சிறுகதை : பெருச்சாளி

தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டங்களை, சிலர் நயவஞ்சகமாக எப்படியெல்லாம் சீர்குலைக்கிறார்கள் என்பதை ச.கோசல்ராம் அழகாக படம் பிடித்துள்ளார்.

By: Published: July 13, 2017, 3:52:38 PM

ச.கோசல்ராம்

தார் சாலையில் இருந்து விலகி புழுதிக் கிளப்பும் மண் சாலையில் பயணிக்கத் தொடங்கியது மினி பேருந்து. சாலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏறி இறங்கி ஆடியபடி சென்றுகொண்டிருந்தது. வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகம். விசேஷ நாட்கள் என்றால்தான் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். அல்லது பக்கத்து ஊர்களில் ஏதாவது இறப்பு நடந்தால்! இன்று அதிகக் கூட்டம். ஆளாளுக்குத் தொங்கிக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு தினுசானவர்களாக இருந்தார்கள். அந்த ஊருக்கு சம்மந்தமில்லாத முகங்கள். அல்லது, பார்த்திராத முகங்கள்.

பேருந்தில் இருந்த உள்ளூக்காரர்கள் சிலரில் சிமோனாவும் ஒருவர். சென்னையில் தங்கி படித்து வரும் அவர் விடுமுறைக்காக ஊருக்கு வருகிறார். மினி பஸ்சின் அரை மணி நேர பயணம், அவரை ரொம்பவே அவதிக்குள்ளாக்கியது.

பேருந்தில் இவ்வளவுக் கூட்டத்தை சிமோனா பார்த்தது இல்லை. ஆச்சரியத்தோடே ஒவ்வொரு முகத்தையும் பார்த்தாள். யாரும் தெரிந்தவர்களாக இல்லை. இவர்கள் எங்கு செல்பவர்களாக இருக்கும்? என்ற யோசனை அவளுக்குள் ஓடியது. பக்கத்து ஊர்களில் ஏதாவது கல்யாணம், காதுகுத்து, சடங்கு வீடு இப்படி ஏதாவது இருக்கலாம். ஆனால் இது போன்ற விசேஷங்களுக்குத்தான் பெண்கள்தான் விதவிதமான புடைவைகள் அணிந்து, ஏராளமான நகை நட்டுகளில் அசையும் தேராக வருவார்கள். ஆனால் பேருந்தில் பெண்கள் கூட்டமே இல்லை. எல்லாம் ஆண்கள். அவர்களின் முகங்கள், உழைத்து களைத்த அல்லது வறுமை எட்டிப்பார்க்கும் முகங்களாகத் தெரிந்தது.

பேருந்து ஆடி அசைந்து அரச மரத்தடியில் நின்றது. ஒட்டு மொத்த கூட்டமும் அடித்துப் பிடித்து இறங்கியது. கீழே இறங்கியவர்கள், வேக வேகமாக ஓடினார்கள்.

சிமோனாவுக்கு, இவர்கள் இவ்வளவு அவசரமாக ஓடுவது ஏன் என்பது புரியவில்லை. அனைவரும் இறங்கிய பின்னர், மெல்ல இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். அவள் முகத்தில் ஆச்சரியம் தொற்றிக் கொண்டிருந்தது.

எதிரில் கைகுழந்தையோடு ஒரு பெண் வந்து கொண்டு இருந்தாள். இன்னொரு கையில் பீடித் தட்டு.
‘சனியன்… ஏன் தான் இப்படி ஓடுதுவளோ. எதிர்ல ஆள் வர்றது கூட தெரியாம…’ என்று கெட்ட வார்த்தையால் திட்டியபடி வந்தாள்.

சிமோனா அருகில் வந்ததும், ‘தாயி, நீ சொர்ணக்கா மவ தான… எப்டி இருக்க?. அடுத்த வாரம்தான வர்றதா அம்ம சொன்னா?’ என்றபடி நின்றாள் அந்தப் பெண். சென்னை சென்றதும் சிமோனா முகத்தில் தெரியும் மாற்றங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள் அவள்.

‘காலேஜ் லீவ் விட்டாச்சு… அதான் சர்பிரைஸா வந்துட்டேன்…’ என்று சிரித்தவள், ‘இவங்கல்லாம் யாரு.. ஏன் இந்தா ஓட்டம் ஓடுதாவோ?.’ என்று கேட்டாள்.

‘நீ வீட்டுக்குத்தான போற… வழியில பார்ப்ப…’ என்று சொல்லியபடியே , ‘மெட்ராஸ்ல போயி மூக்கு குத்திக்கிட்டியோ? ஒனக்கு நல்லாதாம் இருக்கு’ என்று பாராட்டிவிட்டுச் சென்றாள் . அவள் சொன்னதை அடுத்து மூக்குத்தியை தடவிப் பார்த்துக்கொண்டாள் சிமோனா.

சில நூறு அடிகள் நகர்ந்ததும், அவளுக்குத் திக்கென்றது. கப்பென்று அழுகிய பழத்தின் வாசனை மூக்கில் அடித்தது. வெள்ளையும் சுள்ளையுமாக சிலர் புல்வெளியின் ஓரத்தில் மல்லாந்து கிடந்தார்கள். யாரோ முன் பின் தெரியாத அண்ணன் ஒருவன் ஏங்கி ஏங்கி வாமிட் எடுத்துக்கொண்டிருந்தான்.

சிலர் வட்டமாக ரோட்டில் குத்த வைத்திருந்தார்கள். ‘ஏல, மூணு ரவுண்டுலயே ஒங்க மாமான் பொத்துன்னு விழுந்துட்டான். தூக்கி விடணுமா, மூதிய?’ என்று கேட்டான் ஒருத்தன்.

‘வயசாவுதுலால’ என்றான் மற்றொருவன்.

ஒருவர் தள்ளாடியபடி காற்றில் கையை அசைத்து யாரையோ எச்சரித்துக்கொண்டிருந்தார். அது காற்றுக்கான எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். டாஸ்மாக் கடையில் கூட்டம் அலை மோதியது. தரையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்த ஒருவன், சிமோனாவை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் இந்த நாற்றம் தாங்காமல் வேகமாக நடப்பதில் குறியாக இருந்தாள்.

‘மாப்ள, யாருல இது புதுசா இருக்கு?’

‘யாரா இருந்தா என்னல, தூக்கிருமா சொல்லு?’

‘ஆமா. அந்தானி தூக்கி கிழிச்சிருவ… மூதிக்கு வாயை பாரேன்’ என்றதும் அவர்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

சிமோனா இதைக் கேட்டும் கேட்காததும் போல், வேகமாக நடந்தாள்.

பீடி சுற்றிக் கொண்டு இருந்த சிமோனாவின் அம்மா சொர்ணம், மகளைப் பார்த்ததும் தட்டை எடுத்து வைத்துவிட்டு வேகமாக ஓடி வந்து, அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள்.

‘அடுத்த வாரம்தான வாரம்னு சொல்லியிருந்த… அதுக்குள்ள வந்துட்ட…’ என்று கேட்டபடியே பெட்டியை வைத்துவிட்டு தண்ணீரை கொடுத்தாள்.

‘ஆமா. வந்துட்டேன்’ என்றவள், ‘ நம்மூருக்கு என்னாச்சும்மா?’ என்று விசாரித்தாள்

‘உன்னை பைக்ல கூட்டிடு வரணும்னு அப்பா சொன்னாரு… நீ திடுதிப்புன்னு வந்து நிய்க்கெ…’

‘நான் என்ன கேக்கேன், நீ என்ன சொல்லிட்டு இருக்கெ?’

‘நீ ஊருக்கு வந்து ஆறு மாசமாச்சு. அதுக்குள்ள எல்லாம் மாறிப்போச்சு. எல்லா ஊர்லயும் சாராய கடைய அடச்சுட்டாங்க. டவுணுக்கு பிறகு நம்ம ஊர்லதான் தாயி கடை இருக்கு. மேக்கு பக்கமா போனா தென்காசி போணும். வடக்கன்னா, சுரண்டைக்கு போவனும். அதான் எல்லா குடிகார பயல்வளும் இங்க வந்துடுதானுவ. அதோட நண்டு சிண்டுலாம குடிக்க பழவியாச்சு’ என்றாள், அம்மா.

‘பக்கத்து ஊர்ல இருந்த கடையெல்லாம்?’

‘அந்த ஊர்ல ,இளவட்ட பயலுவோளாம் போராட்டம் நடத்தி கடைய மூடிட்டாங்க…’

‘நம்ம ஊர்ல இளவட்ட பசங்களே இல்லியா..’

‘எப்ப கண்ணு வந்த…’ என்று அப்பா வர ,அந்த சாராயக் கடை பேச்சு நின்று போனது.

ளம் மஞ்சள் நிற வெயிலில் நின்று கொண்டு டீ குடித்துக் கொண்டு இருந்தாள், சிமோனா.

‘எப்பக்கா வந்த?’ என்று கேட்டப்படியே வந்தான், முருகன்.

‘என்ன நடக்குது நம்மூர்ல. ஊருக்குள்ள நடக்க முடியல. நீங்கலாம் என்னல பண்ணுதீங்க?.’ காலையில் இருந்து அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை சித்தப்பா மகன் முருகன் மீது காட்டினாள்.
‘என்னக்கா பண்ண?. ஊரு நாலஞ்சு பிரிவா பிரிஞ்சு இருக்கு. யாரும் ஒத்துமையா வர மாட்டேங்கிறாங்க…’

‘ வர்ற வழியில பாக்குறேன். ஒரு சின்ன பையனுக்கு சாராயத்த ஒருத்தன் வாயில ஊட்டி விடுறான். இதை எப்படி அனுமதிக்க முடியும்?’ கோபம் கொப்பளிக்கக் கேட்டாள்.

‘ஒன்னு பண்ணலாம். பக்கத்து ஊர்ல குழந்தைகள் இல்லம் நடத்துற திருவன்கிட்ட பேசலாம். அவர் வந்தா, மத்தவங்க நம்பிக்கையோட வருவாங்க…’

‘நல்ல ஐடியா. நானும் வாறேன். அதுக்கு முன்னால ஊர்ல உள்ள பசங்ககிட்ட நீ பேசு. நான் பொம்பளைங்ககிட்ட பேசுறேன்.’ என்று சொன்னவள், டீ கிளாசை வைத்துவிட்டு, முருகனுடன் ஒவ்வொரு வீடாகச் சென்றாள்.

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு போராட்டப் பந்தல் நிரம்பி வழிந்தது. முருகனும், சிமோனாவும் ஆவேசமாக டாஸ்மாக்கு எதிராக கோஷம் போட்டார்கள்.

‘பெண்கள் ஏன் படிக்கணும்? என்பதற்கு நீ தான் உதாரணம். ஒரு படிச்ச பெண் நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்பதை நிருபிச்சிட்ட…’ சிமோனாவைப் பாராடினார், திருவன்.

‘ஆர்ப்பாட்டம் என்பது டோக்கன் தான். கடைய மூடுற வரையில் போராடணும். அதுக்கு நீங்க துணை நிக்கணும்…’

‘கண்டிப்பா. ஆனா, இந்த போராட்டத்தை பெண்கள் போராட்டமா மாத்தினது நீ தான்.’

‘இன்னைக்கு ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும்தான் போலீஸ் அனுமதி கொடுத்திருக்கு… அடுத்து என்ன பண்ணலாம்னு நீங்க வியூகம் அமைங்க…’ உற்சாகமாக சொன்னாள் சிமோனா.

‘காந்திய வழியில் தொடர் போராட்டம் நடத்துவோம். அப்பதான் வெற்றி கிடைக்கும்.’

‘எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.’

சிமோனா பக்கத்து தெருவில் நடந்து போய் கொண்டிருந்தாள். கூடவே தம்பி முருகனும். எதிரில் அந்த ஊரின் பெரிய மனிதர் கருணா மூர்த்தி வந்து கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்து நகரத்தில் பெரிய துணிக்கடை இருக்கிறது. ஊருக்கு வரும் போது கர்ணன் போல, யார் வந்து நின்றாலும் நூறு ரூபாய் கொடுப்பார். அதனாலேயே அவர் சொல்வதைக் கேட்க ஒரு கூட்டம் பின்னாலேயே சுற்றும். அதை வைத்துக் கொண்டு ஊரில் பெரிய மனிதர் வேடம் போட்டுக் கொண்டு இருந்தார். அவருடைய மூலத்தைக் கிண்டினால், யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். ஆனால் யாரைப் பார்த்தாலும் பாசத்தோடு பேசுவது போல நடிப்பதில் அவரை விட கில்லாடி யாரும் இல்லை.

’தங்கச்சி… எப்படி இருக்க…’

‘நல்லா இருக்கேண்ணே… நீங்க , வீட்ல எல்லாரும் நலமா?’

‘எல்லாரும் சொன்னாங்க. ரொம்ப பெருமையா இருந்துச்சு… வெளியூர்ல போய் படிச்சதால உனக்கு தைரியம் இருக்கு… நல்ல காரியம் பண்ணம்மா…’

‘நீங்களும் போராட்டத்துக்கு வந்தீங்கன்னா… நல்லா இருந்திருக்கும்…’

‘என்னம்மா இப்டி சொல்லிட்ட… அன்னைக்கு நான் ஊர்ல இல்ல. அதான் வரல…’

‘அப்ப அடுத்தவாரம் உண்ணாவிரதம் வச்சிருக்கோம்… நீங்க கண்டிப்பா வந்திடணும்…’

‘என்னம்மா இப்படி சொல்லிட்ட… அதுக்கு முன்னால ஊர் கூட்டம் போட்டு, வீட்ல இருக்கிற எல்லோரும் போராட்டத்துக்கு வரனும்னு சொல்லிடுதேன்…’

‘நல்லதுங்க…’

‘போராட்டத்துக்கு நானே தலைமை தாங்குறேன்… போலீஸ் அடிச்சா முதல் அடி என் மேல விழட்டும்…’

‘காந்திய வழியில அறப்போராட்டம்தான் நடத்தப் போறோம்…’

‘ரொம்ப நல்லதா போச்சி… ஊர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்…’ என்று சொன்னபடியே கடந்து போனார்.

‘அக்கா… அவர ஏன் கூப்பிட்ட…’ அதுவரை அமைதியாக இருந்த முருகன் கேட்டான்.

‘அவரு எவ்வளவு ஆர்வமா இருக்கார். ஊர் கூட்டம் போடுறேன்றார்… போலீஸ் அடிச்சா முதல் அடி என் மேல விழட்டும்ங்கிறார்… அவரை கூப்பிடக் கூடாதுன்னு ஏன் சொல்ற…’

‘விசயமே தெரியாம பேசுற. அவங்க பங்காளிதான் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்திருக்கார். இன்னொரு பங்காளிதான் கடையை வாடகைக்கு கொடுத்திருக்கார். அவர் எப்படி நம்ம கூட போராடுவார்? கட்டுச் சோத்துல பெருச்சாளிய வைச்சு கட்டுற… அந்தாளு போன இடம் எதுவும் உருப்பட்டதே இல்ல.’

‘போராட்டத்துக்கு யார் வந்தாலும் ஆதரிக்கணும்.. சந்தேகப்படக் கூடாது.’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள், சிமோனா.

ருவாரமும் பம்பரமாக சுழன்று வேலை செய்தாள், சிமோனா. போராட்டம் ஆரம்பித்த அன்று முன்பை விட கூட்டம் குறைவாகவே இருந்தது.

’முருகா… ஏன் கூட்டம் குறைவா இருக்கு…’

‘அதான் சொன்னேன்ல… அந்தாளு வந்தா பாதி பேரு வரமாட்டாங்கன்னு சொன்னேன்ல… நீதான் புரிஞ்சுக மாட்டேன்கிற…’

‘முதல் ஆளா வந்து என்னமா பேசினார் பாத்தியா… அவரை போய் குறை சொல்லிகிட்டு. போய் வேலையைப் பார்..’

கூட்டத்தில் பெண்கள், பள்ளி மாணவிகள் என ஊரே திறண்டு நின்றது.

‘இந்த கூட்டத்துக்கு நீ தாம்மா காரணம்.’ அருகில் வந்த கருணாமூர்த்தி சிமோனாவின் தோளில் தட்டிக் கொடுத்தார்.

’ஏய்… சந்துரு… உன் பையன் போலீஸ் வேலைக்கு இன்டர்வியூ போயிருக்கானாம்லா. நாளைக்கு எஸ்பிக்கிட்ட கூட்டிட்டுப் போறேன். கண்டிப்பா வேல கெடச்சிடும்…’

‘சரிண்ணே…’ என்று சந்துரு சொன்னபடியே, தோழில் இருந்த துண்டை எடுத்து கக்கத்துக்குள் வைத்துக் கொண்டான்.

‘ஏல… வரது… நீயும் இங்கதான் இருக்கியா? நல்லதா போச்சு. உன் பையன் வேல விசயமா, வி.கே.புரத்து மில்லு மேனஜர்கிட்ட பேசியாச்சுடே… நடந்துடும், கவலப்படாத…’

‘நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவல?.’ வரதுவும் கருணா மூர்த்தி அருகே வந்து நின்று கொண்டான்.

மாலை வேலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார்.

‘உங்களோட பேச்சுவார்த்தை நடத்த தாசில்தார் தயாரா இருக்கார். நாலு அல்லது ஐந்து பேர் மட்டும் வாங்க…’

‘யாரா இருந்தாலும் இந்த பந்தலுக்கு வரட்டும். மக்கள் மத்தியில பேசட்டும். மக்கள் ஒத்துக்கிட்டாதான் எதுவும் நடக்கும்.’ திருவன் சொன்னார்..

‘அவர் சொல்றதுதான் சரி…’ சிமோனா ஆமோதிக்க, மொத்த கூட்டமும் ‘ஆமாம்’ என்று கோரசாக சொன்னது.

‘தங்கச்சி… அவன் வெளியூர்காரன். அவனுக்கு என்ன தெரியும்? பெரிய ஆளுங்க சொல்லி அனுப்பியிருக்காங்க… நாளைக்கு இன்ஸ்பெக்டரை பகைச்சுக்கிட்டு ஊர்ல இருக்க முடியுமா? அவருக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோங்க’ கருணா குரல் கொடுக்க கூட்டத்தில் குழப்பம் உருவானது.

சலசலப்பை அவரே அமைதிபடுத்தினார்.

‘ஏல சந்துரு, வரது,. நீங்க வாங்க… வாத்தியாரு நீரும் வாரும்… போய் பேசிட்டு வந்துடலாம்…’ என்று யார் பதிலுக்கும் காத்திராமல் கிளம்பி போனார், கருணா.

’இந்த பிள்ளையயும் கூட்டிட்டு போரும்வே… படிச்ச பிள்ள, நல்லா பேசுவா…’

’பொட்ட பிள்ளை அங்கலாம் வரக்கூடாதுவே…’ என்று சொன்னபடியே கிளம்பினார்.

சிமோனா அருகில் இருந்த முருகன், ‘இவரையெல்லாம் கூப்பிடாதன்னு சொன்னா கேட்டியா?’ என்று காதை கடித்தான்.

அதுவரை மக்கள் மத்தியில் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த திருவன், அமைதியானார். கூட்டம் பேயறைந்தது போலானது.

ரு மணி நேரத்தில் பேச்சுவார்த்தை குழு திரும்பி வந்தது. கருணா கையில் ஒரு வெள்ளைத்தாள் இருந்தது.

‘பேச்சுவார்த்தையில் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் கடையை மூடிடுவதாக, தாசில்தார் எழுதி கொடுத்திருக்கார்.’ என்று வெள்ளைப் பேப்பரை விரித்துக்காட்டினார்.

‘ஒரு மாதம் எல்லாம் டைம் கொடுக்க முடியாது. இன்னைக்கே கடைய மூடினாதான் போவோம்…’ கூட்டத்தில் இருந்த சுப்பிரமணி குரல் கொடுத்தான்.

‘ஏலேய்… ஒயின்ஷாப் காரன்கிட்ட மாசம் மாசம் பணம் கேட்ட.. தரலன்னதும் போராட வந்துட்ட.. எனக்குத் தெரியாதால. பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாதல.’ கருணா குரல் கடுமையாக இருந்தது.

‘நாம இந்த போராட்டத்தை ஆரம்பிச்சதே உடனே மூடணும்னுதானே…’ சிமோனா பலவீனமான குரலில் கேட்டாள்.

‘நீ இன்னைக்கு ஊர்ல இருப்ப. நாளைக்கு மெட்ராச பாத்து போயிருவ. ஊர்ல நாங்கதான இருக்கனும்… அதிகாரிகளை பகைச்சுக்க முடியமா? என்னலே நா சொல்றது.’

‘ சரிதான்… போராட்டம் முடிஞ்சுது… கிளம்புங்க…’ வரது முதல் ஆளாகக் குரல் கொடுத்தார்.

‘அதெல்லாம் முடியாது…’ என்று கூட்டத்தினர் பிடிவாதமாகச் சொன்னார்கள்.

‘இங்க பாருங்க நீங்களா எந்திரிச்சு போயிட்டா நல்லது. இல்லன்னா, போலீஸ் எதுக்கும் ரெடியா வந்திருக்கு… பிறகு உங்க விருப்பம்…’ என்று கடுமையாக எச்சரித்தான், கருணா.

கருணாவின் விசுவாசிகள் பந்தலில் இருந்த சிலரை வெளியே இழுத்துப் போட ஆரம்பித்தனர்.
பெண்கள் சாபமிட்டார்கள். சிலர் கதறி அழுதார்கள். எதைப் பற்றியும் கருணா கவலைப்படவில்லை. போலீஸ் உதவியோடு பெண்களையும் சிறுமிகளையும் வெளியே அனுப்பினார்.

திருவனும், சிமோனாவும் அதை வேடிக்கை பார்த்தபடி செய்வதறியாது, நின்றார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Short story bandicoot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X