Advertisment

கண்ணா வா! காதல் வரம் தா!!

மற்ற ஆழ்வார்களை விட நாச்சியார் எப்படி கண்ணனிடம் காதல் கொண்டார் என்பதையும், அவரின் காதலையும் தெளிவுப்படுத்தும் கட்டுரை இது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கண்ணா வா! காதல் வரம் தா!!

சரவணக்குமார்

Advertisment

பரமனைப் பற்ற எத்தனையோ பக்தி மார்க்கங்கள் இருந்தாலும், பக்தியுடன் காதலை கலந்து கொடுத்தவர்கள் ஆழ்வார்கள். அவர்களுள் காதலோடு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்தவள் ஆண்டாள்.

நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் தங்களை நாயகி பாவத்தில் வைத்து நாயகனாகிய பெருமாளை நோக்கி பல பாசுரங்களை இயற்றியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ இரண்டாம் இடமே. முதலிடத்தை தட்டிச்சென்றவள் ‘ஆண்டவனையே ஆண்டதால்’ ஆண்டாளாகிய கோதைநாச்சியார் தான்.

நம்மாழ்வார் ‘பராங்குச நாயகி’யாகவும் , திருமங்கையாழ்வார் ‘பரகால நாயகி’யாகவும் கண்ணனை காதலிக்கிறார்கள். ஆனால் ஆண்டாளோ தானாகவே இருந்து அவனை அடைய முற்படுகிறாள்.

நாயகன் நாயகி பாவம் நமது தமிழ் இலக்கியங்களில் மிகுதியாகவே காணப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Bridal Mysticism என்பர்.

மற்ற ஆழ்வார்களால் தங்களை பெண்ணாக பாவனை செய்தே பாடமுடியும். ஆண்டாளோ இயற்கையிலேயே பெண்ணாக பிறந்ததால், அந்த பாவனை அவளுக்கு தேவைப்படவில்லை. அவளின் பாசுரங்கள் முற்றும் துறந்த முனிவரையும் சற்றும் அசைத்துப் பார்த்துவிடும்.

அவ்வளவு காதல்! கூடவே மெல்லியதாய் இழையோடும் காமம்.

கடவுளை தொழும்பொழுது காமம் எதற்கு என்று வியாக்கியானம் பேசுகிறவர்களுக்கு புராணங்கள் சொல்லும் பதில்... ‘கசப்பான மருந்தை உண்ண இனிப்பின் உதவி தேவையில்லையா!’ என்பதே.

ஆண்டாளைப் போல் கடவுள்மேல் காதல் கொண்டவர்கள் இருந்தார்களா என்பது சந்தேகமே. ஒருவேளை அவ்வாறே இருந்திருந்தாலும், அவள் அளவிற்கு அவனிடத்தில் காதல் ரசம் சொட்டச் சொட்ட பாக்கள் இயற்றி இருக்க வாய்ப்பேயில்லை.

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசிந்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”

என கண்ணனின் கையிலிருக்கும் ‘பாஞ்ச சன்யம்’ என்கிற வெண்சங்கை பார்த்து கேட்கிறாள் ஆண்டாள்.

‘பெருமாளின் திருவாய் அமுதம் (எச்சில்) பச்சைக்கற்பூரம் போன்ற வாசனையுடன் இருக்குமா? அல்லது தாமரை மலர் போன்ற மென்மையான மணத்துடன் இருக்குமா?’ என்கிற சந்தேகம் அவளுக்கு எழுந்ததாலே, அவள் வெண்சங்கிடம் இக்கேள்வியை கேட்கிறாள். மேலும் ‘கண்ணனின் வாய்சுவை எப்படி இருக்கும்?’ என்கிற கேள்வியும் அவளிடம் பிறக்கிறது.

‘ஒரே கடலில் உன்னோடு பிறந்தவர்களை யாரும் மதிப்பதில்லை. ஆனால் கண்ணனுடைய திருவாய் அமுதத்தை பருகுவது உனக்கு வந்த வாழ்வு. எல்லா பாவங்களையும் போக்க பலரும் பல புண்ணிய நதிகளை தேடிப்போய் நீராடுவர். ஆனால் கண்ணனின் திருவாய் அமுதமாகிய புண்ணிய தீர்த்தத்தில் தினமும் நீராடுவது உனது அதிர்ஷ்டம். நீ உண்பது உலகங்களை அளந்த பெருமானுடைய திருவாயிலுள்ள அமுதத்தை.நீ படுத்துக்கொள்வது கடல் போன்ற நிறத்தை உடைய அவனுடைய திருக்கையில். இதனால் பல பெண்களின் வருத்தத்தையும் சம்பாதிக்கிறாய். கண்ணனுடைய வாயமுதம் உனக்கு மட்டும் சொந்தமல்ல. அவன் மணம் முடித்த 16000 பெண்களுக்கும் சொந்தம். அப்படி இருக்க அவர்கள் கோபிக்க மாட்டார்களா?’

இப்படி வெண்சங்கையும் கண்ணனின் திருவாய் அமுதையும் பொருத்தி பத்து பாசுரங்களை நாச்சியார் திருமொழியில் பாடியிருக்கிறாள் ஆண்டாள்.

பாஞ்ச சன்யத்தை பார்த்து ஆண்டாள் இவ்வாறு சொல்வதற்கு காரணம், அச்சங்கு ஒரு நொடிப்பொழுதும் பெருமாளைவிட்டுப் பிரிவதில்லை. அவன் திருக்கையில் இருக்கும் சக்கரமாவது எதிரிகளை கொல்வதற்கு பெருமாளைவிட்டு பிரியநேரிடும். ஆனால் வெண்சங்கோ, பிராட்டியை போல் அவனுடனே வாழ்ந்திருக்கும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், அப்பொழுதே சிறந்த முற்போக்குவாதியாக திகழ்ந்திருக்கிறாள் என்பதற்கு அவளது பாசுரங்களே சாட்சியாக நிற்கின்றன.

ஒரு பருவப்பெண் தன் காதலனை நினைத்து உருகுவதாகவே அவளது திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் அமைந்துள்ளது.

திருப்பாவையில் மார்கழி மாதம் நோன்பிருந்து காத்யாயனி தேவியை வழிபடுவதும், கண்ணனை துயில் எழுப்புவதுமே அவள் பணியாக இருந்தது. அப்படி துயில் எழுந்த கண்ணன் தன்னிடம் வருவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் நாச்சியார் திருமொழியில் தைமாதம் முழுவதும் கண்ணனுக்காக காத்திருந்து களைத்துப்போனவள், மாசி மாதத்தில் மன்மதனை அழைக்கிறாள். கண்ணனை நோக்கி காமபாணம் விடச்சொல்லி கேட்கிறாள். பங்குனியில் உனை நோக்கி நோன்பு இருக்கிறேன் என்கிறாள். அப்படியும் நீ என்னை கண்ணனுடன் சேர்த்துவைக்கவில்லை என்றால், அந்த பாவம் உன்னையே சேரும் என சாபமிடும் தொனியில் கூறுகிறாள்.

ஆண்டாள் முன்ஜென்மத்தில் பூமிபிராட்டியாக பெருமாளை மணம் புரிந்த காட்சி அவள் கண்முன்னே விரிகிறது. கூடவே கனவொன்றும் வருகிறது.

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”- இப்படி ஆரம்பிக்கிறது அவள் கனவுப்பா.

அக்கனவில் அடுத்த நாள் நடக்க இருக்கும் திருமணத்திற்கு ஆயிரம் யானைகள் புடைசூழ கண்ணன் வருகிறான். ஊர்மக்கள் அவனை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கின்றனர். கல்யாணப்பந்தல் போட்டு, பாக்கும் மரம் கட்டி, அவ்விடமே கோலாகலாமாக இருக்கிறது. இந்திரனும் தேவாதி தேவர்களும் வந்து ஆண்டாளுக்கும் கண்ணனுக்கும் மணம் பேசி முடிக்கிறார்கள். அந்தரி என்கிற துர்க்கைப் பெண் புதிய திருமணப்புடவையை ஆண்டாளுக்கு தர, புனித நீர் தலையில் தெளிக்கப்பட்டு கண்ணனோடு காப்புக்கட்டுவதையும் காண்கின்றாள்.

பின் அவளே, ‘கம்பீரமாய் பூமி அதிரும்படி நடந்து வந்த என் மணாளன். மத்தளம் கொட்டவும், வரி சங்குகள் ஒலிக்கவும் என் கைகளை பற்றுகின்றான்’ என்கிறாள்.

பின்நாட்களில் அவள் கண்ட இக்கனவு நனவாகியது.

ஆண்டாள் தமிழுக்கு கொடுத்த நன்கொடையாகவே நாச்சியார் திருமொழி கருதப்படுகிறது. ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த அக்காலத்தில் பெண்ணாய் இருந்து தமிழில் சிறந்த பாக்களை இயற்றியது இன்றளவும் வியப்பான விஷயமே.

ஆண்டாள் திருமகளின் அம்சம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருமுறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனிடம், ‘எப்படிப்பட்ட தொண்டு செய்பவர்களை உங்களுக்கு பிடிக்கும்? எனக் கேட்கிறாள் பூமிபிராட்டி. அதற்கு பெருமாள், ’எனக்காக பூமாலை தொடுப்பவர்களையும், என் மீது பாமாலை பாடுபவர்களையும் பிடிக்கும்’ என்கிறார். அதற்கு அவள், ’பூலோகத்தில் பிறந்து உங்கள் மீது பூமாலையும், பாமாலையும் தொடுக்கவேண்டும்.’ என வரம் கேட்க, பெருமாளும் தந்தருள்கிறார். அப்படி வந்துதித்து தன் உண்மை காதலை உலகிற்கு உணர்த்தியவள் ஆண்டாள்.

தன் உடம்பிலுள்ள சகல அவயங்களும் கண்ணனுக்கே சொந்தம் என்பதை விரகதாபத்தோடு சொல்லி பல பாசுரங்களை இயற்றியுள்ள ஆண்டாள், தன்னுடைய உடல் மட்டுமல்லாமல் உயிரும் அவனுக்கே சொந்தம் என்கிறாள்.

இப்படி ஒரு உண்மையான உயிர் காதலி கிடைக்க கொடுத்து வைத்தவன் அந்த கண்ணனே!

Aandal Saravanakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment