இன்றைய காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளும், வாழும் முறைகளும் பெருமளவு மாறியிருக்கின்றன. துரித உணவுகளாலும், இயந்திரத்தனமான வாழ்க்கை முறையாலும் நமது உடலுக்கு எந்த விதமாத பணிகளையும் செய்யாமல் விட்டுவிடுகிறோம்.
இதனால், தசைகளுக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் மின்தூக்கிகளும், நகரும் படிகட்டுகளும் வந்துவிட்டன. உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கான உணவுகள் இருந்தாலும் நாம் நாவிற்கு ருசி தரும் வெளி உணவுகளை தேடி அலைகிறோம். ஐஸ் கிரீம், சாக்கலேட்டுகள் என இஷ்டத்துக்கு சாப்பிடுகிறோம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் கூட கைபேசிகளை வைத்துக் கொண்டு சதா விளையாடிக் கொண்டே இருக்கின்றனர்.
வேகமான வாழ்க்கையில் நாம் நடந்து போக வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் வாகனங்களின் துணை கட்டாயம் தேவைப்படுகிறது. இங்குதான் உடற்பயிற்சியின் அவசியம் முக்கியத்துவம் பெறுகிறது.
உடற்பயிற்சியின் அவசியம் குறித்து சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் சதீஷ் கூறியதாவது:
திருப்பதி கோயிலுக்கு மலை ஏறி நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடன் வந்த 2 பேருக்கு மறுநாள் கால்களில் வலியே இல்லை என்று சொல்கிறார்கள். 2 பேர் படுபயங்கரமான வலியாய் இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதில், யாருக்கு உடல்தகுதி இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். கால் வலி இல்லை என்று கூறியவர்களுக்குதான் முழு உடல் தகுதி இருக்கிறது.
அப்படியென்றால் அவர்களின் கால் தசைகள் வலிமையாக இருக்கின்றன என்று அர்த்தம் கொள்ளலாம்.
எஞ்சிய 2 பேருக்கு அவர்களின் கால் தசைகள் போதிய வலிமை இன்றி இருக்கின்றன. இதனால், அவர்களுக்குள் நம்மால் இதை கூட செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் தோன்றும். அவர்களுக்கு தேவை முழு உடல் தகுதி. அதற்கு அவர் செய்ய வேண்டியது தினமும் உடற்பயிற்சி.
நீங்கள் ஒரு குத்துச்சண்டை வீரராக ஆக போகிறீர்கள் என்றால் உங்களுக்கு குத்துச்சண்டை உத்திகளுடன் முழு உடல் தகுதியும் அவசியமாகிறது.
குத்துச்சண்டை எப்படி என்று தெரிந்துகொண்டுவிட்டால் மட்டும் போதாது. முழு உடல் தகுதி இருந்தால் மட்டுமே எதிராளியை ரிங்கில் உங்களால் சமாளிக்க முடியும்.
இப்படி விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கும் உடற்பயிற்சி அவசியமமாகிறது.
விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, இன்றைய இளைஞர்களும் உடற்பயிற்சி செய்வதை தினமும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
நல்ல உடற்பயிற்சி கூடத்தை தேர்வு செய்து சிறந்த பயிற்சியாளர்களிடம் உடற்பயிற்சிகளை கற்றறிந்து பின்னர் அதை தினமும் செய்து வந்தால் முழு உடல் தகுதியுடன் ஆரோக்கியமாக நீங்கள் இருப்பீர்கள என்று அவர் தெரிவித்தார்.
உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
- மன ரீதியாகவும், உடல் ரீதியாகவவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- எதிர்மறை எண்ணங்களையும், கவலைகளையும் தீர்த்துவிடும்.
- நல்ல தூக்கமும் வரும்.
- மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
- உங்கள் உடல் எடையை ஒரே சீரான நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.
- ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்.
- நீரிழிவு மற்றும் சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும்.
- ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும்.
- எலும்புகள், தசைகள் வலிமையாக இருக்கும்.
- மன நிலை நன்றாக இருக்கும்.
கொரோனா காலகட்டத்தில் ஜிம் செல்வதைக் காட்டிலும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதை பற்றி கூட யோசிக்கலாமே...!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“