மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம் எழுத்தாளர் இமையத்திற்கு அவருடைய செல்லாத பணம் நாவலுக்காக 2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை வெள்ளிக்கிழமை அறிவித்தது. எழுத்தாளர் இமையத்திற்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் இமையம், கோவேறு கழுதைகள் நாவல் மூலம் நுழைந்து தமிழ் இலக்கிய உலகில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தினார். இந்த நாவல் தலித் சாதிகளுக்கு இடையே நிலவும் பாகுபாடுகளையும், சுரண்டலையும் பேசுகிறது. 25 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமான படைப்புகளை அளித்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தமிழகத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் சாதி, பாலினம் ஆகியவற்றால் அவர்கள் அடையும் அவலத்தையும் தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இலக்கிய ஆய்வாளர்கள், வாசகர்கள், எழுத்தாளர் இமையத்தின் படைப்புகள் தலித் வாழ்க்கையை பேசுபவை என்று தமிழ் இலக்கியத்தின் காத்திரமான தலித் எழுத்தாளர் என்று கூறினாலும். தனது படைப்புகள் மீது தலித் என்றும் தன்னை தலித் எழுத்தாளர் என்று கூறுவதையும் அவர் மறுப்பவர். தலித் இலக்கியம் என்றால் ஏன் மற்றவர்கள் எழுதும் இலக்கியங்களை அவர்களின் சாதியின் பெயரால் அழைக்கப்படுவதில்லை என்று கேள்விகளை முன்வைப்பவர்.
எழுத்தாளர் இமையம், கோவேறு கழுதைகள் நாவலைத் தொடர்ந்து, ஆறுமுகம், செடல், எங்கதெ, ஆகிய நாவல்களையும் பெத்தவன் என்கிற குறுநாவலையும் எழுதியுள்ளார். பெத்தவன் நாவல் சாதி ஆணவக் கொலைகளை மையப்படுத்திய கதை அது.
எழுத்தாளர் இமையம் நாவல்கள் மட்டுமல்லாமல், மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவு சோறு, நறுமணம், நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள், ஆங்கிலம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இமையம் தனது படைப்புகளுக்காக அக்னி அஷ்ர விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, பெரியார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, தமிழக அரசின் தமிழ்த் தென்றல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி 2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக பொதுச்செயாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான எழுத்தாளர் ரவிக்குமார், எழுத்தாளர் அழகிய பெரியவன் மற்றும் வாசகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் இமையத்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம் அவர்கள். திராவிட பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து தமிழக எழுத்துலகிற்கு அறிமுகமான இமையம் அவர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிறுகதை மற்றும் நாவல்களாக எழுதி வருகிறார். எளிய மக்களின் வாழ்க்கை நிலைகளை மிகவும் எதார்த்தமாகவும், காத்திரமாகவும் வெளிப்படுத்தும் வகையில் இவர் எழுதிய கோவேறு கழுதைகள், பெத்தவன் உள்ளிட்ட பல நூல்கள் தமிழகத்தில் பெரும் வாசகப் பரப்பை சென்றடைந்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் எளிய முறையில் தன்னுடைய எழுத்தால் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்த எழுத்தாளர் இமையம் அவர்களின் படைப்பில் சமீபத்தில் வெளியான “செல்லாத பணம்” நாவலுக்கு மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கிறது.
சாகித்ய அகாதெமி விருது பெறும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் உழைக்கும் மக்களின் வாழ்வியலோடு இணைந்த சிறந்த பல படைப்புகளை தொடர்ந்து படைத்திடவும், பல்வேறு விருதுகளை பெறவும் வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.