நாளை மறுநாள் தொடங்குகிறது, சென்னை புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. 708 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

chennai book fair

சென்னை புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. 708 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. 41வது சென்னை புத்தக கண்காட்சி நாளை மறுநாள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 708 அரங்குகளுடன் தொடங்குகிறது. இதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா அரங்குகள் 22, பொது அரங்குகள் 24 ஆகியவை அடங்கும்.

இம்மாதம் 22ம் தேதி வரையில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் 236 தமிழ் பதிப்பாளர்களும், 102 ஆங்கில பதிப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள், எழுத்தாளர் சந்திப்புக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் புதிய தலைப்பிலான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற உள்ளது. புத்தக கண்காட்சியை நாளை மறுநாள் (10ம் தேதி) மாலை 5 மணிக்கு, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார். நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்குகிறார்.

புத்தக கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. சிலை திறப்புவிழா 11ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பெண்களை போற்றும் விதமாக 12ம் தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரையன்பு, எம்.ராஜாராம், என்.சுப்பையன், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்.திருநாவுக்கரசு, பேச்சாளர்கள் பழ.கருப்பையா, கு.ஞானசம்பந்தன், சுகிசிவம், பாரதி பாஸ்கர், திரைப்பட நடிகர் சமுத்திரகனி உள்பட பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

புத்தக கண்காட்சி நிறைவு விழா 22ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தலைமை தாங்குகிறார். சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார்.

புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கிறாது. அதன்படி 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவு சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதை கடந்தவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெறும். வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெறும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவை போன்றவற்றிற்கும் தனியாக அரங்குகள் உள்ளன.

கார்கள் நிறுத்துவதற்கு ரூ.30ம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 13 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The day begins tomorrow the chennai book fair

Next Story
தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு : ‘போக்குவரத்து ஊழியர் நிலுவைத் தொகையை உடனே வழங்குக’AIADMK MLA's Disqualification case, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com