scorecardresearch

ஆண்களுக்கு ஆப்பிள் உடல் அமைப்பு… பெண்களுக்கு பேரிக்காய் உடல் அமைப்பு… எடை குறைப்பு ஆலோசனைகள்!

பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று.

ஆண்களுக்கு ஆப்பிள் உடல் அமைப்பு… பெண்களுக்கு பேரிக்காய் உடல் அமைப்பு… எடை குறைப்பு ஆலோசனைகள்!
Things to keep in mind while losing weight

நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று என்றும் கேள்விப்பட்டிருப்போம்.

பொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? நவீன சிகிச்சைகள் என்ன?

‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.

சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.

அடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.

இன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி… வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி… வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.

இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.

பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

பொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி.

இப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்ன? இருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும்  இதயநோய்களுக்கு உடல் பருமனே  முக்கியகாரணமாகிறது.

லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து வயிற்றின் அளவை பாதியாகக் குறைத்துவிடலாம். வயிறு சிறிதாகும்போது தானாக பசி குறைந்து, அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் குறைந்துவிடும். கலோரிகள் குறைவதால், படிப்படியாக உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

உலகளவில் ஒருவருக்கு BMI 35 இருந்து ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது மூட்டுவலி போன்ற நோய் அறிகுறிகளுடன் இருந்தால் அவருக்கு உடல் எடைகுறைப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதுவே 40 BMI இருந்து, உடலில் எந்த நோயும் இல்லாதிருந்தாலும் அவருக்கு கண்டிப்பாக உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆனால், ஆசிய நாடுகளைப் பொருத்தவரை ஒருவருக்கு 35 BMI இருந்து ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அறுவை சிகிச்சையை செய்யலாம். ஒருவர் பார்ப்பதற்கு உடல்பருமனாக இல்லாவிட்டாலும் தொப்பை விழுந்து இருப்பார்கள். தொப்பை இருந்தாலே மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கும். எனவே, தொப்பை உள்ள ஒருவருக்கு வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை (Metabolic Surgery) செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தாலே இவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் தானாகவே சரியாகிவிடும். இதனாலேயே இப்போது இதை  உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை என்று சொல்வதில்லை. மெட்டபாலிக் அறுவை சிகிச்சை என்றே குறிப்பிடுகிறார்கள்.

‘ஒல்லியாகவும் 27 BMI இருப்பவர்களுக்கும் கூட நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற இருந்து தேவைப்பட்டால், மருத்துவமனையின் மறு ஆய்வுக்குழுவிற்கு விண்ணப்பித்து, அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு மெட்டபாலிக் அறுவை சிகிச்சை செய்யலாம்’ என உலக அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உடல்பருமன் இல்லாமல் சாதாரண எடையில் இருப்பவர்களுக்கும், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கள் இருந்தால் இந்த மெட்டபாலிக் அறுவை சிகிச்சை செய்து இரைப்பையின் அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியுமா என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

சிறுவர்கள் உடல்பருமன் நோய்க்கு(Child Obesity) உடல்பருமன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் அந்த நோயாளிக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதுவும் குழந்தைகள் நல நாளமில்லாச்சுரப்பி சிறப்பு மருத்துவர் ஒருவரின் அனுமதியோடுதான் செய்ய வேண்டும்.

முக்கியமாக இதையும் நினைவில் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை என்பது எடை குறைப்பு முயற்சியில் கடைசி கட்டம்தான். அதையும் சரியான மருத்துவமனையை/மருத்துவரைத் தேர்ந்தெடுத்தே கவனமாக செய்துகொள்ள வேண்டும். அதற்கு முந்தைய முயற்சிகளாக உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வேறு ஏதேனும் நோய் காரணிகள் போன்றவை இருந்தால் அவற்றை சரி செய்வது என ஆக்கப்பூர்வமாக ஆரம்பத்தில் முயல வேண்டும். இந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள விரும்பாமல் அறுவை சிகிச்சை மட்டுமே ஆபத்பாந்தவன் என்று எளிதாக நினைத்தால் அது பாதகமான விளைவுகளை உண்டாக்கும். இத்தகைய மனநிலை கொண்டவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளையும் பின்பற்ற விரும்பாதவர்களாகவே இருக்கலாம். எனவே கவனம்  தேவை

தகவல் உதவி

மருத்துவர் முத்துக்குமார்

 சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் 9344186480

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Weight loss tips things to keep in mind while losing weight