உறுத்தும் உச்சரிப்பு

தமிழர்கள் தமிழ் மொழியை உச்சரிப்பதில் எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள். மற்ற மொழியினர் உச்சரிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை விவரிக்கிறது.

மகேஷ்.கே

ஒரு மொழியைப் போற்றுவதும், பண்பாட்டைப் பேணுவதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த மொழியை சிதைக்காமல் பேசுவதும். ஆனால் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை, தமிழை தாய் மொழியாக கொண்டவர்களும், தமிழ் மொழி படித்தவர்களும் கூட சரியாக உச்சரிக்கிறார்களா? இல்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.

குறிப்பாக, சில சொற்கள் தமிழ் மக்களிடம் படும் பாடு சொல்லி மாளாது. ல, ழ, ள இவைகளுக்குள்ள வேறுபாடு, ’ன’ வுக்கும் ’ண’ வுக்கும் உள்ள வித்தியாசம், ’ஞ’ உச்சரிப்பு, ’ற்ற’ உச்சரிப்பு இவை பலருக்கு தெரிவதில்லை அல்லது அதைப் பொருட்படுத்துவதில்லை.

குளத்தில் போடுவோம்

பெரும்பாலானவர்களுக்கு வெல்லம்-வெள்ளம்; குரல்-குறள்; புலி-புளி இவற்றை பிரித்தறிந்து பேசுவதில்லை. பலம் என்பதை பளம் என்று சொல்பவர்தான் அதிகம். ழகரத்தை சரியாக உச்சரிப்பவர் மிகச்சிலரே.
கடந்த தலைமுறையினரை ஒப்பீடு செய்யும்போது, இந்த தலைமுறையினரில் பலரின் உச்சரிப்பு மோசம். அடுத்த தலைமுறையிலோ, நல்ல உச்சரிப்பு செய்பவர்களை விரல் விட்டு எண்ணும் நிலைமை. வருங்கால சமூகத்தின் ஆதாரமான இக்கால பள்ளிக்குழந்தைகள் கூட சரியாக உச்சரிப்பதில்லை என்பதுத்தான் கவலை தரும் விஷயம்.

இதற்கு மூலகாரணங்களை ஆராய முற்பட்டால், வருந்தத்தக்க உண்மைகள் வெளிப்படுகின்றன. நுனி நாக்கில் உச்சரித்தால் லகரம், மெலிதாக நாக்கை மடித்து உச்சரிப்பது ளகரம், ஆழ்ந்து மடித்து உச்சரிப்பது ழகரம் என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய தமிழ் ஆசிரியர்களே குளத்துக்கு போடுற ள, பழத்துக்கு போடுற ள (அந்த ழ -வைத்தான் இப்பிடி சொல்றாரு), இலைக்கு போடுற ள (அட அந்த ‘ல’ ப்பா) என்று சொல்லிக்கொடுப்பதை கேள்விப்பட்டேன். இவர்களைத்தான் குளத்தில் தூக்கிப்போட வேண்டும்.

தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, அதன் எழுத்துக்களின் உச்சரிப்பு நாக்கைப் பயன்படுத்தும் இலாகவத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது. மற்ற மொழிகளில் இருப்பதைப்போல் (ka, kha, Ga, Gha) உச்சரிப்பவர்கள், எழுத்துக்களை வேறுபடுத்துவதற்கு மூச்சை செலவழிப்பதில் தமிழ் மொழிக்கு உடன்பாடில்லை.

னகரம்

ஜன்னலை ஜன்ணள் என்றும் பணத்தை பனம் என்றும் மனம் விரும்புதேவை மணம் விரும்புதே என்றும் சொல்வது நம்மிடையே மிக சாதாரணம்.

கலைஞர் படும் பாடு

ஞகரம் நம்மர்களிடம் படும் பாடு மிகக் கொடுமை. கலைஞர் என்பதை கலைஞ்சர் என்றும் கலைங்கர் என்றும் சொல்வதை பார்க்கும்போது தமிழுக்கு ஏன் இந்த சோதனை என்று கதறத்தோன்றும்.

ஞானசேகர் என்று பெயர்கொண்டவர்கள் பலர் தங்கள் பெயரையே கானசேகர் (Gaana) என்றுதான் சொல்கிறார்கள்.

குத்தம் குற்றமே.

கற்றல் என்பதை கட்ரல் என்று உச்சரிப்பதை பரவலாக பார்க்க முடிகிறது.

நறுமுகையே பாடலில் (Movie: Iruvar: “>Link) அற்றை திங்கள், நெற்றித்தரள, கொற்றப்பொய்கை, ஒற்றைப்பார்வை என்னும் சொற்களை உச்சரிப்பதில் இரு பாடகர்களுக்கு உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ’ற்ற’ என்று வரும் சொற்களை ’த்த’ என்று வட்டார வழக்காக வசதியாக மாத்தி,……( பாத்தீங்களா நானே மாற்றி எழுதிவிட்டேன்) வைத்துவிட்டோம். குற்றம், குத்தம் ஆனதும், சுற்று, சுத்து ஆனதும், ஒற்றை ஒத்தை ஆனதும் என பல உதாரணங்கள் இருக்கின்றன. இவ்வாறு, ற்ற வழக்கொழிந்து வருவதால் அது உச்சரிக்கப்படும் விதம் பெரிதாக தெரிவதில்லை.

எங்கெங்கும் எங்கெங்கும்

இது மாதிரியான உச்சரிப்பு பிழைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த காலம் மாறி, இப்பொழுது பிழைகள் இல்லாமல் உச்சரிப்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதுதான் காலக்கொடுமை.

தமிழை பிழைப்பு மொழியாக கொண்டிருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பதுதான் சகிக்க முடியாத வேதனை. உதாரணத்திற்கு, கவிஞர்களாக, திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தமிழ் செய்தித்தொகுப்புகளை பார்த்து படிக்கும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பவர்கள் கூட உச்சரிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பது மன்னிக்கக்கூடிய குற்றமா என தெரியவில்லை. பலத்தை பளம் என்றும், களத்தை கலம் என்றும், கொலையை கொளை என்றும், அப்துல் களாம் என்றும்தான் செய்தி வாசிக்கிறார்கள்.
மாணவர்கள், தொலைக்காட்சியில் பேசும் தமிழ் ஆசிரியர்கள், நெறியாளர்கள், தொலைக்காட்சி பாடல் போட்டியாளகர்கள் இவர்கள் கூட ஒழுங்காக உச்சரிப்பதில்லை. பாடல்ககளின் ஸ்ருதியையும், தாளத்தையும் திருத்தும் நடுவர்களின் பலர், உச்சரிப்பை திருத்துவதில்லை.

முந்தைய தலைமுறையில், அண்டை மாநிங்களில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் தஞ்சம் புகுந்த நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் தமிழ் உச்சரிப்பிற்கு கொடுத்த மரியாதையில் கால் பங்கு கூட இந்த தலைமுறை நட்சத்திரங்களோ, இசை அமைப்பாளர்களோ, பின்னணி பாடகர்களோ கொடுப்பதில்லை.
ஒரு காலத்தில் அரசியல் மேடைகளில் பெரிதும் கோலோச்சி நின்றது தமிழ். ஆனால் இன்றைய தலைமுறை அரசியல் தலைவர்களில் பலர் தமிழை சரியாக உச்சரிப்பது கூட இல்லை.

மற்றவர்களிடமிருந்து பாடம்

இந்த சாபக்கேடு தமிழர்களிடையே மட்டும்தான். அண்டை மாநிலங்களில் அவரவர் மொழிகளை சரியாகவே பேசுகிறார்கள். கன்னடர்களும், தெலுங்கர்களும் அவர்கள் மொழிகளில் உள்ள Ka, Ga, Gha இவற்றை அவ்வளவு நேர்த்தியாக உச்சரிக்கிறார்கள். மலையாளிகள் ழ -வை சீர் கெடாமல் உச்சரிக்கிறார்கள். களி -கழி, அரி-அறி இவற்றை மிக தெளிவாக பிரித்தறிந்து கையாளுகிறார்கள்.

நமக்கு மட்டும் ஏன் அது முடியவில்லை. ஒன்று அறியாமை அல்லது அதை பொருட்படுத்தாமை.
ஆங்கிலத்தில் பேசும்போது, பிழை நேர்ந்துவிட்டால் அவமானமாக கருதும் நம்மவர்கள், தமிழ் உச்சரிப்பை பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். கலாச்சார காவலர்களாக ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்களில் கட்டிக்கொள்ளும் நாம், கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் மூத்த குடியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட நம் மொழிக்கு கொடுப்பதில்லை என்பதுதான் வேதனை.

இந்த சொற்களை உச்சரிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா? இருக்க முடியாது. ஏவுகலன் அறிவியலிலும் (Rocket Science), சிக்கலான வழிமுறைகளை (complex algorithms) மற்றும் கணித சூத்திரங்களை கையாள்வதில் கொடி கட்டிப்பறக்கும் நம்மவர்களுக்கு மொழியை சிதைக்காமல் உச்சரிப்பது கடினம் என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. முயற்சியின்மையும், பயிற்சியின்மையும் மட்டுமே காரணிகளாக இருக்க முடியும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். இனியாவது குறைந்தபட்ச மெனக்கடலோடு மொழியை சரியாக உச்சரிப்போம். தமிலை கொளை செய்யாமள் பேசுவோம்.

கட்டுரையாளர் மகேஷ். கே பெங்களூரில் உள்ள எம்.என்.சி நிறுவனத்தில் மூத்த முதன்மை தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

×Close
×Close