ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு: ஆய்வு சொல்கிறது

பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையைவிட சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சி இதழ் ஒன்றில் வெளியான ஆய்வு ஒன்றில் நிரூபணமாகியுள்ளது.

பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையைவிட சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக ஒரு செயலை உற்றுநோக்கல், மனநிலை, பதட்டம் உள்ளிட்ட உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பெண்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அல்சைமர் எனும் மறதிநோய் குறித்த இதழ் ஒன்றில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஆண், பெண் இருபாலர்களும் அடங்கிய 46,034 பேரின் மூளை செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண் மற்றும் ஆண் மூளையின் செயல்பாடுகளில் அளவிடக்கூடிய அளவில் வேறுபாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

“பாலினம் அடிப்படையில் மூளையின் வேறுபாடுகளை புரிந்துக்கொள்ள இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்களின் மூளையில் அளவிடத்தக்க மாறுதல்கள் இருப்பதாக தெரியவந்திருப்பதன் மூலம், அல்சைமர் உள்ளிட்ட மூளைக்கோளாறுகளை பாலினம் அடிப்படையில் புரிந்துக்கொள்ள முடியும்.”, என ஆராய்ச்சியாளர் டானியல் ஆமென் தெரிவித்தார்.

பெண்களின் முன்பக்க மூளை (prefrontal cortex) ஆண்களைவிட அதிவேகமாக செயல்படும்போது, செயல்பாடுகளை உற்றுநோக்கல் திறனில் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. பெண்களின் முன்பக்க மூளையில் ரத்த ஓட்டம் ஆண்களை விட வேகமாக இருப்பதால், பெண்களிடம் பச்சாதாபம், உள்ளுணர்வு, சுயக்கட்டுப்பாடு உள்ளிட்டவை அதிகமாக காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது. அதேபோல், மூளையில் உள்ள லிம்பிக் அதாவது, உணர்வுப்பகுதிகளைகொண்ட பகுதிகளில் பெண்களில் ரத்த ஒட்டம் ஆண்களைவிட அதிகரிக்கும்போது மனநிலை மற்றும் பதட்டம் உள்ளிட்ட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், மன அழுத்தம், தூக்க பிரச்சனை, உணவு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூளையில் பார்வை மற்றும் ஒத்துழைப்பு பகுதிகள் ஆண்களிடம் அதிவேகமாக செயல்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்விற்காக மூளையின் 128 மண்டலங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

பெண்கள் அதிகமாக அல்சைமர் எனப்படும் மறதி நோய், மன அழுத்தம், மதற்றமான மனநிலை உள்ளிட்டவற்றிற்கு பாதிக்கப்படுகின்றனர். அவற்றை புரிந்துக்கொள்ள இந்த ஆய்வு பயனுள்ளதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close