World Music Day 2021 Celebrations Tamil News : இசை – நம் உணர்வுகளின் வெளிப்பாடு. கை கால்களைத் தட்டியும், விலங்குகளின் எலும்புகளால் உருவான குழலை இசைத்தும் மகிழ்ந்த நியண்டர்தால் மனிதர்கள் முதல் ஸ்ட்ரிங், பெர்குஷன் என எண்ணிலடங்கா பரிமாண வளர்ச்சி பெற்றிருக்கும் தற்போதைய 2k கிட்ஸ் உபயோகிக்கும் இசைக்கருவிகள் வரை இசைக்குத்தான் எத்தனை உருவங்கள்? ஒருவகையில் மௌனம் கூட ஆழமான அழகான இசைதானே.
பறை, நாட்டுப்புறம், கர்னாடிக், ஹிந்துஸ்தானி, பஜன், பாப், ஜாஸ் என வெவ்வேறு மொழிகளில் எங்கேயும் எப்போதும் மனிதனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இசைதான். சந்தோஷம், சோகம், வீரம், துரோகம், பாவம், ரௌத்திரம் என நம் ஆழ் மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் இந்த அத்தனை உணர்வுகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது இசைக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
இப்படிப்பட்ட ஈடு இணையில்லா இசையின் ஆழத்தை நன்கு உணர்ந்திருந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதியான ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் ஆகிய இருவரும், நம் வாழ்வைக் கொண்டாட வைக்கும் இசையை மனிதர்கள் கொண்டாட வேண்டும் என எண்ணி இந்த உலக இசை நாளை பரிந்துரைத்தனர். அந்த வகையில், 1982-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பாரிஸில் முதல் ‘இசை நாள்’ கொண்டாடப்பட்டது.
இசையைக் கேட்பதனால், சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் டோபமைன் ஹார்மோன் வெளிப்படுகிறது. அதுமட்டுமின்றி, மனஅழுத்தம், மனசோர்வையும் குறைக்கச் செய்கிறது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக இசையைக் கேட்டால், அவர்களுக்குள் பதட்டம் குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வளவு ஏன், எப்போதும் இசையைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்குமாம். இதுபோன்ற நன்மைகளை உலகிற்கு தெரியப்படுத்தவும் இந்த இசை நாள் கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட இசையை நாமும் கொண்டாட வேண்டாமா? கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி என இந்தியாவில் எத்தனை வகையான இசை இருந்தாலும், சாமானிய மக்களையும் சுண்டி இழுப்பது நாட்டுப்புற இசையும் திரை இசையும்தான். கிராமங்களில் வயல்வெளிகளில் வேலை செய்யும்போது, தங்கள் வாழ்க்கைமுறை, காதல் என அத்தனை உணர்வுகளையும் சொந்த வரிகளில் ஒன்றுகூடிப் பாடும்போது, களைப்பாவது வேர்வையாவது!
அந்த வரிசையில் இசைஞானி இளையராஜா ஏராளமான தெம்மாங்கு பாடல்களைத் திரையிசையில் கொண்டு வந்திருப்பார். குறிப்பாக, ‘என ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ’, ‘சோறு கொண்டு போற புள்ள’, ‘சம்பா நாத்து சார காத்து’, ‘ஊருக்கு தெக்கிட்டு ஒத்தையில மரம்’ உள்ளிட்டவை எல்லோரையும் முணுமுணுக்க வைத்த பாடல்கள்.
எம்.எஸ் விஸ்வநாதன், மஹாதேவன், இளையராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், இம்மான், ஜி.வி.பிரகாஷ், தேவா, தீனா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட எண்ணிலடங்கா இசையமைப்பாளர்கள், தமிழ்நாட்டு மக்களுக்குப் பரிசளித்த லட்சக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடல்கள் என்பதைவிட உணர்வுகள் என்றுதான் சொல்லவேண்டும். ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘என்ன அழகு எத்தனை அழகு’, ‘ஒரு ஊரில் அழகே உருவாய்’, ‘அழகோ அழகு அவள் கண் அழகு’, ‘பெண்ணே நீயும் பெண்ணா’ எனப் பெண்மையை இதைவிட யாரால் ரசித்திட முடியும் என்கிற அளவிற்கு வரிகள். அதனை மெருகேற்றிய இசை கொள்ளையழகு.
மனசோர்வு ஏற்படும்போதெல்லாம், ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, ‘கண் போன போக்கிலே’, ‘மயக்கமா கலக்கமா’, ‘பறவையே எங்கு இருக்கிறாய்’, ‘ஒரு நாளில் வாழ்க்கை இங்கே’ என எத்தனை தத்துவப் பாடல்கள் நம்மைக் கரை தேற்றிவிட்டிருக்கின்றன. இசை பற்றிச் சொல்லவேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம்.
காலையில் நம்மை எழுப்பும் கடிகார ஓசை முதல் இரவு விளக்கணைக்கும் சத்தம் வரை நம் வாழ்க்கையே ஓர் இசைப்பயணம்தான். அன்பு, அரசியல், காதல், காதல் தோல்வி, தனிமை, வாழ்த்து என மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் அதனை மீண்டும் மீண்டும் கேட்டு இளைப்பாறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இனிய உலக இசை தின வாழ்த்துகள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil