Advertisment

கால் நூற்றாண்டு நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கும் கவிஞர் பிரம்மராஜன்; ஏற்பில்லை என கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் மறுப்பு

கால் நூற்றாண்டு கால நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கும் பணிக்காக கவிஞர் பிரம்மராஜன் படைப்பாளிகளிடம் கவிதை தொகுப்புகளை அனுப்புமாறு கேட்டு அறிவித்திருப்பதும் அதற்கு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் ஏற்பில்லை என தெரிவித்திருப்பதும் தமிழ் இலக்கிய உலகில் விவாதமாகியுள்ளது.

author-image
Balaji E
New Update
கால் நூற்றாண்டு நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கும் கவிஞர் பிரம்மராஜன்; ஏற்பில்லை என கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் மறுப்பு

1990 முதல் 2015 வரை கால் நூற்றாண்டு கால நவீன தமிழ்க் கவிதைகளை தேர்ந்தெடுத்து தொகுக்கும் முயற்சியில் கவிஞர் பிரம்மராஜன் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் இக்கால கட்டத்தில் வெளிவந்த கவிதை தொகுப்பின் பிரதியை அனுப்பி வைக்குமாறு படைப்பாளிகளிடம் கேட்டு அறிவித்துள்ளார். கவிஞர் பிரம்மராஜன் தொகுக்கும் முயற்சியில் கவிதை தொகுப்புகளை கேட்டு பெறும் பணியில் கவிஞர் முனிராசு (எ) கவிஞர் பிரதாப ருத்ரன் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

கவிஞர் பிரம்மராஜனின் நவீன தமிழ்க் கவிதைகள் தொகுக்கும் பணி தனக்கு ஏற்பில்லை என்று கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். கவிஞர் பிரம்மராஜன் கால் நூற்றாண்டு கால நவீன தமிழ்க் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சி தமிழ் கவிஞர்கள் இடையே கவனத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில், கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் ஏற்பில்லை என்று தெரிவித்திருப்பதும் தமிழ் இலக்கியச் சூழலில் விவாதமாகியுள்ளது.

publive-image

தொகுப்பு பணி குறித்து கவிதை தொகுப்புகளை படைப்பாளிகளிடம் இருந்து வாங்குகிற பணியில் ஈடுபட்டுள்ள பிரதாப ருத்ரனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையளத்திற்காக தொடர்பு கொண்டு பேசினோம். பிரதாபர் ருத்ரன் கூறுகையில், “தமிழ்க் கவிதையின் தொனி எப்படி போய்க்கொண்டிருக்கிறது, எதை நோக்கி போய்கொண்டிருக்கிறது? வளர்ச்சி அடைந்திருக்கிறதா? இதற்கு முன்னாடி இருந்தவர்களின் படைப்புகளுடன் ஒப்பிடும்போது, முன்னேற்றம் அடைந்திருக்கிறதா அல்லது பின்னடைவை சந்தித்திருக்கிறதா என்ற ஒரு ஆய்வுதான் இது.” என்று கூறினார்.

நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கிற யோசனை எப்படி உருவானது?

நான் கவிஞர் பிரதாப ருத்திரன். பிரம்மராஜன் தருமபுரியில் இருந்தது முதல் எனக்கு அவர் அறிமுகம். அடிக்கடி நாங்கள் கவிதை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ரொம்ப நாளாக தமிழில் ஒரு இடைவெளி இருக்கிறது. யாரும் கவிதைகள் குறித்து கட்டுரைகள் எழுதாமல் இருக்கிறார்கள். 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கவிதைகளை எடுத்து யாராவது கட்டுரைகளை எழுதியிருந்தால், தமிழ்க்கவிதைகளின் பயணம் எப்படி போயிருக்கிறது என்பது பதிவாகி இருக்கும். அப்படி கட்டுரைகள் எழுதப்படாததால், ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்று அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர், 4-5 ஆண்டுகளுக்கு முன்பு சில கவிதை தொகுப்புகளை சேகரித்துவிட்டு நாம் ஒரு கட்டுரை எழுதலாம் என்று கூறினார். ஆனால், அதற்கான நேரம் 6 மாதத்தில் இருந்து ஒரு வருடம் கூட ஆகிவிடும். அதற்கான உழைப்பு, நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது நமக்கு சில கவிதை தொகுப்புகள் கிடைக்காமல்கூட போய்விடும். ஏனென்றால், நாம் தேடும்போது சில கவிதை தொகுப்புகள் கிடைக்காது. ஆனால், நமக்கு வேண்டும் என்று 4 கவிஞர்களிடம் கேட்கும்போது கண்டிப்பாக அனுப்புவார்கள். கேட்கும்போது சில பேர் ஒதுங்கிச் செல்பவர்களும் இருக்கிறார்கள். ஒதுங்கிப்போகிறவர்களைப் பற்றி கவலை இல்லை. ஆனால், கொடுக்க வேண்டும் என்று வருகிறவர்களிடம் அவர்களிடம் என்ன இருக்கிறது, என்ன கொடுத்தார்கள், அதில் உபயோகமான என்ன இருக்கிறது என்று பார்ப்பது என்பதுதான்.

அதன் பிறகு, கட்டுரைகளை எழுதிதான் இந்த தொகுப்பை கொண்டுவரப் போகிறோம். உண்மையில் இந்த பணி ஒரு கட்டுரை எழுத முயன்றுதான் கவிதை தொகுப்புகளைக் கொண்டுவரும் பணியாக வந்து நிற்கிறது. அப்படி தொகுப்பாக கொண்டுவரும்போது எல்லா கவிஞர்களும் உள்ளே வந்துவிடுவார்கள். அப்படி வரும்போது அதிலிருந்து கவிதை போக்குகளின் ஒரு தொனி நமக்கு கிடைக்கும். அதனால்தான், இப்படி ஒரு தொகுக்கும் பணியை திட்டமிட்டு அறிவித்துள்ளாம்.

பிரம்மராஜன், கால் நூற்றாண்டு நவீன தமிழ்க் கவிதைகளைத் தொக்கும் பணி தனக்கு ஏற்பில்லை என்று கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் கூறியுள்ளாரே?

நாம் செய்கிற ஒரு விஷயம் 4 பேருக்கும் புடிக்குமா என்பது தெரியாது. இந்த பதிவில் அவர் விட்டுப்போய்விடக் கூடாது என்ற காரணத்துக்காகத்தான், நான் தான் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அவர் உடனடியாக எதிர்வினையாற்றுகிறார். ஆனால், இதில் அவர் மட்டுமே தனியாக தெரிகிறார். அவர்மட்டும்தான் இதிலிருந்து எதிர்நிலைக்கு செல்கிறார் என்று பிரதாப ருத்ரன் கூறினார்.

இப்படி தொகுக்கும்போது, காப்புரிமை சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது இல்லையா?

காப்புரிமை பிரச்னை வரக்கூடாது என்பதற்காகத்தான், கவிஞர்களின் உறுதி மொழியுடன் அவர்களுடைய கவிதைகளை பிரதியாக நாங்கள் கேட்கிறோம். முதலில், படைப்பாளி அவருடைய கவிதை தொகுப்பை சம்மதப்பட்டு அனுப்பிவிட்டார் என்றாலே அவர் இதற்கு உள்ளே வந்து விடுகிறார்.

இரண்டாவது அவருக்கு நாங்கள் ஒப்புதல் கடிதம் மாதிரி ஒன்றை அனுப்புவோம். பிறகு, இந்த தொகுப்பில் யார் யார் கவிதை இடம் பெற்றுள்ளதோ அவர்களுக்கு ஒரு படிவத்தை அனுப்புவோம். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதையை தொகுப்பில் பிரசுரிக்க ஆட்சேபனை இல்லை. நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உறுதிமொழி பெறுவோம். சட்டப்படி எல்லா படைப்பாளிகளிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

கவிஞர்கள் பலரும் தங்கள் கவிதை தொகுப்புகளை அனுப்புவதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதல் எதிர்ப்பு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணனிடம் இருந்துதான் வந்திருக்கிறது. அந்த தளத்தில் பார்த்தால் அவர் மட்டும் தனியாக நிற்கிறார் என்று கவிஞர் பிரதாப ருத்ரன் கூறினார்.

படைப்பாளிகள் கவிதை தொகுப்புகளை இந்த தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற அறிவிப்பு ஏதாவது வெளியிட்டிருக்கிறார்களா?

அப்படி தேதி எதுவும் அறிவிக்கவில்லை. இப்போதுதான் அறிவித்துள்ளோம். கவிதை தொகுப்புகளின் வரவைப் பொறுத்துதான் அந்த தேதியை அறிவிப்போம். இந்த அறிவிப்பு வெளியாகி ஒருவாரம் தான் ஆகி இருக்கும். அதற்குள் இப்படி ஒரு சின்ன சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தலைப்பை ஜீரணித்துக்கொள்ள முடியாததாலா? அல்லது இது எந்த மாதிரி போகும் என்று தெரியாததாலா? என்று தெரியவில்லை.

லக்ஷ்மி மணிவண்ணன், கவிஞர் பிரம்மராஜனை தமிழ்ச் சூழலின் அசல் போலி என்று விமர்சிக்கிறார்?

“இன்றைக்கு இலக்கியத்தில் இருக்கிற ஜாம்பவான்கள் எல்லோரும் மீட்சியில் இருந்து வெளியே வந்தவர்கள். அப்போது சொல்ல வேண்டியதுதானே, இது ஒரு போலித் தனமான ஒரு மீட்சி. இது ஒரு போலித்தனமான சிற்றிதழ். நாங்கள் பங்களிக்க மாட்டோம். நாங்கல் கவிதை கொடுக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டியதுதானே. அந்த லேபிளில் (label) இருந்து வெளியே வந்துவிட்டு, இப்போது அந்த லேபிளையே அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், கோளாறு யார்கிட்ட இருக்கிறது?” என்று கவிஞர் பிரதாப ருத்ரன் கேள்வி எழுப்பினார்.

நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கும் கவிஞர் பிரம்ம ராஜனின் முயற்சி குறித்து தமிழ் நவீன கவிதையில் முக்கியக் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “பிரம்மராஜனின் தொகுக்கும் பணி எனக்கு ஏற்பில்லை

அந்த பணிக்கு என்னுடைய நூல்களைக் கேட்டு பிரதாப ருத்ரன் என்பவர் தொடர்பு கொண்டிருந்தார்.எனக்கு ஏற்பில்லை மன்னித்துக் கொள்ளுங்கள் என பதில் செய்திருக்கிறேன்

முக்கியமான காரணம் பிரம்மராஜனை கவிதை அறிந்தவர் என நான் கருதவில்லை.இலக்கியம் அறிந்தவர் என்றும் நான் கருதவில்லை.தமிழ் சூழலின் அசல் போலி அவர் .சிந்தை திரிந்தவர்,இலக்கியம் அல்லாத உள நோக்கங்களின் பொருட்டு ஒரு காலத்தில் இலக்கியத்தில் ஈடுபட்டவர்

பிரம்மராஜன் தொகுப்பாளர் எனில் என்னால் ஒத்துழைக்க இயலாது.அது குரங்கு தொடுக்கவிருக்கும் பூமாலைக்கு நிகர்.குறிப்பிட்ட காலகட்டத்தை சுட்டி தொகுக்கவிருக்கும் ஒருவருக்கு அதன் படைப்புகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.இனிதான் அவர் படைப்பாளிகளிடம் இருந்து தொகுப்புகளைப் பெற்று சேகரிக்க வேண்டும் எனில் அது போன்ற மூடத்தனம் வேறில்லை.ஏற்கனவே அறிந்ததில் நினைவில் உள்ளவற்றை சேகரிக்கத்தான் ஒரு தொகுப்பாசிரியருக்கு பிரதிகள் தேவைப்பட வேண்டுமே அல்லாது,பிரதிகளை அனுப்பி தொகுப்பாசிரியர் தேர்வு செய்வார் எனில் தமிழ் கவிதைகளின் தாள் திருத்தும் பணிக்கு அவர் வெளி மாநிலத்தில் இருந்து அவர் வந்திருக்கிறாரா என்ன ?

பிரம்மராஜன் இலக்கிய போலி மனநிலைக்கு அசல் சான்றாக கூடிய வெற்று நபர் .அவர் யார் என்று கூட இப்போது யாரும் அறிய மாட்டார்கள்.அவர் பெயரை சுட்டுபவர்களும் கூட அந்த உளப்பாங்கு நிறைந்தவர்கள் என்பதே என்னுடைய புரிதல்.அவர் சம கால கவிதை தொகுப்பொன்றை கொண்டுவருவார் எனில் அதனை நிராகரிக்க வேண்டியதே என் பணி

நான் அறிந்தவரையில் இப்படியான ஒரு தொகுப்பை முன்னெடுக்க அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு நபர் தற்போதைய சூழலில் கவிஞர் விக்ரமாதித்யன் மட்டுமே.தேவதேவனுக்கோ ,தேவதச்சனுக்கோ கூட தொகுக்கும் தகுதி கிடையாது.ஏனெனில் அவர்கள் தங்களை மட்டும் அறிந்தவர்களே அன்றி பிறரை அறிந்தார் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கால் நூற்றாண்டு கால நவீன தமிழ்க் கவிதைகளை தொகுக்கும் பணிக்காக கவிஞர் பிரம்மராஜன் படைப்பாளிகளிடம் அவர்களுடைய கவிதை தொகுப்புகளை அனுப்புமாறு கேட்டு அறிவித்திருப்பதும் அதற்கு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் ஒரே நேரத்தில் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment