/indian-express-tamil/media/media_files/2025/05/23/fBi2yTuC6Q2TaWnBBu6a.jpg)
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதனை பார்ப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அந்த வரிசையில் நடப்பாண்டிற்கான 48 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (23-5-2025) தொடங்கி வருகிற (29-5- 2025) வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த விழாவில் சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் சுமார் ஒன்றரை லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் யானை, காட்டு மாடு, குதிரை, முயல், முதலை, குரங்கு உள்பட பல விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அண்ணா பூங்கா வளாகம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பக்கோடா பாயிண்ட், லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி இயக்கப்படும் 12 பஸ்களுடன் கோடை விழாவிற்காக கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்காடு செல்ல கோரிமேடு - அடிவாரம் வழியாகவும். அங்கிருந்து கீழே கொட்டச்சேடு-குப்பனூர் வழியாகவும் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.