World AIDS Day 2022 | How to prevent HIV AIDS | உலக எய்ட்ஸ் தினம் 2022 | மக்களிடையே எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து ‘சமப்படுத்துதல்’ ஆகும்.
எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசால் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எச்ஐவி தொற்றின் சதவீதம் 2010-11 ஆம் ஆண்டு 0.38 சதவீதத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு 0.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் எப்படி வருகிறது?
எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூலமே எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு, இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலில் நிரந்தரப் பாதிப்பு ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்குப் பரவுதல் என மூன்று நிலைகளில் பரவுகிறது.

எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அந்த நோயின் அறிகுறிகள் பெரிதாக தெரியாது. இந்த அறிகுறிகளைப் பாதிக்கப்பட்டவர் உணரும்போது, அவர் ஆபத்துக் கட்டத்தை எட்டியிருப்பார். இதன் காரணமாகவே எய்ட்ஸ் மரணங்கள் முன்பு உலக அளவில் அதிகமாக இருந்தன. ஆனால் தொடர் விழிப்புணர்வு, சிகிச்சை முறைகள் போன்றவற்றால், எய்ட்ஸ் நோய் மரணங்கள் இப்போது குறைந்துள்ளன.
எச்.ஐ.வி. தொற்றை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், ‘ஏ.ஆர்.டி.’ (ART) என்று சொல்லப்படும் ‘ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி’ எனும் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சையை மேற்கொண்டாலே எந்த நோயும் அண்டாமல் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும்.
இந்தியாவிலே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தான் எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் எச்.ஐ.வி., உள்ளவர்களை கண்டறிந்து சிறந்த சிகிச்சை வழங்கிட 2,163 நம்பிக்கை மையங்கள், 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு சிகிச்சை மையங்கள் மற்றும் கட்டணமில்லா சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு சென்று எச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்ளலாம். எச்.ஐ.வி., பாதிப்பு உறுதியானால் அரசு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இதனிடையே உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“