ஃபேஸ்புக்-ஐ பயன்படுத்துபவர்களை எத்தனை வகைகளாக வேண்டுமானாலும் பிரிக்கலாம். வெறும் லைக் மட்டும் போடுபவர்கள், நாம் பதிவேற்றிய புகைப்படங்களுக்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கின்றன என நொடிக்கு ஒருமுறை எட்டிப்பார்த்து செல்பவர்கள், ஃபேஸ்புக்கில் இவர்களெல்லாம் இருக்கிறார்களா என யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வந்துவிட்டு உடனே ஓடிவிடுபவர்கள் என எல்லா வகைகளிலும் ஃபேஸ்புக் பயனாளிகளை பிரிக்கலாம். இதெல்லாம், நாம் எப்பவும் காமெடிக்காக சொல்வதுதான். ஆனால், ஃபேஸ்புக் பயனாளிகள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எவ்வாறு ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர், அவர்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் என அமெரிக்காவின் பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். இதுக்கெல்லாமா ஆராய்ச்சி என நினைக்கிறீர்களா? உண்மைதான். ஆராய்ச்சி முடிந்து ஃபேஸ்புக் பயனாளிகளை 4 வகைகளாக பிரித்திருக்கின்றனர். ஃபேஸ்புக்கிலேயே மூழ்கியிருப்பதை கொஞ்ச நேரம் ஒதுக்கிவிட்டு நீங்கள் எந்த ரகம்னு தெரிஞ்சிக்கோங்க.
1.உறவை மேம்படுத்துபவர்கள்:
ஃபேஸ்புக்-ல் இவர்கள் ரொம்ப ஆக்டிவ்-ஆக இருப்பார்கள். எதையாவது பதிவேற்றிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுடைய பதிவுகளுக்கு உடனேயே லைக்கிடுவார்கள். நாமெல்லாம் ஏதாவது பதிவேற்றியவுடன் ஓடிப்போய் முதலில் நமக்கு லைக்கிடுபவர்கள் இந்த ரகத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் உள்ள நண்பர்களை தன்னுடைய சொந்தங்களை போலவே கருதுவார்கள். ஃபேஸ்புக் மூலம் தங்கள் குடும்ப உறவை மேம்படுத்திப்பாங்க. ஃபேஸ்புக்கின் எல்லா அம்சங்களையும் பயன்படுத்த இந்த வகைக்காரர்கள் விரும்புவர். இப்படி செய்வது அவர்களுடைய குடும்பத்தினர் மீதான அன்பையும், காதலையும் பெருக்குவதாக கூட இவர்கள் நினைக்கின்றனர்.
2.அமைதி வகையறாக்கள்:
இந்த வகையறாக்கள், உண்மையான உலகத்தையும், ஃபேஸ்புக்கில் உள்ள விர்ச்சுவல் உலகத்தையும் இணைக்கத் தெரியாதவர்கள். அவர்களைப் பற்றி எதுவும் ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடாது என நினைப்பர். அவர்களுடையே நண்பர்கள் யாராவது அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு அவரை டேக் செய்தால் கூட டேக்கை எடுத்துவிட்டு, தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டதற்காக நண்பரையும் கடிந்துகொள்வாரே அவர்தான் இந்த ரகம். ஆனால், மற்றவர்களின் பதிவுகளை ஷேர் செய்தல், எந்த நிகழ்விற்கு செல்கிறோம் என தெரியப்படுத்துதல் இவற்றிலேயே குறியாக இருப்பார். அவரைப்பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் வெளியுலகத்திற்கு தெரியக்கூடாது என்பதில் குறியாக இருப்பர்.
3. சுயவிளம்பரதாரர்கள்:
புகைப்படத்தை பதிவேற்றியவுடன் நமக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறதென நொடிப்பொழுதுக்கு ஒருமுறை சோதனை செய்வார்களே அவர்கள் தான் இந்த ரகம். புகைப்படங்கள், கதைகள், வீடியோக்கள் என எதுவாக இருந்தாலும் மற்றவர்களை நாம் ஈர்க்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருப்பர்.
4. விண்டோ ஷாப்பிங் செய்பவர்கள்:
மால்களில் மட்டும் தான் விண்டோ ஷாப்பிங் செய்ய முடியும் என நினைக்கிறீர்களா? இல்லையே ஃபேஸ்புக்கிலும் செய்யலாம். அதாவது, அவர்களாக எதையுமே ஃபேஸ்புக்கில் செய்யமாட்டார்கள். அமைதியாக இருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக மட்டுமே ஃபேஸ்புக்கில் கால்வைப்பார்கள். ஃபேஸ்புக்கில் அவர்களுக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவர்களுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ், அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதில் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர்.
இவற்றில் நீங்கள் எந்த வகை?