International Women’s Day 2019: நிறைய விஷயங்களில் ஆணை விட பெண் உறுதியானவள் என்பதை பலரும் தங்களது சொந்த வாழ்க்கையிலேயே உணர்ந்திருப்பீர்கள்.
அனைத்து உயிரினங்களிலும் பெண்களுக்கே பொறுப்பும் கடமையும் அதிகம். தாய்வழி சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது தான் நமது கலாச்சாரம். அதனாலோ என்னவோ, அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன் ஆகியவற்றை இயற்கையே பெண்களுக்கு தகவமைத்திருக்கிறது. இந்த நுணுக்கத்தினால், ஆணை விட பெண் பல விஷயங்களில் மேம்பட்டவளாக செயல்படுகிறாள்.
ஆதிகால பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கியதாகவும், அவளே தனது கூட்டத்தை வழி நடத்திச் சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.
இங்கு பெரும்பாலான ஆண்கள், வெளி அதிகாரத்தில் வேண்டுமானால் பொறுப்பில் இருக்கலாம். ஆனால் குடும்ப நிர்வாகத்தைப் பொறுத்தவரை, தாயாக, மனைவியாக பெண் தான் முதன்மையானவளாக இருக்கிறாள்.
காரணம் பெண் உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த வலிமை கொண்டவள். உதாரணமாக, நம் வீட்டு ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த வீடே ரெண்டாகி விடும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். சாதாரண காய்ச்சலையே தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய கஷ்டங்களை வார்த்தையாக, வீட்டுப் பெண்கள் மீது அள்ளி வீசுவார்கள்.
ஆனால் பெண்கள், தனக்கு எத்தனை கஷ்டமான நிலையில் உடல் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், தனது கணவருக்கும் குழந்தைகளுக்கும் பணிவிடை செய்துக் கொண்டிருப்பார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் ஓய்வெடுக்காமல், ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருப்பார்கள்.
அதே போல் பெண்களின் மன உறுதியையும் அவ்வளவு லேசாக எடை போட்டு விட முடியாது. காரணம், சாதாரண அலுவலக பிரச்னைகளையே தன்னுள் வைத்திருக்க தெரியாமல், வீட்டிலிருப்போரிடம் காட்டும் ஆண்கள் மத்தியில் பெண்கள் தங்களின் சுற்றத்தாரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒரு சீரியஸான பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனை சற்று பொறுமையாக உங்கள் அம்மா, சகோதரி அல்லது மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். அதற்கான உடனடி தீர்வை ’கூலாக’ கூறுவார்கள். சில சமயம் உங்கள் மகள் கூட உங்களுக்கு வழிகாட்டியாய் மாறி ’ஸ்கோர்’ செய்வாள். ஏனெனில் பிரச்னைகளை தீர்க்கும் பக்குவம் பெண்களின் ஜீனிலேயே இருக்கிறது.
வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட ஒரு பெண் தனது மண வாழ்க்கையில் தோல்வி காண்கிறாள் என எடுத்துக் கொள்வோம். கொஞ்ச நாள் அவள் தன் வாழ்க்கையை எண்ணி விசும்புவாள். பிறகு கல்வி, வேலை, பிஸினெஸ் என தனக்கென ஒரு பாதையை முடிவு செய்துக் கொண்டு விஸ்வரூபமெடுப்பாள். இப்படியான பல பெண்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். காரணம் அவர்களது மன உறுதியும், இனி அழுது பயனில்லை என்ற புரிதலும் தான்!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு, படிப்பு, வேலை என பலர் சிறகு விரித்துப் பறக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கு கேள்விக்குறியே. இருப்பினும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதால் தான், அவர்கள் மீண்டும் அடுப்பூத செல்லாமல், புத்தகத்தைப் புரட்டுகிறார்கள்.
அந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று பெண்கள் பல சாதனைகளை செய்து வருகிறார்கள். அந்த சாதனைக்குப் பின், தந்தை, சகோதரன், கணவர் என ஆண்களின் பங்கும் இருப்பதை மறுக்க முடியாது.
உங்கள் வீட்டுப் பெண்களை மகிழ்விக்க மகளிர் தினம் கொண்டாட வேண்டாம், மகளிரை (அவர்களை) தினம் கொண்டாடுங்கள். அது போதும், அவர்கள் இன்னும் பல கோடி மைல் தூரம் பயணிக்க!