சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்தார், ரஜினி... இங்கிலாந்து டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம்

வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நவீன மருத்துவமனையை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த லைகாஹெல்த்-ன் கிளை நிறுவனமான வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனை சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவமனையின் வசதிகள் அனைத்தும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாடி கட்டடமான வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவமனையில், மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக 30 அறைகள் உள்ளன. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவரை உடனடியாக அணுக முடிவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் தனிப்பட்ட விஷயங்கள் பாதுகாக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி, பிசியோதெரபி, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குனரும், இணை நிறுவனருமான மண்ப்ரீட் எஸ் குலாடி கூறும்போது: எங்கள் மருத்துவமனையை நிறுவுவதற்கு சென்னையின் சூழல் அமைப்பானது தகுந்ததாக இருந்தது. அதனால் தான் இங்கு மருத்துவமனை நிறுவ திட்டமிட்டோம். மேலும், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வசதி இல்லாத மருத்துவமனைகள், இங்கு உள்ள உயர்தர சிகிச்சைக்கான வசதிகளை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று கூறினார். இங்கு பல் மருத்துவம், இருதய பிரிவு, மகளிருக்கான மருத்துவம், எலும்பு பிரிவு, கண் பிரிவு, அதிக எடைகொண்டவர்களுக்கான சிறப்பு மருத்துவம், நரம்பியல், சுவாச பிரச்சனை, பொதுவான சிகிச்சை மற்றும் வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார்.

இதேபோல மற்றொரு இணை நிறுவனரான கந்தையா கூறும்போது: சென்னையில் மருத்துவமனை நிறுவ வேண்டும் என 2001-ம் ஆண்டு முதலலே யோசிக்க தொடங்கிவிட்டோம். ஆனால், அதற்கு பின்னர் சென்னையின் சூழல் அமைப்பின் காரணமாக அந்த திட்டமானது கிடப்பில் போடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள நேஷனல் ஹெல்த் கேரில் பணியாற்றி வரும் மருத்துவர்களில், 60 சதவீதத்திற்கும் மேலானோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவ தொழிற்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புகின்றனர் என்று கூறினார். கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது சென்னையின் சூழல் அமைப்பானது தற்போது வெகுவாக மாறியுள்ளது. மேலும், நோயாளிகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வசதியும் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

தொடக்க விழாவில் ரஜியின் மனைவி லதா, இயக்குநர்கள் சங்கர், விஜய், லைக்கா குழும தலைவர் சுபாஷ்கரன், அவரது மனைவி பிரேமா, துணைத்தலைவர் பிரேம் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

×Close
×Close