Advertisment

"2016 தமிழகத் தேர்தல் வரலாறு... தமிழகம் தடம் புரண்ட கதை” புத்தகம் சொல்லும் நியதி என்ன?

வருகின்ற பொதுத்தேர்தலின் போது தமிழக மக்களின் மனம் செல்லும் மைய ஓட்டததை கணக்கிட வரலாற்று ரீதியாக இந்த புத்தகம் பெரும் அளவில் உதவும்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
2016 தமிழகத் தேர்தல் வரலாறு தமிழகம் தடம் புரண்ட கதை

2016 தமிழகத் தேர்தல் வரலாறு தமிழகம் தடம் புரண்ட கதை

2016 தமிழகத் தேர்தல் வரலாறு தமிழகம் தடம் புரண்ட கதை

Advertisment

மகா.தமிழ்ப் பிரபாகரன்

கிழக்குப் பதிப்பகம் வெளியீடு

விலை : ரூ.200

சென்னை, நந்தனம் பகுதியில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது 42வது புத்தக கண்காட்சி. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வாசகர்கள் காத்திருப்பது இந்த புத்தக கண்காட்சிக்காகத் தான் இருக்கும். பிரபல எழுத்தாளர்கள் முதற்கொண்டு புதிய எழுத்தாளர்கள் வரையில் தங்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்யும் களமாகவே இன்று வரை செயல்பட்டு வருகிறது சென்னை புத்தக கண்காட்சி.

இந்த வருட கண்காட்சியில் கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் 2016 தமிழகத் தேர்தல் வரலாறு தமிழகம் தடம் புரண்ட கதை - என்ற தலைப்பே ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பதாக உணரவே, இந்த நான்கு வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒவ்வொன்றாக யோசித்து இந்த புத்தகத்தினை விமர்சனத்திற்கு வைக்கிறது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

“தமிழ்நாடு விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது” - மகா. தமிழ்ப் பிரபாகரன். எழுத்தாளருக்கு முன் அறிமுகம் தேவையில்லை. ஊடகவியலாளர், ஆவணப்பட இயக்குநர், புலம் பெயர் மக்கள் மீது வைக்கப்படும் அரசியல் பற்றியும் திணிக்கப்படும் அரசியல் குறித்தும் மாறுப்பட்ட கருத்தினை தீர்க்கமாக உடையவர் என்பது நாம் அறிந்ததே.

2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தான் புத்தகத்தின் மையம். அதற்கு முன்பும், பின்பும் தமிழகத்தில் மிக சர்வ சாதாரணமாக நடைபெறும் பிரச்சனைகள் எப்படி அரசியல் ஆதாயத்திற்காக திசை திருப்பப்பட்டது என்பதை சமரசமின்றி எழுதியிருக்கிறார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர்.

2016 தமிழகத் தேர்தல் வரலாறு தமிழகம் தடம் புரண்ட கதை விமர்சனம்

6 முனை போட்டி... 234 தொகுதிகள்... கூட்டணிகள்... தொகுதிப் பங்கீடுகள்... பிரச்சாரங்கள்... மற்றும் பிரச்சனைகள்... இவை வருவதற்கு முன்பே 2015ம் ஆண்டின் இறுதியிலும், 2016ம் ஆண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தினை சோதித்த வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, அதற்காக விழுந்து விழுந்து ஒட்டும் பணியுடன் மீட்டுப் பணிகளிலும் ஈடுபட்ட மக்கள் நலப் பிரதிநிதிகள் 2016ம் ஆண்டின் அரசியல் களத்தை சீர் தூக்கி பார்க்க உதவியவர்கள்.

சேற்றிலும் சகதியிலும் புழுக்களாய் மக்கள் உழண்டு கொண்டு, அரசின் உதவியை நாடாமல், தாங்களே தலை தூக்கி நிறுத்திய தலைநகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் “கழக உடன்பிறப்புகளேவும், என் வாக்காளப் பெருமக்களேவும்” சிறப்பாக, முன்பு எப்போதும் இல்லாத அளவாக உச்சஸ்தாயில் ஒலித்தது.

தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமலில் இருந்த போதும், ஆயிரக் கணக்கில் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இந்திய வரலாற்றில் புதிய திருப்பதை ஏற்படுத்திய சட்டமன்ற தேர்தலில், வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல், தேர்தல் ஆணையமே தஞ்சை மற்றும் அரவங்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி வைத்தது. - இதுவே புத்தகத்தின் சாராம்சம்.

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை மூளைச் சலவை செய்ய கொடுக்கப்படும் உத்திரவாதங்களும், அறிக்கைகளும் எப்போதும் போல் ஒன்றாய் தான் இருக்கின்றன. இங்கு மாற்று அரசியல் என்று ஒன்றுமே இல்லை. ஆனால் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு, வரலாற்றை கிளறிக் கொண்டு இருப்பதில் தான் தங்களுக்கான அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனம் செய்யும் புத்தகம் இது.

1. மதுவிலக்கு

2. சாதியப் படுகொலைகள் (கௌசல்யா - சங்கர்/இளவரசன் - திவ்யா )

3. சசிப்பெருமாள் மரணம்

4. மதுஒழிப்பை கையில் எடுத்தது திராவிட கழகமா ? அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகமா ?

5. ஈழப்படுகொலைகள்

6. கச்சத்தீவு விவகாரம்

7. கடுமையான மின்வெட்டு

8. தனியாரிடம் இருந்து மின்சாரம் பெறுதல்

9. ஏழு பேர் விடுதலை

10. சொத்துக் குவிப்பு வழக்கு

11. ஸ்பெக்ட்ரம் ஊழல்

12. வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், கோதுமை பேர ஊழல்

13. குடும்ப அரசியல் / மன்னார்குடி மக்களின் அரசியல்

14. போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு

என ஒவ்வொரு பிரச்சனைகளும் தமிழர்களின் தலையில் இடியென விழுந்ததையே திரும்பத் திரும்ப பேசி எப்படியான நிலைக்கு மக்களை இந்த அரசியல் களம் ஆட்கொண்டது என்பதையும் விரிவாக விவரிக்கின்றது இந்த புத்தகம்.

நமக்கு நாமே, மோடியா லேடியா, மக்கள் நலக் கூட்டணி, நோட்டாவுடன் போட்டி என 6 முனை போட்டிகள் நிலவினாலும், அதிமுகவும் திமுகவும் Neck to Neck என்ற இடங்களைப் பெற்றனர். அதன் பின்பு ஜெயலலிதாவின் மரணம் தொட்டும், பின் சசிகலாவின் அரசியல் பிரவேசம், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் - பிரிவும் சந்திப்பும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் போன்ற நிகழ்வுகளின் பின்னால் இருந்த அரசியலை வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம்.

நீட்டிற்கு எதிராக போராடிய அனிதாவின் மரணம், தியானம் என்ற பெயரில் ஓ.பி.எஸ். மெரினாவில் மக்களுக்கு செய்தியாளர்கள் வழியாக வழங்கிய செய்தி, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற பிரச்சனை, சசிக்கலா சிறை செல்லும் போது எடுத்துக் கொண்ட சபதம் என நிறைய நிகழ்வுகளுக்கு சற்று அதிகப்படியான விளக்கம் தேவைப்படுகிறது.

திருப்பூரில் கண்டெய்னரில் பிடிபட்ட பணம் என்ன ஆனது ? வீராணம் ஊழல், கோதுமை ஊழல், சர்க்காரியா ஆணையம் பற்றிய ஒரு வரிச் செய்திகள் மட்டுமே ஆங்காங்கே கிடைக்கின்றது. அதன் பின்னால் இருக்கும் வரலாற்று நிகழ்வுகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவோ, நினைவூட்டவோ எழுத்தாளர் முயற்சிக்கவில்லை. அது இருந்திருந்தால் இன்னும் சிறப்பு வடிவம் பெற்றிருக்கும் இந்நூல்.

அரசியல் சார் களத்தில் வரலாற்றினை எழுத முற்பட்டு வரலாற்றை மட்டும் எழுத எத்தனித்தாலும், நூலின் ஆசிரியர் என்பதையும் தாண்டி வஞ்சிக்கப்பட்ட தமிழரின் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறது இந்த புத்தகம். வருகின்ற பொதுத்தேர்தலின் போது தமிழக மக்களின் மனம் செல்லும் மைய ஓட்டததை கணக்கிட வரலாற்று ரீதியாக இந்த புத்தகம் பெரும் அளவில் உதவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment