ஆங்கிலம் தெரியாது, ஆனால் போயிங் 777 விமானத்தை இயக்கிய இளம்பெண் இவர்தான்

“பெற்றோர்கள் தான் நம்முடைய பலம். கடின முயற்சிக்கு எந்தவித மாற்றும் இல்லை” என்பதுதான் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் விமான மங்கை ஆனி திவ்யா

எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதிக்க துவங்கிவிட்டனர். ஆனால், சில துறைகளை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் இன்றளவும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதில் விமான துறையும் ஒன்று. ஆனால், எல்லா கடினங்களையும் தகர்த்து இந்திய இளம்பெண் ஒருவர் போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய இளம் பெண் கமாண்டர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த ஆனி திவ்யாவிற்கு சிறு வயது முதலே விமானியாக வேண்டும் என்பது தான் கனவு. அவருடைய அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவரது அப்பா விருப்ப ஓய்வு பெற்றவுடன் குடும்பம் முழுவதும் விஜயவாடாவிற்கு சென்றது. ஆனி திவ்யாவிற்கு 12-ம் வகுப்பு முடித்தவுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திராகாந்தி விமானி பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். அவரது குடும்பம் கடன் வாங்கி ஆனி திவ்யாவை படிக்க வைத்தது. பெண் பிள்ளை எதற்கு விமானியாக வேண்டும் என அவரது குடும்பத்தார் கேள்வி கேட்கவில்லை.

ஆனால், ஒரு சிறிய கிராமத்திலிருந்து விமானியாவது என்பது ஆனி திவ்யாவிற்கு எளிதானதாக இல்லை. “சிறிய கிராமத்திலிருந்து படித்து வந்ததால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. அப்போதெல்லாம் உடன் படித்தவர்கள் என்னை கேலி செய்வார்கள். அந்த சமயங்களில் என்னுடைய கனவிலிருந்து பின் வாங்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், என் பெற்றோர்களின் துணையுடன் நான் அதிலிருந்து பின்வாங்காமல் எனது இலக்கை அடைந்தேன்.”, என்கிறார் ஆனி திவ்யா.

19 வயதில் பயிற்சியை முடித்தவுடன் உடனேயே ஏர் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து ஸ்பெயினுக்கு சென்று போயிங் 737 ரக விமானத்தை இயக்கினார். அதன்பின், லண்டன் சென்று தற்போது போயிங் 777 ரக விமானத்தை இயக்கி, உலகத்திலேயே அந்த ரக விமானத்தை இயக்கிய இளம்பெண் என்ற சாதனையை புரிந்திருக்கிறார்.

“பெற்றோர்கள் தான் நம்முடைய பலம். கடின முயற்சிக்கு எந்தவித மாற்றும் இல்லை” என்பதுதான் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் விமான மங்கை ஆனி திவ்யா.

×Close
×Close