அறிவியக்கங்கள் கொண்டாடியிருக்க வேண்டியது மணிமேகலையைத்தான்… கண்ணகியை அல்ல – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழகம் போன்று அறிவை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்திய ஊரில் இலக்கியத்திலிருந்து எடுத்து கொண்டாடியிருக்க வேண்டிய பிம்பம் மணிமேகலையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவள்தான் அறிவை முன்னிறுத்திய இலக்கிய பாத்திரம்.

Stalin Rajangam interview, Dalit literature, Writer Stalin Rajangam interview, Stalin Rajangam interview on Tamil epic Manimekalai, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல், தமிழ் பௌத்தம், மணிமேகலை, சிலப்பதிகாரம், திமுக, தலித் அரசியல், அயோத்திதாசர், ஸ்டாலின் ராஜாங்கம், தமிழும் பௌத்தமும், Stalin Rajangam interview on Tamil Buddhism, Dalit Politics, Tamil literrature, Manimekalai, Buddhism, DMK, Silappathikaram, Kannagi, Tamil language and Buddhism

தமிழகத்தில் தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் வரலாறு, தமிழ் பண்பாடு, தமிழ் சினிமா அரசியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசர் ஆய்வுகள் என தொடர்ந்து செயல்பட்டுவருபர் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம். கடந்த சில வாரங்களாக கிளப் ஹவுஸில் ஒவ்வோரு வாரமும் புதன்கிழமை தோறும் ‘தமிழும் பௌத்தமும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் அவர் வெறுமனே உரையாக பேசுவதோடு மட்டுமல்லாமல், கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறார்.இதுவரை நடந்துள்ள 4-5 நிகழ்வுகளிலும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், தமிழ் மொழியின் மகத்தான காப்பியமான மணிமேகலையைப் பற்றி பல அரிய ஆய்வுக் கருத்துகளை பேசி வந்துள்ளார். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை குறித்தும் தமிழ்ச் சூழலில் மணிமேகலை எவ்வாறு விவாதிகப்பட்டு வந்தது, தமிழகத்தில் பௌத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் ஸ்டாலின் ராஜாங்கம் உடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக உரையாடினோம்.

கேள்வி: தமிழகத்தில் தொடர்ந்து பௌத்தம் பற்றிய ஒரு விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நீங்களும் பௌத்தம் தொடர்பான ஆய்வுகள், விவாதங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். பல இடங்களில் மணிமேகலை காப்பியம் பற்றி பேசி வருகிறீர்கள். அந்த வகையில் மணிமேகலை காப்பியத்தை ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் எப்படி அணுகிவந்திருக்கிறார்கள்?

ஸ்டாலின் ராஜாங்கம்: மணிமேகலை காப்பியத்தைப் பார்க்கிறபோது, அது ஒரு காலத்தில் இங்கே மிக முக்கியமான பிரதியாக பயிலப்பட்டிருக்க வேண்டும். இரண்டவதாக, மணிமேகலையில் இருக்கக் கூடிய பௌத்த விவாதங்களைப் பார்க்கிறபோது, தமிழ்நாட்டில் விரிவான பௌத்த மரபு இல்லாமல் இந்த மாதிரி ஒரு பிரதி உருவாகியிருக்க முடியாது. எனவே, மணிமேகலை என்கிற ஒரு பிரதி இருப்பது என்பதே தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவுக்கு செல்வாக்குடன் இருந்தது என்பதைக் காட்டுகிறது. அடுத்து 20ம் நூற்றாண்டின் அச்சு பண்பாடு தொடங்கியபோதுதான், பல நூல்களும் அச்சுக்கு மாறி பரவலாக்கம் பெறுகிறது. அதுவரையிலும் அவை ஒரு குழுவினரிடமோ அல்லது ஒரு பகுதியினரிடமோ இருந்திருக்கலாம்.ஒரு விதத்தில் சிறிய அளவில் புழங்கியிருந்த எல்லா இலக்கியங்களும் அச்சுக்கு வந்து பாடத்திட்டத்துக்கும் வந்து பரவலாக்கத்தை அடைகிறது. அப்படி தான் மணிமேகலையும் கவனம் பெறுகிறது. ஆனால், மணிமேகலையை ஒரு மெய்யியல் பிரதியாக புரிந்துகொள்கிற போக்கு அல்லது வாசிக்கிற போக்கு தமிழகத்தில் உருப்பெறாமல் போய்விட்டது. ஏனென்றால், தமிழில் மணிமேகலையில் இருப்பது போன்று மெய்யியல் பகுதி இந்திய அளவிலான காப்பியங்களிலேயே இல்லை. அது இங்கே மணிமேகலையில் இருந்திருக்கிறது என்றால், தமிழ் பகுதியில் எந்த அளவுக்கு மெய்யியல் செல்வாக்கு இருந்திருக்க முடியும் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்கிறோம்.

20ம் நூற்றாண்டு தமிழ் அறிவுப் புலம் என்பது வெகுஜனமயம் சார்ந்ததாகவே சுருங்கி விட்டது. ஒன்றை வெகுஜன மக்களுக்காக எளிமை படுத்துவது என்பது வேறு. ஆனால், விஷயங்களின் ஆழத்தை மேலோட்டமாக்குவதையே இங்கு வெகுஜனமயமாக்கம் என்றாக்கி விட்டார்கள். மணிமேகலையை தமிழ்ச் சமூகத்தின் மெய்யியல் பிரதியாக பார்ப்பதை விடுத்து, அதை ஒரு மதம் சார்ந்த மெய்யியலாக பார்த்தது ஒரு துரதிருஷ்டமே. அப்போது, எழுதப்பட்ட தமிழ் – தமிழர் பற்றியான வரலாற்றில், பௌத்தம் தமிழர்களுக்கு புறமான சமயமாக சித்தரிக்கப்பட்டதால், பௌத்தம் தொடர்புடைய மணிமேகலை காப்பியம் மீதான ஒவ்வாமை இயல்பாகவே தமிழ் படிப்பாளிகளிடம் உருவாகிவிட்டது.

தமிழ் புலவர்களுக்கு அப்பால், இலக்கிய விஷயங்களை எடுத்துச் செல்ல வந்த அரசியலாளர்களும் மணிமேகலையைப் போல, ஒரு மெய்யியல் பிரதியை கொண்டாடுவதை விடுத்து சிலப்பதிகாரம் போன்ற கதைப் பகுதியைக் கொண்ட ஒரு நூலை எடுத்துச் சென்றதும், அப்போது உருவான மதசார்பற்ற தமிழ் அடையாளமும் மணிமேகலையை கண்டுகொள்ளாமல் செய்துவிட்டன.

அதிலும் தமிழகம் போன்று அறிவை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்திய ஊரில் இலக்கியத்திலிருந்து எடுத்து கொண்டாடியிருக்க வேண்டிய பிம்பம் மணிமேகலையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவள்தான் அறிவை முன்னிறுத்திய இலக்கிய பாத்திரம். அவள்தான் சமூக சீர்திருத்த சேவைகளை காட்டக்கூடிய ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள்தான் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட குடும்ப அமைப்பை மறுத்துவிட்டு வெளியே இயங்கிய சுதந்திரமான பெண் உடல். ஆனால், 20ம் நூற்றாண்டினுடைய அறிவை வலியுறுத்திய இயக்கங்களுக்கு உள்ளடக்கத்தில் அறிவு சார்ந்த விவாதங்களைவிட அரசியல் சார்ந்த அடையாளங்கள் தான் முக்கியமானதாக இருந்தன.கண்ணகி போன்ற தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்கக்கூடிய பாத்திரத்தையே எடுத்துக்கொண்டார்கள். மணிமேகலை போன்ற ஒரு அறிவார்ந்த பார்த்திரத்தை அவர்களால் எடுத்தாள முடியவில்லை. பொதுபுத்திக்கேற்ற பெண் பாத்திரத்தை எடுத்து சிற்சில மாற்றங்களை பயன்படுத்த முடிந்ததே தவிர, பொது புத்திக்கு சவாலை தரக்கூடிய மணிமேகலையை முன்னெடுத்து போராட தயாராக இல்லை. இங்கே அறிவு மாற்றம் என்கிற பெயர்களில் நடந்தது அரசியல்தான்.

கேள்வி: மணிமேகலை உரை தொடர்பாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். மணிமேகலை உரையில் முக்கியமானதாக எதை கருதுகிறீர்கள். இனி வரும் காலங்களில் மணிமேகலைக்கு உரை எழுதுவதற்கான வாய்ப்புகள் அல்லது அதை மேம்படுத்துதற்கான எந்த மாதிரியான இடங்கள் இருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: மணிமேகலைக்கு இதுகாறும் தமிழில் யாரும் நல்ல உரையை உருவாக்கவில்லை. நான் எழுதுவேன் என்று சொல்வதற்காக இக்கருத்தை சொல்லவில்லை. இது தான் எதார்த்தம் என்ற முறையில் சொல்கிறேன். மணிமேகலையை பதிப்பித்தபோது நல்ல அறிமுகத்தையும் உ.வே.சா எழுதியிருக்கிறார். ஆனால், மணிமேகலையில் சவாலான மெய்யியல் பகுதிகள் இருக்கின்றன. அப்பகுதிகளுக்கு உரை எழுத முடியவில்லை என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். பின்னால், இரண்டொருவர் சவாலான பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்கள். ஒன்று அனுமான விளக்கம் என்கிற பெயரிலே நாராயண அய்யங்கார் எழுதினார். இன்னொன்று அயோத்திதாசர் குழுவினர். இதையெல்லாம் ஒரு முழுமையான உரை என்று சொல்ல முடியாது. பின்னாட்களில், பாடத்திட்ட நோக்கில், உடனடி புரிதல் என்ற முறையில் அவ்வை துரைசாமி பிள்ளையும் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் எழுதினார்கள். அந்த உரை தான் இன்றைக்கு வரைக்கும் பெரும்பான்மையாக இருக்கிறது. அவர்களின் உரை மேலெழுந்த வாரியான உரையே தவிர, சிலப்பதிகாரத்துக்கோ அல்லது மற்ற நூல்களுக்கோ அமைந்தது போல, ஆழங்கால்பட்ட உரையாக இல்லை. இதில் மிக முக்கியமானது என்னவென்றால், தமிழ்நாட்டிலேயே பண்டைய காலத்தில் இருந்த பௌத்தம் மெய்யியலின் தொடர்ச்சி இல்லாமல் போனது தான். அது அறுபட்டிருக்கிறது.

20ம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தைப் புரிந்துகொள்வதற்கு இடைக்காலத்தில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை போன்றவை இருந்தன. அதுபோல மணிமேகலைக்கு இல்லை. இது எதைக்காட்டுகிறது என்றால், இங்கே பௌத்தம் ஒரு காலத்தில் சிறப்போடு இருந்து ஒரு இடைவெளி வந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. இது ஏன் நடந்தது என்பதை தேடுவது மணிமேகலை பற்றிய ஆய்வாக மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்தில் நடந்த மதங்கள், தத்துவங்கள், அவற்றிற்கிடையேயான உறவு முரண் போன்றவற்றையும் புரிந்து கொள்ள பயன்படும்.

மணிமேகலைக்கு இனி உரைகள் வர வேண்டும். அதற்கு பாலி மொழியறிவும், நவீன மனப்பாங்கும் வேண்டும். பாலி மொழியை அறியாமல் மணிமேகலைக்கு உரை எழுதுவது சாத்தியமில்லை. மணிமேகலை ஒரு இந்திய அளவிலான காப்பியம். தெற்காசிய நாடுகள் முழுக்க மணிமேகலையின் தாக்கம் இருக்கிறது. சிலப்பதிகாரம் கேரளா, இலங்கையில் இருக்கிறது. மணிமேகலை தெற்காசிய கதையாடல்களில் இடம்பெற்றிருக்கிறது. அத்தகைய உறவு பற்றிய ஆய்வறிவும் வேண்டும். வெறும் மொழி புலமை மட்டும் போதாது. பௌத்தம் பற்றிய மதிப்பு கொண்டவர்களால் உரை எழுதப்பட வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் 20ம் நூற்றாண்டில் அறிவியக்கம் என்று குறிப்பாக எந்தெந்த இயக்கங்களை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

அறிவியக்கம் என்று 20ம் நூற்றாண்டில் நவீன கருத்துகளால் தாக்கம் பெற்ற எல்லா இயக்கங்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். ஆனால், சிலப்பதிகாரம் எனும் போது புலமையாளர்கள் மட்டுமல்லாது அரசியல் இயக்கத்தினரும் ஈடுபட்டனர். இரண்டு இயக்கங்கள் முக்கியமான இயக்கங்கள். ஒன்று திமுக. இன்னொன்று தமிழரசு கழகம். இதில் திமுகதான் சிலப்பதிகாரத்துக்கு புகழ்வாய்ந்த இடத்தைப் பெற்றுத் தந்தது. இதில் திமுக பகுத்தறிவு இயக்கத்தினுடைய தொடர்ச்சி. பெண்ணடிமை மறுப்பை பேசிய திராவிடர் கழகத்தின் தொடர்ச்சி. அந்த தொடர்ச்சியோடு பார்க்கிறபோது திமுக கலை இலக்கிய பிரதிகளில் மணிமேகலையைக் கொண்டாடி இருக்க வேண்டும். தமிழ் பெண்ணுக்கான உதாரணமாக மணிமேகலையை முன்னிருத்தி இருக்க வேண்டும். அது நடக்கவில்லை. வெகுஜன உளவியலை தொந்தரவு செய்யாத பெண் பாத்திரமே கண்ணகி.

கேள்வி: மணிமேகலை, சிலப்பதிகாரம் என்பதைவிட, பொதுவாக தமிழ் அடையாளம், தமிழ் பெருமைகள் பேசிய திமுக அதனுடைய எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள், பைந்தமிழ் இலக்கியங்கள் குறித்து, உரை எழுதுவது, ஆய்வுகள் எந்த அளவில் இருந்தது. அது திருக்குறளுக்கு உரை எழுதுவதோடு நின்றுவிட்டதா அல்லது அதைத் தாண்டி விரிந்ததா?

ஸ்டாலின் ராஜாங்கம்: திமுக ஒரு பிரச்சார இயக்கம். அதனுடைய இலக்கு கலை இலக்கியம் அல்ல. தங்களுடைய அரசியல் கருத்துகளைப் பரப்பும் அளவிற்கேற்பவே அது கலை இலக்கியத்துக்கு வருகிறது. எனவே,உரை எழுதுவது மாதிரியான விஷயங்களில் அது பெரிய அளவில் ஈடுபடாததை புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் எடுத்தாண்ட கலை இலக்கியங்களை தங்களுடைய அரசியல் தேவைக்கு ஏற்ப மறுஆக்கம் செய்தார்கள். சாமி சிதம்பரனார் போன்றவர்கள் சிலவேலைகளை செய்தார்கள். மயிலை சீனி வேங்கடசாமி போன்றோர் அங்கேயிருந்து தான் எல்லா வேலைகளையும் செய்தார்கள் என்றும் சொல்ல முடியாது. விரிவான ஆய்வுகளும் உருவாகாது போய்விட்டன. அதனுடைய வெகுஜனமயமாக்கம் என்பதில் ஒரு ஜனநாயக விஷயம் இருந்தது என்றாலும்கூட இன்னும் ஆழமாக செல்ல முற்படவில்லை.

கேள்வி: ஆனால், அவர்களிடையே மாதவி, மணிமேகலையைப் பற்றி உயர்வாக பார்க்கிற ஒரு நிலை இருந்ததுதானே?

ஸ்டாலின் ராஜாங்கம்: ஆமாம், நிச்சயமாக. தனி பாத்திரமாக சொல்லும் போது உயர்வாக பார்த்தார்கள். முற்றிலும் இழிவாகப் பார்க்கவில்லை. ஆனால், தமிழில் முன்னுதாரணமாக சொல்லும் போது அவரள் மையப் பாத்திரமாக வைத்தது கண்ணகியை தான்.

அதேபோல பல நவீன இயக்கங்களைப் போல திமுகவும் ஒரு எழுத்து பிரதி சார்ந்த இயக்கம். வழக்காறுகளை அது கணக்கில் கொள்ளவில்லை என்பவற்றையும் சேர்த்தே இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் தற்போது பௌத்தம் தொடர்பாக விவாதிக்கிற, ஆய்வு செய்கிற, அரசியலாக செயல்படுகிற ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது. அவர்களுடைய இலக்கு என்னவாக இருக்கிறது? அவர்களுடைய செயல்திட்டம் என்னாக இருக்கிறது? அது எப்படி போய்கொண்டிருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: தமிழகத்தில் சிறிது சிறிதாக இருக்கிறது. அது ஒருங்கிணைக்கப்பட்டதாக இல்லை. பெரிய தேவை ஏற்பட்டால் ஒருங்கிணைப்பு வந்தால் போதும். உருவாகியிருக்கிற விழிப்புணர்வு ஒற்றை குழுவாகவோ அல்லது ஒற்றைத் தலைமையிலோ இல்லை. பொதுவான வழிகாட்டல் என்ற அளவில் ஒருங்கிணைப்பு இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. கடந்த காலத்தைவிட இளைஞர்களிடையே பௌத்தம் தொடர்பான ஒரு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

அதே போல, பெளத்தம் தொடர்பான புரிதலிலும் மாற்றம் வந்திருக்கிறது. அதை மதமாக மட்டுமாக புரிந்து கொள்வதிலிருந்து பண்பாடு, சிந்தனை என்று இணைத்து பார்க்கிற போக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே இருந்த அம்பேத்கர் தொடர்பிலான பெளத்தத்தோடு அயோத்திதாசருடைய வாசிப்பு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்றால், பௌத்தத்தை இந்தியா முழுவதுமான ஒன்று என்ற அளவில் மட்டும் பார்க்காமல் உள்ளூர் அளவில் ஒப்பிட்டு பார்ப்பது, தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்பது என்று வளர்ந்திருக்கிறது. பௌத்தத்தை வரலாற்று ரீதியாக அந்நிய சமயமாக சொன்ன போக்கை மறுக்கிற அல்லது ஏற்றுகொள்ள விரும்பாத ஒரு விழிப்புணர்வு இருக்கிறது.

அப்போது தமிழுக்கும் பௌத்தத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் கேட்க முற்படலாம். தமிழுலக்கும் பௌத்தத்துக்கும் தொடர்பு இல்லை என்று கருத்து வரலாற்று ரீதியாக நம்பவைக்கப்பட்டிருக்கிறது. தமிழுக்கும் பௌத்தத்துக்கும் உறவு உண்டு என்ற மற்றொரு வரலாற்று நம்பிக்கையை உருவாக்க இந்த குழுக்கள் முனைகின்றன.

பௌத்தம் வடக்கே தோன்றிய சமயம் என்பது ஒரு வரலாற்று ரீதியான உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் இருந்த பௌத்தம் எல்லாமே வடநாட்டில் இருந்து வந்த பௌத்த சமயம்தான் என்று சொல்வது நியாயமில்லை. தமிழ்நாட்டில் பௌத்தத்தின் சான்றுகள் இருக்கிறது. கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து, ஏறக்குறைய சங்க இலக்கியங்களின் சம காலத்தில் இருந்தோ அல்லது அதற்கு சற்று முன்போ இங்கு பௌத்தம் தடங்கள் உருவாகிவிட்டன. எனில், தமிழின் தொடக்கத்தை சங்க இலக்கியங்களில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அப்போது பௌத்தமும் இங்கே இருந்ததானே என்று இருக்கும். எனவே, வரலாற்று ரீதியாக பௌத்தத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை என்பது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு வரலாற்று புனைவு.

கேள்வி: உங்களுடைய ஆய்வில் பௌத்தம் தொடர்பாக என்ன ஆய்வுத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

ஸ்டாலின் ராஜாங்கம்: என்னுடைய ஆய்வு பௌத்தம் தொடர்பானது என்று பிரித்து சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அதை நான் தனியாக பார்ப்பதில்லை. நான் செய்கிற பிற ஆய்வுகளுடன் விளக்கங்களுடன் பெளத்தம் ஒரு பகுதியாக பிணைந்து இருக்கும். ஏனென்றால், கடந்த கால தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் அது பிண்ணிப் பிணைந்ததாகத்தான் இருந்திருக்கிறது. என்னுடைய எதிர்கால திட்டம், பௌத்தம் பற்றியது என்பதைவிட தமிழ்ச் சமூகத்தின் எந்த விஷயத்தையும் பௌத்தத்துடன் இணைத்துப் பார்க்கிற ஒரு முறை. அது ஒரு முறையியலாக என்னிடம் தொடரும்.

கேள்வி: தமிழ் ஆய்வு உலகில் இன்றைக்கு தமிழும் பௌத்தமும் என்ற ஆய்வு போக்கு என்னவாக இருக்கிறது? என்ன மாதிரியான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: பௌத்தமும் தமிழும் பற்றியான ஆய்வு, ஒரு பெரிய அளவில் நடக்காவிட்டாலும்கூட அயோத்திதாசரின் வாசிப்பை ஒட்டி, தனித்துவமான பார்வைகள் உருவாகியிருக்கின்றன என்பது உண்மை. உதாரணமாக, டி.தருமராஜன் அவருடைய ஆய்வு பௌத்தம் தொடர்பாக, அயோத்திதாசருடைய பார்வையை முன்வைத்திருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து சில நூல்கள் தமிழில் வருகின்றன. ஆன்னி மோனிஸ் அம்மையார் எழுதிய இமெஜினிங் புத்திசம் என்கிற புத்தகம் தமிழில் வருகிறது. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் சுருக்கம் ஞான.அலாய்சியஸ் மூலமாக ஆங்கிலத்திற்கு சென்றிருக்கிறது. இதையடுத்து அயோத்திதாசர் பற்றி டி.தருமராஜன், ரவிக்குமார் போன்றோர் எழுதியவை பெளத்தம் பற்றிய யோசனைக்கு வலு சேர்த்திருக்கின்றன. பௌத்தம் தொடர்பாக கடந்த காலத்தில் வைத்திருந்த பார்வையில் ஒரு மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

கேள்வி: பௌத்தத்தை முன்னெடுப்பதோ அல்லது பௌத்தம் தொடர்பான ஆய்வை முன்னெடுப்பதோ அது எப்போதும் ஒரு அரசியல் முன்னெடுப்பாக இருந்துகொண்டே இருக்கிறது இல்லையா?

ஸ்டாலின் ராஜாங்கம்: என்னைப் பொறுத்தவரைக்கும் மதம் என்பதை தனியாக பார்க்கவில்லை. பௌத்தம் மட்டுமல்ல எல்லாமே அப்படிதான். ஆனால், நானும் ஆரம்பத்தில் பௌத்தத்தை அரசியலாக அணுக முயற்சித்தவன்தான். ஆனால், அதற்குள் சென்று ஆய்வு செய்யும்போதுதான் அது வெறும் அரசியல் விஷயம் மட்டுமில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

பொதுவாக பௌத்தத்திற்கு ஒரு அறிவு அடையாளத்தை தருவதற்கே முற்படுவோம். அது சரிதான். ஆனால், அதைவிட அதன் அறம் தான் முக்கியம் என்பேன். அறிவு கூட அறம் இழந்தால் வன்முறையாக மாறி விடும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, இந்த சமூகத்தில் அறம் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். அறிவில்லாதால் என்பதை விட அறமில்லாததால் தான் இங்கு சாதிமத பேதங்கள் தழைத்து இருக்கின்றன. அறவாழ்வு என்பதற்கான உள்ளுர் தொன்மையாகவே பெளத்தத்தை யோசனை செய்கிகிறோம் என்ற புரிதலில் தான் இதில் ஈடுபடுகிறேன். தலித் தரப்பிலிருந்து இந்த மொத்த சமூகத்திற்குமான மாற்று அழகியலை – மாற்று அறத்தை தர வேண்டும். மணிமேகலை பற்றி பேசுவது அப்படியானவற்றுள் ஒன்று தான். நவீன மனப்பாங்கு இனியும் தொன்மையிலிருந்து கண்ணகியை எடுத்து பேச முற்பட முடியாது. மணிமேகலையை தான் எடுத்து பேச முடியும். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அவர்கள் சட்டபேரவையில் மணிமேகலையை பேசியிருந்தார் என்பது உருவாகி வரும் விழிப்புணர்வை காட்டும் அடையாளம் என்பேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Web Title: Stalin rajangam interview on tamil epic manimekalai and tamil buddhism

Next Story
மொழியறிஞர் இளங்குமரனார் மரணம்; அரசியல் தலைவர்கள் இயக்கங்கள் இரங்கல்Tamil Scholar Elangkumaranaar passes away, மொழியறிஞர் இளங்குமரனார் மரணம், இளங்குமரனார், இளங்குமரனார் மரணம், Elangkumaranaar passes away, tamil ligustic scholar Elangkumaranaar, vaiko, mdmk, taminadu progressive writers and artists association
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express