Advertisment

புத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம்

காதல் கணவரின் மறைவையும் தாண்டி, நண்பர்கள் மனத்தில் உயிரோடு வசிக்கும் கணவரின் நினைவுகளை முதலாமாண்டு நினைவு நாளில் புத்தகமாக வெளியிட்டுள்ளார், ஷீபா ராம்பால்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
rampaul 1

ச.கோசல் ராம்

Advertisment

தனி நபர்கள் பற்றி நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். சுய சரிதையாக, அல்லது வாழ்க்கை வரலாறாக இருக்கும். பெரும்பாலும் வெற்றி பெற்ற மனிதர்களின் புகழ்பாடுவதாகவே அமையும்.

’மனிதம்... அதன் பெயர் ராம்பால்’ என்ற நூல் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து, கனவாகிப் போன ‘ராம்பால்’ என்ற இணை இயக்குநர் பற்றிய நூல் இது. அவரது நண்பர்களின் நினைவுகளைக் கொண்டு புத்தகமாக்கியிருக்கிறார், அவரது காதல் மனைவி ஷீபா.

ராம்பாலை பற்றி சகோதரர் சொன்னதைக் கேட்டு அவரை பார்க்காமலேயே காதல் கொண்டவர், ஷீபா. ராம்பாலின் முதல் திருமணம் முறிந்து போனதும், குடும்பத்தினர் ஒப்புதலுடன் ராம்பாலை கரம் பிடித்தவரின் அதே காதல், அவர் மறைவுக்கு பின்னரும் தொடர்வதை, இந்த புத்தகம் நிருபிக்கிறது. கணவனின் இழப்பு ஒரு பெண்ணுக்கு எத்தகைய வலியையும் வேதனையையும் தரும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எத்தனை மனைவிகள் தன் கணவருக்காக புத்தகம் கொண்டு வந்திருப்பார்கள்?

நடிகர் சூர்யா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ’ஏழாம் அறிவு’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதுதான், ராம்பால் சாதித்தது. ஆனால் அதைவிட பெரிய சாதனை நல்ல நண்பர்களை தேடிதேடி நட்பாக்கியது. ராம்பாலிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருந்தது என்பதை அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள். ராம்பாலிடம் நல்ல கதையும் திறமையும் இருந்தும், படம் இயக்காமலேயே இறந்து போனார். அவருடைய முதல் ஆண்டு நினைவு நாளில் இந்த புத்தகத்தை வெளியிட்டு, தனது காதலை உறுதி செய்துள்ளார்.

அழகிய மணாளன், அஜன்பாலா, இகோர், கரன் கார்க்கி, சால்ஸ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் எழுதியுள்ள கட்டுரைகளை படிக்கும் போது, ராம்பால் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார். ஒருவேளை அவர் இயக்குநராக ஜெயித்திருந்தால் இதையெல்லாம் சொல்லி சொல்லி பலரும் புகழ்ந்திருப்பார்கள்.

திரையுலகத்தில் இருப்பவர்களுக்கே உள்ள பிரத்யோக குணமான வாசித்தல் அவரிடம் அதிகம் குடி கொண்டதை அவருடைய நண்பர்கள் அனைவரும் சொல்கிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தியவர்’ என்ற வார்த்தைகளில் இருந்து ராம்பாலின் வாசித்தலை அறியலாம்.

சித்தார் சத்தியமூர்த்தியின் கட்டுரையைப் படிக்கும் போது, இப்படியொரு கிராமம் இன்னும் தமிழகத்தில் இருக்கிறதே என்ற வேதனையும் ஏற்படுகிறது. ஆம்... ராம்பாலின் சொந்த ஊருக்கு பிரேதத்தை கொண்டு சென்ற போது, ‘வெளியூரில் இறந்தவர்களை ஊருக்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை’ என்பதை அறியும் போது ஷாக்காகத்தான் இருக்கிறது.

தன்னுடைய நண்பன் ராஜன் மறைந்த போது, அவருடைய சிறுகதைகளை தொகுத்து அவரை வாழ வைத்தவர் ராம்பால். எரிக்கவோ புதைக்கவோ முடியாத நண்பர்களின் நினைவுகளில் வாழும் ராம்பாலை, நண்பர்களின் எழுத்துக்களில் உயிர்தெழ வைத்திருக்கிறார், அவரது மனைவி ஷீபா.

‘மனிதம்... அதன் பெயர் ராம்பால்’ நினைவு கட்டுரைகளின் தொகுப்பு, விலை : ரூ.100/-. தொகுப்பு : ஷீபா ராம்பால், வெளியீடு : நாதன் பதிப்பகம், 16/10, பாஸ்கர் தெரு, நேரு நகர், தசரதபுரம், சாலிகிராமம், சென்னை 93, தொடர்புக்கு : 91 9884060274

(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)

S Kosalram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment