Advertisment

தமிழ்ச்சுவை 9 : சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் டைரக்‌ஷன்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காட்டும் சில காட்சிகள், பின்னர் வருவதை முன்னே சொல்வது போல் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட காட்சியை விவரிக்கிறார், இரா.குமார்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Suvai - Ra.Kumar - Silappathikaram - Elangovadikal

இரா.குமார்

Advertisment

திரைப்படங்களில், குறிப்பாக கே. பாலச்சந்தர் படங்களில், பின்னால் நடக்கப்போவதை உணர்த்தும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பார். அவள் ஒரு தொடர்கதை படத்தில், சுஜாதா ஒரு பாட்டுப் பாடுவார். அப்போது கூரை இல்லாத வீடு, துடுப்பு இல்லாத படகுகளைக் காட்டுவார் பாலச்சந்தர். அவளுக்கு வாழ்க்கை அமையப் போவதில்லை என்பதை, இந்தக் காட்சிகள் மூலம் உணர்த்துவார்.

இப்படி ஒரு காட்சியை சிலப்பதிகாரத்தில் வைத்துள்ளார் இளங்கோவடிகள்.

கண்ணகி திருமணம். மணவிழாவில் கலந்து கொண்ட பெண்கள், கண்ணகியை வாழ்த்துகிறார்கள். எப்படி தெரியுமா?

காதலற் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்

தீது அறுக

என்று வாழ்த்துகிறார்கள். அதாவது, கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இன்றுபோல என்றும் சேர்ந்திருக்க வேண்டும். பிடித்த கைகள் இறுக்கியபடி இருந்து உங்கள் அன்பு அதிகரிக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நன்மையே நடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் வாழ்த்தியதன் பொருள்.

ஆனால், “கணவன் மனைவி பிரியாமல், பிடித்த அவர்களின் கரங்கள் இறுக்கம் தளராமல், தீமைகள் ஒழிந்து வாழ்க” என வாழ்த்துகிறார்கள்.

பிரியாமல்

தளராமல்

தீமை ஒழிந்து

என்று முழுக்க முழுக்க அமங்கலச் சொல்லால் வாழ்த்துகிறார்கள். மங்கலச் சொற்களால்தான் வாழ்த்துவார்கள். நல்லா இரு என்று வாழ்த்துவதுதான் மரபு. கெட்டுப் போகாமல் இரு என்று யாரும் வாழ்த்தமாட்டார்கள். ஆனாலும் அமங்கலச் சொற்களால் வாழ்த்துவதாக எழுதியுள்ளார் இளங்கோவடிகள். ஏன்?

கண்ணகியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தவே இப்படி அமங்கலச் சொற்களைப் போட்டு எழுதி குறிப்பால் உணர்த்துகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே, இளங்கோ அடிகள் டைரக்‌ஷன் எப்படி? வியக்க வைக்கிறதல்லவா?

இதேபோல, கோவலனுக்கு மாதவி எழுதும் கடிதமும் கவனிக்கத் தக்கது.

தன்னைப் பிரிந்து சென்ற கோவலனுக்குக் கவுசிகன் மூலம் ஒரு கடிதம் அனுப்புகிறாள் மாதவி. அதில் மாதவி எழுதியிருப்பதாகஇளங்கோவடிகள் சொல்கிறார் பாருங்கள்....

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்.

குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியொடு

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது

கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்,

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி.

கடிதத்தில் மாதவி கூறியிருப்பது இதுதான்....

அடிகளே உங்கள் முன் விழுந்து, உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். தெளிவற்ற என் சிறு மொழிகளை தயவு செய்து கேட்டருள வேண்டுகிறேன். வயதான தாய் தந்தைக்கு அருகில் இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல், உயர்குடியில் பிறந்த கண்ணகியுடன் புகார் நகரை விட்டு சென்றது ஏன்? அதுவும், ஊரைவிட்டு யாருமே செல்ல விரும்பாத சிறப்பு மிக்க பூம்புகார் நகரைவிட்டு மனைவியுடன் இரவோடு இரவாக, யாருக்கும் தெரியாமல் சென்றதற்கு, நான் செய்த தவறுதான் காரணமோ என்று என் மனம் சோர்வடைகிறது. அப்படி என்னுடைய தவறுதான் காரணம் என்றால், என்னுடைய சொல்லைப் பொருட்படுத்தாமல், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். குற்றமற்ற அறிவை உடைய மேன்மை உடைய தங்களைப் போற்றுகின்றேன்.

இப்படி மாதவி எழுதிய மடலை வாசித்த கோவலன் மனம் நெகிழ்ந்தான். மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் என்றும் ஆடல் மகள் என்னிடமே நடித்தாள் என்றும் சொல்லிப் பிரிந்தவன், இந்தக கடிதத்தைப் படித்தபின் மாதவி குற்றமற்றவள் என உணர்கிறான்.

“என் பெற்றோரிடம் சொல்லாமல், ஊரை விட்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி, மாதவியின் இந்தக் கடிதத்திலேயே உள்ளது. எனவே, இந்தக் கடிதத்தை, நான் கொடுத்ததாக என் பெற்றோரிடம் கோண்டுபோய்க் கொடு” என்று கவுசிகனை அனுப்பி வைக்கிறான் கோவலன்,

காதலன் கோவலனுக்கு மாதவி எழுதிய கடிதம், அதையே, கோவலன் தன் பெற்றோருக்கு அனுப்பக் கூடியதாக இருக்கிறது. ஒரே கடிதம், காதலனுக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது. அவனுடைய பெற்றோருக்கு அனுப்பினாலும் பொருந்துகிறது.

ஆஹா... இந்தக் கடிதத்தை எவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறார் இளங்கோவடிகள்.

Ra Kumar Tamil Suvai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment