வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (நேற்றுடன் ஆகஸ்ட் 5) முடிந்துவிட்டது. இதன் பின் வருமான வரி தாக்கல் செய்வோர், சில முக்கியமான அம்சங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யும் வரி தாக்கல் அனைத்துமே தாமதமாக தாக்கல் செய்யப்படுபவை என்ற பட்டியலில் இடம்பெறும்.
இவ்விதம் தாமதமாக தாக்கல் செய்வதால் ஏற்படும் பாதக அம்சங்களைப் பார்க்கலாம். தனி நபராக இருப்பின் வருமான வரிச் சட்டம் 139 (4)ன் படி கெடு தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யலாம்.
இவ்விதம் தாக்கல் செய்யும் வரித் தாக்கலானது குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது 2016-17-ம் ஆண்டுக்கான வரித் தாக்கலை மார்ச் 31, 2018-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது நடப்பு நிதி ஆண்டு (2017-18) மார்ச் மாதத்திற்குள்ளாக இருக்க வேண்டும்.
தாமதமாக தாக்கல் செய்தாலும் இதில் திருத்தம் செய்ய விரும்பினால் அவ்விதம் செய்வதற்கும் விதிமுறைகளில் அனுமதி உள்ளது. ஆனால் அது முந்தைய நிதி ஆண்டினுடையதாக இருக்கக் கூடாது. மேலும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கென வருமான வரி சட்டமானது முந்தைய நிதி ஆண்டுக்கானதை விட அதிக திருத்தங்களைக் கொண்டதாக இருக்கும்.
கால தாமதமாக வரி தாக்கல் செய்வதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை. ஆனால். தாமதமாக தாக்கல் செய்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இது ஏப்ரல் 2018 முதல்தான் அமலுக்கு வரும். இதனால் இந்த ஆண்டு தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால், தாமதமாக தாக்கல் செய்யும்போது இழப்பீடுகளுக்கு வரி நிவாரணம் கோர முடியாது என்பதே இதில் இருக்கும் சிறிய பிரச்சனை. இதில் வீடு உள்ளிட்ட சொத்து இழப்புகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், அனலைசிஸ் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம், முதலீட்டு ஆதாயம் உள்ளிட்ட பிற வருவாய் மூலம் ஏற்படும் நஷ்டத்துக்கு வரி விலக்கு கோர முடியாது.
வரி செலுத்த வேண்டியிருப்பின் உரிய காலத்தில் வரி தாக்கல் படிவம் செய்யாவிடில் செலுத்த வேண்டிய வரித் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.