ஆர்வமுடன் இளைஞர்களும், இளம்பெண்களும் ஜிம்மில் சேரும் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது.
உடல் உழைப்பு இல்லாமல் அனைவரும் உட்கார்ந்த இடத்தில் கம்ப்யூட்டரை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கி, பல்வேறு உடல் உபாதைகளுக்கு இட்டுச் செல்கிறது.
இதை அறிந்துகொண்ட இளம் சமுதாயத்தினர் ஜிம்மிற்கு செல்வதை ஃபேஷனாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் பணத்தை செலுத்தி நாம் ஜிம்மில் சேர்ந்துவிடுவோம். ஆனால், அதன் பிறகும், பர்சனல் டிரைனிங் தேவை என்றால் தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று ஜிம் நிர்வாகம் கூறும்.
அனைத்து உடற்பயிற்சிகளும் செய்யத் தெரிந்து விட்டால் பிரச்சனை இல்லை. உடற்பயிற்சிகள் செய்யவே தெரியாது என்பவர்களும், உடற்பயிற்சி கூடங்களில் இருக்கும் உபகரணங்களை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் இருப்பவர்களும் மறுபடியும் பணத்தை செலவழித்து பர்சனல் டிரைனர் வைத்துக் கொள்ள வேண்டியது வரும்.
உண்மையில் பர்சனல் டிரைனர் ஜிம் செல்பவர்களுக்கு தேவை தானா? அவர்களின் பணி ஜிம்மில் எப்படி இருக்கும்? பணத்தை செலவு செய்து பர்சனல் டிரைனர் வைத்துக் கொள்வதால் என்ன நமக்கு என்ன லாபம்? இந்தக் கேள்விகளை சென்னையில் பிரபல உடற்பயிற்சி கூடத்தில் பர்சனல் டிரைனராக இருக்கும் சதீஷிடம் முன்வைத்தோம்.
இனி அவரது வார்த்தைகளிலிருந்து…
ஜிம்மில் பர்சனல் டிரைனர் தேவையா என்றால் தேவை என்று சொல்லலாம். அனைவரும் பர்சனல் டிரைனரை நியமித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமா என்று கேட்டால் இல்லை என்றே கூறுவேன்.
பர்சனல் டிரைனர் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று சொல்கிறேன். நானும் ஒரு பர்சனல் டிரைனர் என்பதால் என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். ஜிம்மில் நீங்களாக உடற்பயிற்சி செய்யும்போது பல விஷயங்களை கவனிக்காமல் போக வாய்ப்பு உண்டு. அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் தவறாக செய்யவும் வாய்ப்புள்ளது.

ஆனால், பர்சனல் டிரைனர் வைத்துக் கொண்டீர்கள் என்றால் அவரே உங்களுக்கு எப்படி சரியான முறையில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தருவார். அத்துடன், அருகில் இருந்து நீங்கள் எப்படி உடற்பயிற்சிகளை செய்கிறீர்கள் என்றும் பார்ப்பார்.
உடற்பயிற்சி செய்யும்போது தவறுகளை செய்தீர்கள் என்றால் அதை உடனடியாக சரி செய்வார். இதன்மூலம் உங்களுக்கு ஓர் உற்சாகம் கிடைக்கும். நீங்கள் சரியாக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்ற நம்பிக்கையும் ஏற்படும்.
தவறாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசைப்பிடிப்பு போன்றவற்றையும் நீங்கள் தவிர்க்கலாம்.
இதுமட்டுமல்லாமல், ஜிம் டிரைனர் உங்களது உடல் எடையை தொடர்ந்து கண்காணித்து வருவார். சாப்பிட வேண்டிய உணவுப் பட்டியலை தருவார். அது ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஊட்டச்சத்து நிபுணரின் உதவியுடன் உணவுப் பட்டியலை மாற்றித் தருவார்.
பர்சனல் டிரைனர் இல்லாமல் என்னால் ஜிம்மில் சரியாக உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அப்படியும் சொல்லிவிட முடியாது.
உடற்பயிற்சியைப் பொருத்தவரை நீங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்படுவீர்கள். அந்த இலக்கை அடைந்தவுடன் அடுத்து ஒரு இலக்கை தீர்மானிப்பீர்கள். இவ்வாறு செயல்படும்போது உங்களுக்கு பர்சனல் டிரைனரின் துணை நிச்சயம் தேவைப்படும்.

பலருக்கும் பர்சனல் டிரைனராக ஒருவர் இருக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு என்று ஒரு மணி நேரத்தை குறிப்பிட்ட பர்சனல் டிரைனர் தேவை என்று உங்கள் ஜிம்மில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவரால் உங்கள் மீது தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்க முடியும். குடும்ப மருத்துவர் இருப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
ஒவ்வொரு முறை ஒவ்வொரு டாக்டரை பார்த்தோம் என்றால் அவர்களுக்கு நமது உடல்நிலை குறித்து ஒன்றும் தெரியாது. ஆனால், ஒரே டாக்டரிடம் வழக்கமாக சென்று வந்தால் நமது உடல்நிலை குறித்து அவர்களுக்கு எல்லாம் தெரியும்.
இதேபோன்றுதான் ஒரு பர்சனல் டிரைனர் இருந்தால் உங்களின் குறை நிறைகளை கவனித்து உங்களுக்கு தேவையான உடற்பயிற்சி திட்டங்களை வகுத்து உங்கள் உடலை வலிமையாக்குவார்
இல்லை, என்னால் பர்சனல் டிரைனிங் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வசதி கிடையாது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: மிருதுவான சருமத்துக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய ஹோம்மேட் மாய்ஸ்சரைசர்.. ரொம்ப சிம்பிள் தான்!
அனைத்து ஜிம்களிலும் ஒரு சில பயிற்சியாளர்கள் புதிதாக வருபவர்களுக்கு உடற்பயிற்சிகளை கற்றுத் தர இருப்பார்கள். அவரிடம் உங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். முடிந்த வரை பர்சனல் டிரைனர் வைத்துக் கொள்வது சிறந்தது என்பதே எனது கருத்து என்று முடித்தார் சதீஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“