தலித் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் பா.ரஞ்சித்தின் நீலம்… 5 பேருக்கு ஃபெலோஷிப் அறிவிப்பு

இதில் ரொம்ப முக்கியமானது, தலித் வரலாறு எழுதுவது என்பதும் ஜாதி எதிர்ப்பு போராட்ட வரலாறு எழுதுவது என்பதும் வேறுவேறு கிடையாது என்று தலித் வரலாற்றாசிரியர் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தெரிவித்தார்.

dalit history, neelam fellowship, dalit history of tamil nadu, dalit history writing, தலித் வரலாறு, பா ரஞ்சித், நீலம் பதிப்பகம், நீலம் ஃபெலோஷிப், ஸ்டாலின் ராஜாங்கம், தலித் போராட்ட வரலாறு, தலித் இலக்கியம், தலித் அரசியல், neelam publications, neelam, director pa ranjith, pa ranjith, dalit politics, dalit literature, neelam publication fellowship

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பகம், பட்டியலின மக்களின் பண்பாடு, போராட்டங்கள், இயக்கங்கள், ஆளுமைகள் சார்ந்த வரலாற்றை எழுதுவதற்கென ஆண்டிற்கு 5 பேருக்கு ஃபெலோஷிப் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இது தலித்களின் போராட்ட வரலாற்றை தொகுக்கும் முயற்சி என்று தலித் வரலாற்றாசிரியர் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் வருகை ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அவருடைய வருகை ஏதோ ஒருவகையில் தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை சாதியைப் பற்றி பேச வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. பா.ரஞ்சித் சினிமா இயக்குவதோடு மட்டுமல்லாமல், தனது நீலம் அமைப்பு மூலம், தலித் கலை, பண்பாடு ஆகிய தளங்களில் பெரிய அளவிலான கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார். அதோடு, தலித் அரசியலைப் பேசும் சினிமாக்களையும் தயாரித்து வருகிறார்.

அந்த வகையில், 2019ம் ஆண்டு பா.ரஞ்சித் நீலம் பதிப்பகத்தை தொடங்கி நூல்களை வெளியிட்டு வருகிறார். நீலம் கலை, இலக்கிய மாத இதழையும் வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நடைபெறும் சாதிய ஒடுக்குமுறை சம்பவங்களில் தொடர்ந்து தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த சூழலில்தான், பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பகம், தலித் மக்களின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் தலித் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்து நூலாக எழுதி ஆவணப்படுத்துவதற்காக நீலம் பதிப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு ரூ.75,000 ஃபெலோஷிப் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆய்வுத்திட்டத்தை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பட்டியலின மக்கள் குறித்த வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாக நீலம் பதிப்பகம் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

இங்கு ‘வரலாறு’ என நாம் அடிக்கோடிடுவது பட்டியலின மக்களின் பண்பாடு, சமூக மாற்றங்கள், ஆளுமைகளின் போராட்டம், வழக்காறு, கலை இலக்கியம் மற்றும் அவர்கள் மீதான வன்முறை ஆகியவற்றை உள்ளடக்கியது.

பட்டியலின மக்கள் தனித்த கூறுகளையும் அனுபவங்களையும் உள்ளடக்கிய வாழ்வைச் சுமந்து அலைகிறார்கள். இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி நூல் வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். பொதுச் சமூகம் மேலும் நம்மைப் புரிந்துகொள்ள இந்த வரலாற்றை ஆய்வுத் தொகுப்பாக்க நீலம் பதிப்பகம் அதற்கான முயற்சியினை முன்னெடுத்து ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கிறது.

உரிய ஆதாரம், தர்க்கம் சார்ந்து அவை எழுதப்பட வேண்டும். இப்பணியில் ஈடுபட முன்வருவோருக்கு ஒவ்வொரு வருடத்திலும் 5 நபர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு நீலம் நிதி நல்கை (Neelam Fellowship) வழங்கப்படும். அத்தொகையின் மதிப்பு ரூ.75,000 ஆகும்.

தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பை தொகுக்கவும் ஆராயவும் இத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றைக் கையாண்டு அத்தலைப்பை நூல் வடிவில் எழுதி அனுப்ப வேண்டும். பின்னர், அது எழுதியவரின் ஒப்புதலோடு அவர் பெயரிலேயே நூலாக வெளியிடப்படும்.

நிதி நல்கை (Fellowship) பெற விண்ணப்பிப்பவர்களுகான நெறிமுறைகள்:

 1. விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் தாங்கள் எழுத விரும்பும் தலைப்பைப் பற்றி ஐந்து பக்க அளவிலான ஆய்வுத் திட்டத்தினை அனுப்பி வைக்க வேண்டும். அதைப் படித்து ஐந்து பேரைத் தேர்வு செய்வதற்கான நடுவர்கள் இருப்பர். அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்படி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 2. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கான தொகை ஐந்து தவணையாக வழங்கப்படும்.
 3. ஆய்வு தொடங்கிய பிறகு, அதன் முன்னேற்றம் குறித்து வருடத்தின் இரண்டு முறை ‘நீலம் ஃபெலோ’ நடுவர்களிடம் கலந்தாலோசனை செய்யப்பட வேண்டும்.
 4. ஆய்வுப் பணியை ஒருவரோ, இருவர் இணைந்தோ மேற்கொள்ளலாம்.
 5. விண்ணப்பிப்போர் அட்டவனை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

6. ஆளுமைகளைப் பற்றி எழுதும்போது தலித் மட்டுமல்லாது தலித்களுக்காகப் போராடிய தலித் அல்லாதவர்களின் வரலாறும் எடுத்துக்கொள்ளப்படலாம்.

7. எழுதத் தேர்ந்தெடுக்கும் தலைப்பு இதுவரை யாரும் எழுதாததாகவும் / தொகுக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். ஏற்கெனவே எழுதப்பட்டதாக இருப்பின் புதிய கோணத்தில் எழுத வேண்டும்.

 1. எழுதி ஒப்படைக்கப்படும் பிரதிக்குப் பக்க வரையறை கிடையாது. அதே வேளையில் 120 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.
 2. ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்டோர் முடிவு செய்திருப்பின் அவர்கள் அனுப்பும் ஆய்வுத்திட்ட அறிக்கையின் தன்மையையொட்டி ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 3. நிதி நல்கை பெறுவோராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒராண்டு முடியும் போது முழுப் பிரதியும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆய்வுத் திட்டம்:

 • தலைப்பு அறிமுகம் மற்றும் காலகட்டம்
  (அறிமுகம் விரிவாக அமைய வேண்டும்)
 • குறிப்பிட்ட தலைப்பை தேர்ந்தெடுத்ததன் முக்கியத்துவம், அது எழுதப்படுவதற்கான அவசியம் அல்லது பயன்.
 • தலைப்புக்கு உதவும் வகையில் நடந்துள்ள முன்னோடி முயற்சிகள், அவற்றிலிருந்து இந்த தலைப்பு மாறுபடும் அல்லது வளர்த்தெடுக்கும் விஷயம்.
 • இத்தலைப்புக்குப் பயன்படும் தரவுகள்
 • விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021.
 • ஆய்வுத் திட்ட அறிக்கையை Word file-ல் unicode எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.

மெயில் முகவரி:
editor.neelam@gmail.com

தமிழகத்தில் தலித் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நீலம் பதிப்பகம் ஆண்டுக்கு 5 பேருக்கு ரூ.75,000 ஃபெலோஷிப் அறிவித்திருப்பது தமிழக வரலாறு ஆய்வு புலத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் தலித் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்காக நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு குறித்து, தலித் வரலாற்றாசிரியர், இன்றைய தலித் இளைய தலைமுறைகளுடன் தலித் அரசியல் குறித்து உடையாடுகிற எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இடம் பேசினோம். அவர் தலித் வரலாறு தொகுப்பது குறித்தும் அதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இடம் கூறியதாவது: “கடந்த 20 ஆண்டுகளில் தலித் வரலாறு என்ற ஒரு கருத்தாக்கம் உருவாகிருக்கிறது. அதற்கான 2 காரணங்களில், ஒன்று எதிர்மறையான காரணம். அது என்ன எதிர்மறையான காரணம் என்றால், மற்றவர்கள் இவர்களுக்கு வரலாறு இல்லை. நாங்கதான் எல்லாமே என்று கூறுவது. தலித் வரலாறு அதை மறுத்துதான் தொடங்கியது. ஆனால், இன்றைக்கு எதிர்மறைகளைவிட ஒரு பொதுவான நிலையிலேயே இவர்களுடைய வரலாறு என்ன என்று தொகுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

தலித் அறிவுஜீவிகள் முன்பு பெரியாரை விமர்சித்தார்கள். திராவிட இயக்கத்தை முன் வைத்து விமர்சித்தார்கள். ஆனால், நீண்ட காலத்திற்கு இந்த விமர்சனங்களை எதிர்நிலைகளை வைத்தே தலித் அரசியலைக் கொண்டு செல்ல முடியாது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, அப்படி எதிர்நிலைகளை முன் வைக்காமல் இன்றைக்கு இயல்பாகவே தலித்துகள் ஒவ்வொரு பகுதியிலும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது தலித்துகளுக்கு ஒரு போராட்ட வரலாறு இருக்கிறது என்பதை இன்று நாம் தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால், அது தொகுக்கப்படவில்லை. அதுதான் இன்றைக்கு இருக்கிற ஒரு பின்னடைவு.

அதில் ரொம்ப முக்கியமானது, வட்டார வரலாறு எழுதுவது என்ற ஒரு கருத்தாக்கம். நான் அதில் 2-3 விஷயங்கள் உறுதியாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். அதில் என்ன முக்கியமானது என்றால், ஜாதி அமைப்பு எப்படி வட்டார ரீதியானதோ அதே போல அதற்கு எதிரான போராட்டங்களும் வட்டார ரீதியாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த கணிப்பின் அடிப்படை. இதில் ரொம்ப முக்கியமானது, தலித் வரலாறு என்பதும் ஜாதி எதிர்ப்பு போராட்ட வரலாறு எழுதுவது என்பதும் வேறுவேறு கிடையாது.

இதுவேகூட தலித்துகளின் வரலாற்றை தொகுப்பது மாதிரி, ஒரு ஜாதியுடைய வரலாற்றை தொகுப்பது மாதிரி மற்றவர்கள் நம்புவார்கள். ஆனால், நாம் ஏன் இந்த வரலாற்றை தொகுக்கிறோம் என்றால், இவர்களுக்கு ஒரு போராட்ட வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற மாதிரி இருந்திருக்கிறது. ஜாதியை நாம் மொத்தமாக புரிந்துகொள்கிறோம். அது தவறானது. அப்படி புரிந்துகொள்வதால்தான் நாம் ஜாதியை ஒழிக்கவே முடியவில்லை; என்பதால்தான் நாம் முதலில் ஜாதியைப் புரிந்துகொள்வதற்கு அந்தந்த வட்டார வரலாற்றை தொகுக்க வேண்டும் என்கிறோம். அந்த கண்ணோட்டம்தான் இது. ஜாதி மறுப்பு, ஜாதி ஒழிப்பு என்கிற கண்ணோட்டத்திலான வரலாறுதான் இது.” என்று கூறினார்.

தலித் வரலாற்றைத் தொகுப்பதன் மூலம் எந்த மாதிரியான ஒரு மாற்றம் ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் ராஜாங்கம், “ஜாதி எதிர்ப்பு சொல்லாடல்களில் மாற்றம் வரும். ஜாதி எதிர்ப்பு சொல்லாடல்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியானதாகவும் மாறததாகவும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியானதாகவும் ஒரு நூலில் உள்ளது போலவே இருக்கிறது. அப்படி இல்லாமல், ஜாதி என்பதை ஜாதி எதிர்ப்பு போராட்ட வரலாற்றை அந்தந்த வட்டார பின்னணியில் வைத்து தொடர்புபடுத்த முடியும். தொகுக்க முடியும். அதற்கு இந்த நீலம் பதிப்பகத்தின் அறிவிப்பு உதவி செய்யும்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pa ranjiths neelam publication announced fellowship for writing dalit history of tamil nadu

Next Story
தமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்Tamil Suvai - Thirukkural Drama - Ra. Kumar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com