2017-ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை உலக பொருளாதார கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்தியா 21 இடங்கள் பின்தள்ளி 108-வது இடத்தைப் பிடித்தது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமே இதற்கு காரணம் எனவும், அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கையின் முடிவுகள் பாலின சமத்துவத்தை அடைய நூற்றாண்டுகள் கடக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பணியிடங்களில் ஆண்கள் பெறும் சம்பளத்திற்கு சரிசமமாக பெண்களும் சம்பாதிக்கவும், பிரதிநிதித்துவம் பெறவும், 217 ஆண்டுகளாகும் என, அதே ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் எல்லா துறைகளிலும் தங்கள் முத்திரையை பதித்தாலும், அவர்களுக்கு ஆண்களைவிட குறைந்த ஊதியமும், பிரதிநிதித்துவமுமே தரப்படுகிறது. கூலி பெண் தொழிலாளிகள் முதல் ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் வரை இதே நிலைமைதான் நீடிக்கிறது.
கடந்தாண்டு உலக பொருளாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆண்களைபோல் பெண்களும் சமமாக சம்பாதிக்க 170 ஆண்டுகளாகும் என கணித்தது. ஆனால், இந்தாண்டு 217 ஆண்டுகளாகும் என கணித்திருப்பது பாலின சமத்துவம் மிக மோசமான நிலைமையை அடைந்துகொண்டிருப்பதையே காட்டுகிறது.
“படித்த, திறனுள்ள பெண்கள் பலர் இருந்தாலும், அவர்களை பணிக்கு எடுக்கவும், அவர்களை தக்க வைத்துக்கொள்ளவும் பல நிறுவனங்கள் தோ.ந்ல்வியடைந்துள்ளன”, என அந்த ஆராய்ச்சி கூறுகிறது.
பணியிடங்களில் சமத்துவ நிலையை அடைவதில் மிகப்பெரும் இடைவெளி உள்ள நிலையில், பெண்கள் அரசியலில் அதிகாரத்துவம் பெறுவதற்கு 99 ஆண்டுகள் ஆகும் என அந்த ஆராய்ச்சி கூறுகிறது.