10 வயதில் 192 கிலோ எடை... பருமனால் அவதிப்படும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை!

அந்த சிறுவன் தினமும் 5 வேளை உணவு எடுத்துக்கொள்கிறான்

இந்தோனேஷியாவில் உள்ள ஆர்யா பெர்மனா என்ற சிறுவன் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக கருதப்படுகிறான். 10 வயதே ஆகும் அந்த சிறுவனின் எடை நம்பமுடியாத அளவிற்கு 192 கிலோவாகும். அந்த சிறுவன் தினமும் 5 முறை உணவு எடுத்துக்கொள்கிறான். உணவில் சாதம், மாமிசம், மீன் துரித உணவான நூடுல்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதோடு, அதனுடன் சேர்த்து கோலா எனப்படும் பானத்தையும் அதிக அளவு அருந்தி வருகிறானாம்.

இந்த தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் பருமன் காரணமாக அந்த சிறுவனால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. இந்த சிறுவனை பார்ப்பதற்காகவே அவனது வீட்டில் பெரும் கூட்டமும் அங்கு கூடிவிடுமாம். இந்நிலையில், அந்த சிறுவனின் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மிர்ரர் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பெர்மனாவின் வழக்கத்திற்கு மாறான அதிக எடை காரணமாக, அவனால் நடக்கக்கூட முடிவதில்லை. அந்த சிறுவனுக்கு ஆடை வாங்குவதற்கு அவனது பெற்றோர் திண்டாடி வருகின்றனர். அந்த சிறுவனின் தந்தை அடெ சோமன்ரி, தாய் ரோகாயா ஆகியார் தனது மகனை இயல்பான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவனை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே அந்த சிறுவனின் எடையை குறைப்பதற்காக பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே அடங்கிய டயட்டை அளித்து வந்தனர். ஆனாலும், அதில் குறிப்பிடும் படியான பெரிய வித்தியாசம் ஏதும் ஏற்படவில்லை. இந்த டயட் மூலமாக அந்த சிறுவனின் எடை வெறும் 6 கிலோ மட்டுமே குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அந்த சிறுவனுக்கு இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிக்ச்சையின் போது அந்த சிறுவனுடைய இரைப்பையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சிறுவனால் முன்புபோல அதிக உணவை எடுத்துக்கொள்ள முடியாது. இரைப்பையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் குறைவான அளவு உணவே எடுத்துக்கொள்ள முடியும். இதனால், சிறுவனின் எடை விரைவில் குறையலாம் என கூறப்படுகிறது. மேலும், பசியைத் தூண்டக் கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனின் சுரப்பையும் கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சிறுவனுக்கு பசியெடுக்கும் தன்மை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பெர்மனாவின் எடை கடந்த இரு வாரங்களில் 16 கிலோ குறைந்துள்ளதாம். எனினும் தினமும் 5 வேளை உணவு எடுத்துக்கொண்ட போதிலும், சிறுவனுக்கு அடிக்கடி பசி எடுக்கத் தான் செய்கிறது.

இது தொடர்பாக சிறுவனின் தாய் கூறும்போது: பெர்மனாவின் எடை தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைந்துள்ளது. ஆனாலும், அவனது வயதில் இந்த எடை மிகவும் அதிகம். ஒரு நாள் கண்டிப்பாக பெர்மனாவின் உடல் எடை மற்ற ஆரோக்கியமான சிறுவர்களின் எடையைப் போல குறையும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

×Close
×Close