கவிஞர் அமிர்தம் சூர்யாவின் ‘கருமாண்டி ஜங்ஷன்’ யூடியூப் சேனல் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர் தேவா சுப்பையா தனது தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறார். இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பு வித்தியாசமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்திருக்கிறது.
இந்த சிறுகதைப் போட்டியின் மொத்தப் பரிசு ரூ.50,000, 10 சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு சிறுகதைக்கும் ரூ.5,000 பரிசு பகிர்ந்தளிக்கப்படும். அது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகள் நூலாகவும் வெளியிடப்பட உள்ளது.
எழுத்தாளரும் துபாயில் ஒரு நிறுவனத்தில் ‘புராஜெக்ட் ஹெட்’ ஆக பணி புரியும் தேவா சுப்பையா, தனது தந்தையின் பெயரில் அறிவித்துள்ள ராம. செ. சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு கிட்டத்தட்ட 172 கதைகள் வரப்பெற்றுள்ளது. சிறுகதைப் போட்டி முடிவுகள் ஆகஸ்ட் 15-இல் வெளியாக உள்ளது. எழுத்தாளர்கள் ரிஷபன், கணேஷ்பாலா, அமிர்தம் சூர்யா நடுவர்களாக இருந்து சிறுகதைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் தேவா சுப்பையா தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டி அறிவித்திருப்பது தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றுள்ளது. தந்தையின் பிறந்த நாளில், நினைவு நாளில் ஏதேனும் ஆசிரமங்களில் உணவளிப்பது, உதவிகளை செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டி அறிவித்திருப்பது நெகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பு யோசனை எப்படி உருவானது என்பது குறித்து எழுத்தாளர் தேவா சுப்பையாவிடம் பேசினோம்.
2010-இல் இருந்து ‘மருதுபாண்டி’ என்ற பிளாகில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் தேவா சுப்பையா, 2016-இல் ‘யாரோ எழுதிய கதை’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல், ‘சுவாசமே காதலாக’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார். தந்தையின் பெயரில் நினைவு சிறுகதைப் போட்டி அறிவிப்பு குறித்து தேவா சுப்பையா கூறியதாவது: “சிவகங்கை பக்கத்தில் குறுக்கத்தி என்ற கிராமம்தான் எனது அப்பா பிறந்த ஊர். இப்போது தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் குடிபெயர்ந்துவிட்டோம். அவர்தான் முதல் தலைமுறையாக படித்து கிராமத்தில் இருந்து வெளியே வந்தவர். அப்பா வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றார். 2013-இல் எதிர்பாராதவிதமாக அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதுவரை அப்பாதான் எங்களுக்கு எல்லாமாக இருந்தார். திடீரென அப்பா இறந்தது எல்லாமே கைவிடப்பட்டது போல ஆகிவிட்டது. படிக்க வைத்து எல்லாவற்றையும் செய்த அப்பா, நான் ஒரு நிலைக்கு வரும்போது என்கூட இல்லை. நான் புத்தகம் வெளியிட்டபோதும் அப்பா கூட இல்லை. நான் படித்து ஒரு வேலையில் செட்டில் ஆகிவிட்டாலும், இப்போது அப்பா கூட இல்லை என்றாலும், சிறு வயதில் அப்பா சொல்லிக்கொடுத்த ஒழுக்கம், நெறிமுறை தான் வழிநடத்துகிறது.
நாம் படிக்கிற படிப்பையெல்லாம் தாண்டி அவர்கள் சொல்லிக்கொடுக்கிற ஒழுக்க, நெறிமுறைகள்தான் நம்மை வழிநடத்தும் இல்லையா. அதனால், அப்பாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும்போது, இப்போது அவர் கூட இல்லாததால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.
பொதுவாக அப்பா நினைவு நாள் வரும்போது, ஆசிரமங்களில் உணவு அளிப்பது, நிறைய பேருக்கு உதவிகள் செய்கிறோம். இதையெல்லாம் தாண்டி, நான் இலக்கியம் சார்ந்து இருப்பதால், ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இலக்கிய உலகில் நாள்தோறும் புதியதாக பலர் எழுத வருகிறார்கள். அவர்களை அடையாளப்படுத்துவதற்கும், அப்பாவின் பெயரை காலங்கள் கடந்து நிலை நிறுத்துவது குறித்தும் யோசிக்கும்போது, நாம் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்து தொடர்ச்சியாக செய்தால், அப்பா காலங்கள் கடந்து ஒரு ஆவணமாக மாறுவார் என்று நினைத்தேன்.
கல்கி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், பதிப்பகத் துறையில் இருப்பவர்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில், தன்னுடைய தகப்பன் பெயரில், அல்லது பிரியப்பட்டவர்களின் பெயரில் அறிவிக்கும்போது அது ஆழமான அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கும்.
இலக்கியம் என்பது காலங்கள் கடந்து நிற்கும் என்பதால் அந்த இடத்தில் அப்பா ஒரு ஆவணமாக மாறுவார். அதனால், அப்பாவின் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்தோம் என்றால், புதியதாக எழுத வருபவர்கள் நிறைய பேர் அதில் கலந்துகொள்வார்கள். ஏற்கெனவே எழுதுகிறவர்களும் கலந்துகொள்வார்கள். இந்த போட்டி புதியதாக எழுத வரும் எழுத்தாளர்களை மனதில் வைத்தே அறிவிக்கப்பட்டது.
கவிஞர் அமிர்தம் சூர்யாவின் ஒருங்கிணைப்பில், எனது தந்தையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறுகதைப் போட்டியில், சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிடுவது. புத்தக வெளியீட்டுவிழாவை அப்பாவின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறுக்கத்தியில் இலக்கியத் துறையினரை அழைத்து நடத்தலாம் என்று இருக்கிறேன்.
இதனால், அப்பாவின் பெயரை ஆவணப்படுத்துவதோடு, 10 படைப்பாளிகளின் பெயர்களையும் வெளியே கொண்டுவந்தது போல இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், இந்த புத்தக வெளியீட்டு விழாவை துபாயிலும் நடத்த உள்ளேன். தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகளை அழைத்து புத்தகத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இந்த முயற்சி அப்பாவின் பெயரை காலம் கடந்து நிலைநிறுத்தலாம் என்ற ஒரு ஆசையின் வெளிப்பாடுதான். அப்பாவின் பெயரில், இந்த சிறுகதைப் போட்டியை தொடர்ச்சியாக செய்ய உள்ளேன். இதன் மூலமாக அவருடைய பெயர் நிலைத்து நிற்கும்போது எனக்கு ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.
இதனுடைய தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு நாவல் போட்டி அறிவிக்க உள்ளேன். இந்த திட்டத்தை அண்ணன் கவிஞர் அமிர்தம் சூர்யாவிடம் கூறியபோது, நல்ல விஷயம் என்று அவர் கருமாண்டி ஜங்ஷன் யூடியூப் சேனல் மூலம் அறிவித்தார்.
அப்பாதான் எனக்கு, சிறு வயதில் கவிதைகளை அறிமுகப்படுத்தினார். நிறைய புத்தகங்களை வாசிப்பதற்கு அப்பாதான் ஊக்கமளித்தார். அதனால், அப்பாவின் பெயரில் சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளேன்.” என்று கூறினார்.
சிறுகதைப் போட்டிக்கான பரிசுத் தொகையை சிறந்த 10 கதைகளுக்கு 10 எழுத்தாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது என்பதை எப்படி திட்டமிட்டீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த தேவா சுப்பையா, “சிறுகதைப் போட்டி என்றால், முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று வரும்போது 3 பேர் மட்டுமே கவனம் பெறுகிறார்கள். அதையே, 10 சிறுகதைகள் என்று 10 எழுத்தாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது 10 பேர் கவனம் பெறுகிறார்கள். 10 பேருக்கு பரிசு கிடைக்கிறது. இந்த கருத்தை முதலில் அமிர்தம் சூர்யா அண்ணன்தான் கூறினார். அவர் கூறியது எனக்கு உடன்பாடானதாக இருந்தது. அதில், ஒரு சமநிலையும் இருப்பதாக தெரிந்தது. அதனால், 10 கதைகளுக்கு பரிசு என்று அறிவித்தோம்.
எனது அப்பாவின் பெயரில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறுகதைப் போட்டியை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளேன்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.