Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு

மிக உயர்ந்த தத்துவத்தை ஒரு மது கோப்பையை வைத்து, எல்லா காலத்துக்கும் ஏற்றார் போல், கதையாக சொல்வது அரவிந்த் குமாரால் மட்டுமே முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunday Special Short Story, House of Time, Aravind Kumar

aravindkumar

Advertisment

அரவிந்த் குமார்

அந்த வீட்டிற்கு சுவர்கள் இல்லை. ஆனால் அவ்வப்போது சிலர் கதவுகளை திறந்து கொண்டு வருவார்கள். வெகுகாலத்திற்கு யாருமே வராத சூன்யத்தில் காற்று மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. வெயில் வரும், அறையில் வெம்மை கூடும்..குளிர்மழை கொட்டும், அறையெங்கும் நீர் சூழும்... பருவங்கள் மாறிமாறி வந்தன. அறையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த அறையின் மையத்தில் மதுகுப்பிகளுடன் ஒருவன் காத்திருந்தான். வருகிறவர்களுக்கு வழங்கவா? தான் அருந்தவா? என்று தெரியவில்லை. ஆனால் எப்போதும் சில மதுவால் நிரப்பப்பட்ட கோப்பைகள் வழிந்த நிலையில் நின்று கொண்டிருந்தன.

இடதுபக்க கதவு திறந்தது. கருநிறமும், சுருள்முடியும், வெளிர்பல்லும், திடஉடலும் கொண்ட ஒருவன் உள்ளே வந்தான். கண்கள் கலங்கி இருந்தன. தலைகுனிந்து இருந்தான். தோள்கள் தொய்ந்து காணப்பட்டன. இருக்கையில் தளர்ந்து அமர்ந்தவன் மதுகுப்பியை பார்த்தான். எதிர்புறம் நின்றிருந்தவன் எதுவும் பேசாமல் கல்போல் அமைதியாக இருந்தான். வந்தவன் சோகத்தில் இருப்பதை பார்த்தபோதும், அவனுக்கு ஆறுதலாக ஏதாவது பேசுவானென்று எதிர்பார்த்தால் சாந்தம் பரவிக்கிடக்க அவன் முகத்தில் இருந்தது என்னவென்று அறியமுடியவில்லை. வந்தவன் முதுகில் வரிவரியாக சவுக்கு கசைகளின் தடம். அதில் ஒன்றில் அப்போதும் குருதி வழிந்து கொண்டிருந்தது. திடீரென ஆத்திரம் மேலிட மேஜையின் மீது ஓங்கி குத்தியவன் குலுங்கி குலுங்கி அழுதான். பிறகு அவனாகவே அமைதியாகி, "எல்லோருக்கும் வெளிச்சத்தை பரிசளித்தவன், எனக்கு இருளை தந்துவிட்டு சென்றுள்ளான். இதில் இழிவில்லை, இழிவென நினைப்போர் மாறுவதன்றி வேறுவழியில்லை" என்று சொல்லிவிட்டு ஒரு கோப்பை மதுவை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கைகளை வீசி வீசி நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி வெளியேறினான். கதவருகே நின்று திரும்பி பார்த்து "நன்றி" என்றான்.

அடங்கா ஆசைகளோடு சுற்றி வந்த சிலர் பொன் நாணயங்களை அள்ளி அள்ளி கொட்டி அதன் ஓசையை ரசித்தனர். பொன்னை உருக்கி தங்களை ஓவியங்களாக உருமாற்றிக் கொண்டனர். அவர்களது ஆசைகளும், கனவுகளும், ஆணவங்களும், பொறாமைகளும், பெருமைகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. கால்கள் மண்ணில் இருந்தாலும், அவர்களது கனவுகள் விண்ணை முட்டின. அவர்களுடைய கனவுகளுக்கு இந்த அறை போதுமானதாக இல்லையென புரிந்து கொண்டார்கள். மலையளவு ஆசைகளை மணல்மேட்டில் வளர்த்தார்கள். கல்லுருட்டி கல்லுருட்டி ஒன்றின்மீது ஒன்றாக்கி தங்களை கனவுகளை அடுக்கினர். வளர்ந்து கொண்டே போனது. உச்சிக்கு செல்ல செல்ல எல்லா கனவுகளும், ஆசைகளும் ஒற்றைப்புள்ளியில் வந்து நின்று சூன்யத்தில் எட்டி குதித்ததை அறிந்ததும், அமைதியாகி அந்த மாமணல் குன்றில் புதைந்து கொண்டார்கள். கனவுகளை கட்டியவன் மணல் குகைக்குள், மணலை கட்டியவன் மன குகைக்குள். இருவருக்கும் ஒருசேர வழங்கப்பட்டது மது. ஆளுக்கு ஒரு மிடறு.

அமைதியே வடிவாய் இளவரசன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அறையில் இருந்தோர் ஒவ்வோர் முகத்தையும் உற்று நோக்கினான். சுருண்டுபடுத்து தளர்ந்து போய் இருந்த முதியவனின் தோல் தொட்டு பார்த்தான். வெளிறிய முகமும், இருமலும் கொண்ட ஒருவன் வசம் போய் நின்று நோய் எதுவென, நோய் அதுவென என்று அறிந்தான். மயானம் நோக்கி செல்லப்பட்ட உடலை தடவிப்பார்த்து இதில் இன்னேரம் ஒளிந்திருந்த உயிர் எங்கே? என்று வியப்பு மேலிட விக்கித்து நின்றான். பின்பு சித்தம் தெளிந்தவனாய், வாசலில் நிறுத்தப்பட்ட தங்கசக்கரங்கள் பொருத்தப்பட்ட வெள்ளிமணி தேரை கிளம்பி போக சொன்னான். ஒளிரும் கிரீடத்தை கழற்றி வைத்தான். வைரங்கள் பதிக்கப்பட்ட மாலைகளை தூக்கி தூரவீசினான். பாதங்கள் மண்ணில் உறவாடட்டும், இடையில் குறடுகள் எதற்கு என்று அவற்றை கழற்றி எறிந்தான். பட்டாடைகளும் பாரம் என்று காற்றுக்கு பரிசளித்தான். ஆசைகள் அற்றுப்போவதன் பின்னால் உள்ள சுதந்திரத்தை அறிந்தநொடி கைகளில் பிச்சைப் பாத்திரம் கூட தேவையற்றதாகி விட்டது. மெல்ல மெல்ல நடந்து அறையெங்கும் சுற்றிவந்தான். ஒவ்வொரு சுற்றின்போதும் மதுகுப்பி அவனருகே வந்துவந்து சென்றது. மெய்தளர்ந்தான், உடல்நீத்தான். ஆனால் அவன் நடந்தபாதையில் தர்மசக்கரத்தை சுழற்றியபடி பலர் பின்னால் ஒடினர். முண்டியடித்தனர். பூசல்கள் கூடின. பிடிவாதம் பெருகியது. பேராசையில் வந்து முடிந்தது. அவன் கழற்றிப்போட்ட ஆசைகள் மட்டும் அறையெங்கும் கேட்பாரின்றி கிடந்தது. அருகிலேயே மதுகுப்பிகள்.

பிறகு ரொம்பநாட்களுக்கு நடமாட்டமே இல்லை. ஆனாலும் மதுகுப்பி மட்டும் மனிதர்களின் உதடுகளுக்காக காத்திருந்தது. நன்கு நுரைத்து இருந்தது. யாருமில்லாத இடத்திலும் மணம் வீசிக் கொண்டிருந்தது. யாருக்காக என்று தெரியவில்லை? ஆனால் மது இருந்தது. அப்போது வலதுபக்க கதவு திறந்து வெண்நிறமும், பொன்சிகையும், பருமுகமும், உயர்வடிவும் கொண்ட ஒருவன் வந்தான். வாரிடப்பட்ட அவன் தோல்காலணிகளில் பொன்னால் பூட்டப்பட்ட திருகுகள் மின்னின. இடையில் கட்டப்பட்ட பட்டையில் இரண்டு நீள்கத்திகள் ஆடிக் கொண்டிருந்தன. அதற்கான தலைகளை தேடிக் கொண்டிருந்தன என்று பொருள் கொள்ளலாம். தோளின் இருபுறமும் நட்சத்திர குறியிட்ட நிறைய பதக்கங்கள். கொன்றதற்கா? வென்றதற்கா? தெரியவில்லை. வந்தவன் எதுவும் பேசாமல் மதுக்குப்பியை எடுத்து மடக்மடக் என்று குடித்தான். பெருஏப்பம் ஒன்றும் விடுத்தான். காலியாக வைக்கப்பட்ட மதுகுப்பி மறுநிமிடமே நிரப்பப்பட்டது. எப்போது அதில் ஊற்றப்பட்டது என்பது அறியமுடிவதற்குள் அது நிகழ்ந்துவிட்டது. தலையை குலுக்கி, புருவங்கள் மேலிட, கண்கள் சுருங்கிட எதிரில் இருப்பவனை அற்ப புழுவென பார்த்தான். அதிகார சிரிப்பில் அறையே அதிர்ந்தது. இரண்டு புறமும் திரும்பி பார்த்தான். கையில் வைத்திருந்த வரைபடத்தில் ஒவ்வொரு இடத்தையும் நட்சத்திர குறியிட்டான். கையில் இருந்த மதுகுப்பியை தரையில் தூக்கி எறிந்தான். அது பலநூறு சில்லுகளாக உடைந்து வானத்தின் வெறுமையை காட்டியது. அதன்மேல் கால்வைத்து நடந்து அவன் வெளியேற, மீண்டும் நுரைத்த மதுவோடு குப்பி ஒன்று மேஜையில் தயாராக இருந்தது.

"பிதாவே" என்ற மென்இறைஞ்சுதலோடு ரத்தம் சொட்ட சொட்ட இடையன் ஒருவன் கொண்டு வரப்பட்டான். உடலெங்கும் ரத்த விளாறுகள். கைககளிலும், கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு அதிலும் குருதி வழிந்து கொண்டிருந்தது. முதுகில் சுமக்க முடியாத அளவுக்கு பாரம் இருந்தது. தலையில் முள்கிரீடம் ஒன்று காணப்பட்டது. பின்னால் பலநூறுக் குரல்கள். ஆனால் அவர்களால் அறைக்குள் வரமுடியவில்லை. உருவமும் தெரியவில்லை. "வெட்டுங்கள், கொல்லுங்கள்" என்ற கூக்குரல்களும் கேட்டன. "ஐயோ, அவர்கள் கொல்வதற்கு நான் வேண்டுமே, காலதாமதம் ஆகிவிடப் போகிறது செல்ல வேண்டும், விரைந்து எடுத்து வாருங்கள் குப்பியை" என்று கூறியதோடு முன்வைக்கப்பட்ட குப்பியில் தனது குருதியை கலந்து கொடுத்து, "இதையும் பருகுங்கள் எனக்கு வேலை இருக்கிறது" என்று கூறியபடியே பாரத்தை சுமந்து சென்றார். இப்போது மதுவில் கொஞ்சம் குருதியும் கலந்திருந்தது. அதனால் போதை அதிகரித்ததா? போதை குறைந்ததா? என்பதை குடித்தவர்கள் சொல்ல முடியவில்லை. சொல்ல முடிந்தவர்கள் அந்த அறைக்குள் வரவேயில்லை. தனித்த மௌனத்துடன் குமிழ் வெடிக்க மது நுரைத்தது.

அறைக்கு வெளியே நீர் தளும்பும் ஓசைகேட்டது. பெரிய கப்பல் ஒன்று வந்து நின்றது. விதவிதமான மனிதர்கள், விதவிதமான குரல்கள், விதவிதமான மொழிகள் என்று பெரும்திரள். ஆள் ஆளுக்கு மதுவை குடிப்பதும், விளையாடுவதும், சிரிப்பதும், சண்டையிடுவதும், ஒருவரை ஒருவர் குத்திக் கொல்வதும், வேடிக்கை பார்ப்பதும், மடிந்து வீழ்வதும் என அறையெங்கும் அமைதியின்மை. குப்பிகள் மட்டும் நுரைத்த மதுவோடு உதடுகளுக்காக காத்துக் கொண்டிருந்தது. ஒருநாள் கப்பலில் வந்தவர்கள் வென்றதாக கொக்கரித்தார்கள், மறுநாள் அவர்களை வீழ்த்தியதாக மற்றவர்கள் மகிழ்ந்தார்கள். வெற்றி என்பது காற்றில் எறியப்பட்ட பந்துபோல கைமாறி கைமாறி சென்று கொண்டே இருந்தது. ஆனால் பந்து அகப்பட்டவர்கள் வெற்றியாளர்களாக அறிவித்துக் கொண்டனர். சிறிது நேரத்திலேயே கைதவறி அது உருண்டு சென்றது. மீண்டும் கூச்சல், குழப்பம். மது கடலென பரவிக் கிடக்க, அதில் மீனென மிதந்து சென்றனர் பலர். மது மணலென விரவிக்கிடக்க, அதில் எலும்பென மட்கி கிடந்தனர் பலர். மணலை மூடியது கடல். கடலை மூடியது மணல். அறை மட்டும் தனித்து நின்றது மதுகுப்பிகளோடு.

தோல்மட்டும் மூடிய உடலோடு பெண்கள் சிலர் கொண்டுவரப்பட்டனர் அறைக்குள். ஆடைகள் பாரம் என்பதால் அவை எதற்கு என்று விளக்கம் தரப்பட்டது. குனிந்தும், நிமிர்ந்தும், படுத்தும், அமர்ந்தும் பலநூறு புணர்வுகள். தலைகள் மாறிக்கொண்டே இருந்தன. உடல்கள் மட்டும் மாறவேயில்லை. வண்ணங்கள் மாறின. எண்ணங்கள் மாறவில்லை. கண்ணீர் கலந்த மதுவுக்கு சுவை அதிகம் என்று கண்டுகொண்டனர். மீண்டும் மீண்டும் மதுவுக்கு தோதாக கண்ணீர் கலக்கப்பட்டது. மதுவிற்றவன் அப்போதும் அதனை பார்த்துக் கொண்டிருந்தான். பாதி மது போதுமென்றும், மீதி மதுவை கதறல்களால் நிரப்பிக் கொள்வதாகவும் கூறப்பட்டது. ஆடை நெகிழ்ந்த மதுவுக்கு பெண் பெயர் சூட்டப்பட்டது. மதி மறந்த பெண்ணுக்கு மதுவின் பெயர் வழங்கப்பட்டது. அதுவும் மறந்த பெண், அறைக்கு வெளியே விரட்டப்பட்டாள். அவ்வப்போது கலக குரல்களும் எழுவதுண்டு. அவர்களுக்கு கூடுதலாக இரண்டு மதுகுப்பிகள் கொடுக்கப்பட்டன. ஆண்கள் சிலர், பெண் கால்களில் விலங்கென பின்னிக் கிடந்தனர். அவர்களுக்கு மீட்பென எதுவும் எழுதப்படவில்லை. உடல் சிலிர்த்த வேளைகளில் உயிர் பிரிந்தது சிலருக்கு. அறையில் தட்டுமுட்டு சாமான்களோடு எல்லோரும் சமமாக இருந்தனர். வியாபாரிகளுக்கு நல்ல வேட்டை. மதுகுப்பிகளோடு அறை காத்திருந்தது.

மணல்வீசும் நாளொன்றில் மலைமேல் ஓர் குரல் ஒலிக்க, அறையெங்கும் எதிரொலித்தது. கையில் வாளோடும், கனத்த குரலோடும், கருநிற குதிரைமீது ஒருவர் வந்தார். வாளின் முனையில் ரத்தம் சொட்ட கோப்பைகளை நொறுக்கித் தள்ளினார். புதிய குப்பிகள் சத்தமிடாமல் முளைத்து நின்றன. எல்லா திசையிலும் சென்றார். சென்ற வழியெலாம் திசைகளாகின. தயங்கி, தயங்கி சிலர் பின்நடக்க, தடதடவென பலர் ஓடியும் வந்தனர். உடலெங்கும் மணல் பூசி, உளமெங்கும் இறைபூசி இறைஞ்சி நின்றனர். ஓங்கி குரலெடுத்து ஒவ்வொருவராய் அழைத்தனர். வராத சிலர் தலைகள் மண்ணுக்கு உரமாகின. வந்தவர்கள் பலர் தங்களுக்குள் உறவாகினர். மணலுக்கு கால்முளைத்து கடல் தாண்டியது. உருவமில்லாததால் எளிதில் பயணித்தது. உருவமில்லாததால் அதுவே அச்சுறுத்தியது. சண்டைகள் நடந்தன சமாதானத்தில் பெயரில். சமாதானங்கள் மலர்ந்தன சண்டையின் முடிவில். அப்போதும் அறையில் மதுவிற்பனை குறைந்தபாடில்லை. அது காத்துக் கொண்டே இருந்தது. வென்றவர்கள் குடித்தார்கள் மகிழ்ச்சிக்காக, தோற்றவர்கள் குடித்தார்கள் வீழ்ச்சிக்காக. மது ஊறிக்கொண்டே இருந்தது.

அறையின் ஒருமூலையில் தனித்த குழுவாக சிலர் இயங்கினர். இடுங்கிய கண்களும், வெண்மஞ்சள் நிறமும், எடுப்பில்லா மூக்கும் கொண்டு தங்களுக்குள்ளாகவே சுவர் ஒன்றை எழுப்பி கட்டிக் கொண்டனர். அங்கிருந்த மூர்க்க குதிரை ஒன்றில் புறப்பட்டு அறையெங்கும் சுற்ற தலைப்பட்டான் குள்ள மனிதன் ஒருவன். அறையில் எதிர்பட்டவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்த, அவன் சென்ற திக்கெங்கும் ரத்தம். பட்டுப்பாதை நடந்த பூமியில் ரத்த துளிகளை சொட்டிக்கொண்டே வெகுதூரம் முன்னேறினான். அவனுக்கு மூச்சிறைக்குந்தோறும் மதுகுப்பிகள் கொண்டு வரப்பட்டன. ரத்தம் அளவுக்கு மது போதையில்லை என்று கூறி கோப்பைகளை விசிறியெறிந்தான். ரத்த திட்டுக்கள் சிந்தியதை பார்த்து, இவைதான் எழுத்தோ என்று அறிந்தான். அதையே எல்லோரையும் எழுதச் செய்தான். உலகிற்கு தங்களை பரிசளித்த நாடோடிகளுக்கு உலகை பரிசளித்தான். மன்னர் மன்னனாக அறிவித்துக் கொண்டவன் மண்ணோடு மண்ணானான். அவன் சமாதியில் நான்குசொட்டு மதுதெளிக்கப்பட்டது. புதிய இறப்புக்காக பிறந்து காத்திருந்தது மது.

தொலைநோக்கி கருவியோடு அறைக்குள் வந்த ஒருவன் சூன்யத்தை வெறித்துப் பார்த்தான். அறையின் ஒவ்வொரு மூலையிலும் நின்று வெறுமையை கணக்கிட்டான். விட்டத்தில் நின்று வட்டம் என்பது சரியா? என்று மூளைக்கு வேலைகொடுத்தான். எல்லோரும் அவனை விசித்திரன் என்றனர். வீண்வேலை என்று தூற்றிச் சென்றனர். மனம் புழுங்கிய அவன் அறைமனிதர்களை மறந்து அந்தரவெளியில் தொலைநோக்கியோடு வாழ்ந்தான். திடீரென அறையை சுற்றி சுற்றி நடக்க தொடங்கினான். கதவின் நான்கு திசையில் இருந்து வந்தவர்கள் சொன்னார்கள், அறை நம்மை சுற்றி பின்தொடர்வதாக. இதனையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் மதுவிற்றவன். தொலைநோக்கிக்காரனுக்கு பிடிபடவில்லை. அறையின் எல்லா பக்கங்களிலும் ஓடிஓடி ஊளையிட்டு உறுதிசெய்து கொண்டான். அறையை உள்ளிருப்பவர்கள் தான் சுற்றுகிறார்கள். அறை அங்கேயேதான் இருக்கிறது என்று முரசறைவித்தான். முதல்வேலையாக இழுத்துக்கொண்டுபோய் சித்தம் கலங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டான். வேறுவழியின்றி தொலைநோக்கியே தூக்கிபோட்டுவிட்டு அறையை விட்டு நீங்கினான். மது மட்டும் மாறாத தாளகதியில் அறையை சுற்றி வந்தது.

இந்த அறைக்குள் சுதந்திரம் இல்லை, சமத்துவம் இல்லை, சகோதரத்துவம் இல்லை என்ற முழக்கத்தோடு ஒருசிலர் உள்ளே நுழைந்தனர். இதுநாள்வரை எது சுதந்திரம் என்று யாருமே கேட்டதேயில்லை. எதற்காக சமத்துவம் என்று கிளையே நோக்கி வேர் பேசியதே இல்லை. வேரின் வேலை நீர்பருகல் என்றும், கிளையின் வேலை கனிதேடல் என்றும் நினைத்திருந்தனர். ஆனால் அதுவல்ல சமானம், பிறந்த யாருக்கும் வேரெனவும், கிளையெனவும், ஏன் கனியெனவும் உருமாறும் உரிமை உண்டு என்று எழுதி தீர்த்தனர். உடல் சோரும்போதும், உளம்சோரும்போதும் மருந்தென மதுவை தொட்டுக் கொண்டனர். எழுதபட்ட தாள்களை கிழித்து கிழித்து கொடுக்க அவற்றை விரைந்து எடுத்துக்கொண்டு வெளியேறினர் சிலர். அறையில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டதாக அறிவித்துக் கொண்டனர். கிரீடத்தை கழற்றி கையில் வைத்துக் கொண்டு தொய்ந்த முகத்துடன் மன்னர்கள் சிலர் வெளியேறினர். கூட்டத்தில் இருந்த ஒருசிலர் விரைந்து வந்து இருக்கையில் அமர்ந்தனர். அவர்களும் சிலநாட்களில் மன்னராகினர். முன்பு மன்னர்கள் குடித்த மதுகுப்பிகள் இன்று புதிய ஆட்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பழைய மதுகுப்பிகள், புதிய நபர்கள்.

கையில் புத்தக கட்டோடும், வெண்தாடியும் ஒளிர்கண்களும் என இருவர் வந்து நின்றனர். எதுவும் பேசாமல் மேஜை மீது புத்தகங்களை வைத்துவிட்டு நிரம்பிய மதுகோப்பைகளை எடுத்து நுகர்ந்து கண்மூடி ரசித்து ஒவ்வொரு மிடறாக அருந்தினர். கண்களில் நீர் வழிய புத்தகங்களை பிரித்து ஒவ்வொரு எழுத்தாக எழுதினர். மேஜையில் தனக்கான குறிப்புகளை கீறி கீறி எழுதி சரிபார்த்து மீண்டும் புத்தகத்தில் எழுதினர். அப்போதும் மதுவிற்றவன் எந்த அசைவும் காட்டாமல் அப்படியே தான் அமர்ந்திருந்தான். வந்தவர்களும் அவனை பொருட்படுத்தவில்லை. அப்படி ஒருவன் அங்கிருக்கிறான் என்ற சிந்தனை இல்லாமல் புத்தகங்களையும் குறிப்புகளையும் மாறிமாறி எழுதினார்கள். கொண்டு வந்திருந்த தாள்கள் போதாமல் போகவே மேலாடையை கழற்றி அதில் கொஞ்சம் எழுதினார்கள். இடம் போதாமல் போகவே தங்கள் கைகள், கால்கள், மார்பு என கிடைத்த இடங்களில் எல்லாம் எழுதினார்கள். மலையளவுக்கு எழுதியவற்றை சுருக்கி ஒற்றை புத்தகமாக ஆக்கினர். இனி அது தங்களுடையது அல்ல என்று மேஜை மீது வைத்துவிட்டு கனவுகளை காற்றில் மிதக்கவிட்டு சத்தமிடாமல் அறையை காலி செய்தனர். அவர்கள் உதறிச் சென்ற கனவுகள் ஒரு பொன்குமிழியென அறையெங்கும் அலைந்து கொண்டிருந்தது. அந்த குமிழுக்குள் இவ்வுலகின் தலைகீழ் உலகம் ஒன்று ஒளிர்ந்தபடி மிதந்தது. ஒருசில குமிழ்கள் கதவின் வழியாக வெளியே பரவின. அப்போதும் மதுகுப்பி ஒன்று நுரைததும்ப காத்துக் கொண்டிருந்தது.

தீ பரவிய காகிதம் ஒன்றை கையில் ஏந்தியபடி ஒருவன் வந்தான். அதில் இருந்த தீப்பொறிகள் காற்றெங்கும் பரவின. அறை இருளில் மூழ்கியிருப்பதால் வெளிச்சம் தேவை என்று வாதிட்டான். மதுகுப்பிகள் மட்டும் போதும் வேறென்ன வேண்டும் என்று கேட்டவர்களுக்கு, மதுஆலையையே உற்பத்தி செய்வது நீங்கள் தான் என்று விளக்கம் அளித்தான். ஒருகோப்பை மதுவுக்கு அடிமைபட்டு கிடப்பதா? கண்திறந்து பாருங்கள் ஆலைகளில் நிரம்பி வழியும் அத்தனை மதுவும் உங்களுடையது என்றான். நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் அறையில் இருந்தவர்கள் முண்டியடித்து பின்னால் வந்து நின்று எட்டிப்பார்த்தனர். அவன் கண்களில் தெரிந்த தீயால், காகிதத்தில் தீ பற்றியதா? தீ பிடித்த காகிதத்தை கையில் வைத்திருந்ததால் அவன் கண்கள் ஒளிர்ந்ததா? அந்த ஒளியால் அவன் கண்களுக்கு மட்டும் வெளிச்சம் தெரிந்ததா? என்று பிரித்தறிய முடியவில்லை. ஆனால் அவன் காட்டிய வழியில் மூட்டை முடிச்சுக்களோடு ஏராளமானோர் புறப்பட்டனர். எழுதி எழுதி குவித்து தள்ளிய பழுப்பேறிய காகிதங்களோடு அவனும் பின்னர் பதப்படுத்தப்பட்டான். வெளிச்சக் காட்டில் கருப்பு விதைகளை அறுவடை செய்து ரத்தம் சொட்ட சொட்ட குனிந்த தலையோடு பலர் அறைக்கு திரும்பினர். சரிந்த சிலைகளோடு அவன் ஏற்றிய தீயும் காற்றில் கரைந்தது. தீயை பற்ற வைக்க அப்போதும் மது தேவைப்பட்டது.

அரையாடையும், அமைதியும் கொண்டு கிழவன் ஒருவன் அறைக்குள் வந்தான். ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினான். உரிமைகளை எப்படி கேட்பதாம் என்று எதிர்குரல் அறையின் மூலையில் இருந்து வெளிப்பட்டது. உண்மைகளை சொல்லுங்கள், மீண்டும் மீண்டும் சொல்லுங்கள் அதுவே உங்களுக்கு விடிவு என்றான் கிழவன். ஏகடியம் பேசி எள்ளி நகையாடினர். சிரித்த முகத்துடன் அவமானங்களை விழங்கி கொண்டான். மதுகுப்பிகள் நீட்டப்பட்டபோது, இதுதான் முதல் எதிரி என்றான். ஆனாலும் மதுகுப்பிகளுக்கு நடுவேதான் வட்டமேசை மாநாடுகள் நடந்தன. அடித்தால் வாங்கி கொள்ளுங்கள், திருப்பி அடிக்காதீர்கள் என்றபோது உலகமே சிரித்தது. கிழவன் அப்போதும் அமைதி காத்தான். கத்தியுடன் அறைக்குள் உலவிய ஆட்சியாளர்களை, புத்தியுடன் வெளியே தள்ளினான். அவனுக்கு இரண்டு தோட்டாக்கள் பரிசளிக்கப்பட, மதுவிற்பனை கனஜோராக தொடங்கியது.

எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாத பலர் அறைக்குள் குறுக்கும் மறுக்கும் ஓடத் துவங்கினர். உட்கார்ந்து பேச நேரமில்லாதவர்கள் காலத்தை விற்பனை செய்தனர். அவ்வப்போது சலிப்படைந்தது அறை. அவ்வாறு சலித்தபோதெல்லாம் உடலை ஒருமுறை குலுக்கிக் கொண்டது. அதுவரை ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம் சட்டென்று அடங்கி போவார்கள். இதனை பார்த்து அறை தனக்கு தானே சிரித்துக் கொள்ளும். அறைக்குள் இருந்துகொண்டு அறையை மறந்துவிட்டு கூப்பாடும், கூச்சலும் போடும்போது அறை உடன்பேச முயற்சிக்கும். ஆனால் அவர்களுக்கு காதுகேட்காது. அமைதியாகி விட்டு அறை உடல் சிலிர்க்க, அலறல் சத்தம் அறையெங்கும் கேட்கும். எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள். அறை மட்டும் அங்கேயே இருந்தது. கூடவே சில மதுகுப்பிகளும்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment