃப்ரூட் ஸ்மூத்தி குடிப்பதால் பளபளப்பு நன்கு கிடைக்கும், முடியும் அதிகமாக வளரும்.
பீட்ரூட் சாப்பிடலாமா?
இந்த நேரங்களில் பலர் பீட்ரூட் ஜூஸ் குடிக்கின்றனர், இதனால் சீறுநீர் கூட பிங்க் நிறத்தில் போகிறது. அப்போது சிலர் பதட்டமாகி எங்களிடம் வருகின்றனர். அவர்களிடம் கேட்கும் போது பீட்ரூட் பச்சையாக சாப்பிட்டதாகவும், பீட்ருட் ஜூஸ் குடித்ததாக கூறுகின்றனர். முடிந்தவரை பீட்ரூட் மட்டும் தனியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
யூடியூபில் நிறைய வீடியோ இருக்கிறது. அதையெல்லாம் அப்படியே பின்பற்றக் கூடாது. எந்த அளவில் எடுக்கிறோம் என்பது முக்கியம். அரை பீட்ரூட் சாப்பிட்டால் நிறைய நிறம் வந்துவிடும் என நினைக்கின்றனர். கண்டிப்பாக அப்படி இல்லை. ஒரு துண்டு பீட்ரூட் மட்டும் போதும். எப்போதும் எதையும் அளவாக சாப்பிட வேண்டும். அளவு மீறி போகும் போதுதான் சீறுநீரக பிரச்சனை உள்பட பல சிக்கல்கள் வருகிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்கவும். இந்த நேரங்களில் அதிகம் வெயிலில் அலையாமல் வீட்டுக்குள் இருப்பது நல்லது. அதிகமாக கடையில் வாங்கி சாப்பிடாமல் வீட்டில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்று முடிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ராஜலட்சுமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“