சிறுகதை: வண்டியில் அதே கர்ப்பிணி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil thriller stories - சிறுகதை: அண்ணே வலிக்குதுண்ணே ....!

tamil thriller stories - சிறுகதை: அண்ணே வலிக்குதுண்ணே ....!

1871

குளிரை உள்வாங்கிக் கொண்டு உரக்க உறங்கிக் கொண்டிருந்தது அந்த கிராமம். இருளே இருளை கண்டு பயப்படும் சூழல் அங்கே.

Advertisment

ரவுக்கையின்றி சீலை உடுத்திய பெண்ணொருத்தி, அந்த சாமத்தில் உப்பியிருக்கும் வயித்தை பிடித்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வந்தாள். பிரசவ வலி. அதைத் தாங்க முடியாமல், முனங்கிய படியே, தெருவில் இருந்து சாலைக்கு வந்தாள்.

முழுதாய் 10 நிமிடங்கள் கடந்து செல்ல, தூரத்தில் மாட்டு வண்டிக்காரன் ஒருவன் வரும் சத்தம் கேட்டது அவள் காதுகளில். வலியையும் மறந்து, அந்த திசை நோக்க, மெல்ல மெல்ல அவளை நெருங்கியது மாட்டு வண்டி. அதை ஓட்டி வந்தவன் காது வரை மீசை வைத்திருக்க, அவன் கண்களில் மட்டும் ஒரு கலக்கம். மயக்கம்.

வண்டியை மறித்தவள், 'அண்ணே... பஞ்சம் தீர்க்க ஊரு ஆம்பளைங்க எல்லாரையும், ஓரி வந்து, சீமைக்கு ஓட்டிட்டு போயிருக்கான். ஒத்தாசைக்கு பொம்பளைங்களும் போயிட்டாங்க. எம்புருசன் மண்ணாகி 30 நாளாச்சு! கிழவியும் செத்துப் போச்சு! ஊரும் என்ன அம்போ-ன்னு விட்டுப் போச்சு! நானாச்சு.. எழுந்து வாரேன் வலிய பொறுத்துகிட்டு. கெழக்கால ஒண்ணே முக்கால் மயில்ல, வாசல்ல தேக்கு நிக்குற குடுசயில என்ன விட்டுருங்க... எம் புள்ளைக்கு உம்ம பேரு வக்குறேன் மகராசா' என்றாள்.

Advertisment
Advertisements

எல்லாத்தையும் காதுல வாங்குன வண்டிக்காரன், 'ஏறு!' என்றான் ஒற்றை வார்த்தையில்.

கையெடுத்து கும்பிட்ட அவள், வண்டியில் ஏறியதும், காளைகள் சிலிர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தன. சற்று தூரம் செல்லும் போதே, மாடுகள் நேராக போகாமல், அங்கும் இங்குமாய் அசைந்து அசைந்து செல்வதை அந்த வலியிலும் அவள் உணர்ந்தாள். வண்டிக்காரன் சாராயம் குடித்துவிட்டு வண்டியை ஓட்டுகிறான் என்பதை தெரிந்து கொண்டாள்.

மனதுக்குள் பக்கென்று இருந்தாலும், 'அண்ணே வலிக்குதுண்ணே... சீக்கிரம் போண்ணே' என்று விரட்டிக் கொண்டே இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஆற்றங்கரையோரம் சென்ற வண்டி, நடுவழியில் நின்றது. வண்டிக்காரன் அப்படியே, தன்னிலை மறந்து சாய்ந்துவிட்டான்.

சரியாக, மூன்று மணி நேரம் கழித்து, வண்டிக்காரனின் கண்கள் மெல்லத் திறந்தன. போதை சற்று தெளிந்து இருந்தது. சுதாரித்தவன், 'ஒரு கர்ப்பிணியை வண்டியில் ஏற்றினோமே' என்று அதிர்ந்தவனாய் திரும்பிப் பார்த்தான். அவனது முகம் வெளிறியது. கண்கள் அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றன.

வண்டி முழுவதும் ரத்தக் களரி. தாயும், பிஞ்சும் ரத்தத்திற்கும், பனிக்குடத்திற்கும் மத்தியில் இறந்து கிடந்தனர். அந்த கணம் தான் வண்டியில் அடித்த நாற்றத்தையே அவன் உணர ஆரம்பித்தான். போதையில் நாம் மயக்கமாகிவிட்டதால், வண்டியிலேயே அவள் துடிதுடித்து, குழந்தையும் பிறந்து, இருவரும் இறந்து போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்.

என்ன செய்வது இப்போது? இன்னும் இருள் அகலவில்லை. துரிதமாக செயல்பட்டான்.

இரண்டு உடல்களையும், கோணிப் பையில் போட்டு இறுக கட்டி, ஆற்றங்கரையோரம் உள்ள மணலில் குழி தோண்டி புதைத்தான். அதுவும் தன் முழுபலம் கொண்டு, ஆழமாக குழி வெட்டி அதில் இருவரையும் புதைத்தான். பின், வண்டியை ஆற்றுக்கு கொண்டுச் சென்று, சுத்தமாக கழுவி துடைத்து எடுத்தான். வண்டி சுத்தமானது.

இனியும், இங்கிருக்கக் கூடாது என முடிவெடுத்தவன், வண்டியை சாலைக்கு ஓட்டினான். ஆற்றங்கரையில் இருந்து வண்டி சாலைக்கு வந்தவுடன், அவர்களை புதைத்த இடத்தை கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், மாடுகளை விளாச, பின்னால் இருந்து அந்த குரல் கேட்டது.

'அண்ணே வலிக்குதுண்ணே... சீக்கிரம் போண்ணே...!'

வண்டியில், அந்த கர்ப்பிணி தன் குழந்தையுடன்!.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: