தாய்மைக்கு அர்த்தம் சொல்ல வேண்டிய கடமையில் நாம் இங்கு இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வெனும் பள்ளம் ஒன்று உள்ளது. அது ஆணாக இருந்தாலும் சரி..பெண்ணாக இருந்தாலும் சரி. ஆண் அந்த பள்ளத்தைத் தாண்ட பல காரணங்கள் இருந்தாலும், பெண்ணுக்கு இரண்டே காரணம் தான். எப்போது அவள் திருமணம் செய்கிறாளோ அப்போது அந்த பள்ளத்தில் பாதியை தாண்டிவிடுகிறாள். எப்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளோ அப்போது தான் முழுமையாக தன் வாழ்வில் முற்றுப்பெறுகிறாள்.
ஆனால், அந்த தாய்மையின் வலியையும், வேதனையையும் சில ஆண்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது அந்த பிரசவ வலியை விட வேதனையானது. ஒரு பெண் கர்ப்பம் கொண்ட பின், எத்தனை கணவன்மார்களுக்கு மனைவி அருகிலிருந்து பார்த்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் கிட்டுகிறது? இந்தக் கேள்வியை சமாளிக்க ஆண்களிடம் பல காரணங்கள் இருந்தாலும், அவள் மனமும், உடலும் கணவன் துணையைத் தான் தேடும்.
கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், புதிதாக உருவாகியுள்ள அந்தக் கருவை பாதுகாக்க வேண்டியது அவ்வளவு முக்கியம். அவள் ஓடவோ, குனிந்து கனமான பொருட்களை தூக்கவோ, மாடிப்படிகளில் அதிகம் ஏறி இறங்கவோ கூடாது. அவள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவளை கனமான வேலைகளை செய்ய விடக் கூடாது.
இந்தக் காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு இரத்தப்போக்கு எனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த இரத்தப்போக்கு என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. முதல் மூன்று மாத கர்ப்பக் காலத்தில் ஒரு முறைக்கும் மேல் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கரு கலைந்து போகும் அளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தும். அதற்காகத் தான் இந்த காலத்தில் அவள் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என சொல்கிறார்கள்.
இந்த நேரங்களில் நிச்சயம் கணவன், அருகிலிருந்து பார்த்துக் கொள்வது முக்கியம். என்னதான் கருவுற்ற பெண்ணின் தாய், கணவனை விட நன்றாக கவனித்துக் கொண்டாலும், அவள் மனம் என்னவோ கணவனைத் தான் நாடும். அந்த உணர்வை நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கருவுற்றலின் போது செக்ஸ் கொள்ளலாமா?
இது லட்சம் தம்பதிகளின் மனதில் தோன்றும் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமெனில்.. ஆம்! உறவு கொள்ளலாம். ஒரு பெண் கருவுற்ற பின் எப்போது வேண்டுமானாலும் தன் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவளது உடல்நிலையைப் பொறுத்தது. அதாவது, நாம் மேற்கூறியபடி 'இரத்தப்போக்கு' போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் தங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது. இதில் மிகுந்த கவனம் தேவை.
கருவுறுதல் மற்றும் மலட்டுத்தன்மை குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு அறிக்கையின்படி, திருமணமான பெண்களின் கணவருக்கு 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், அவரது மனைவியின் கருவுறுதல் வாய்ப்பு குறையும் என தெரியவந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், 25 வயது இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நாட்களை விட அவர்களுக்கு 5 மடங்கு அதிக நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவுறும் வாய்ப்பும் 23% - 38% குறைய நேரிடுமாம்.
எனவே, வாழ்க்கையில் சரியான நேரத்தில் திருமணம் செய்து, அவளை சரியாக கவனித்து, சரியான நேரத்தில் குழந்தையைப் பெற்றெடுங்கள். ஆனால் , அதை சரியாக வளர்க்கவில்லை எனும் தவறை செய்துவிடாதீர்கள்.