மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மீது கவனம் ஏற்படுத்துவதற்காக உன்னதம் இலக்கிய இயக்கம் நடத்தும் கருத்தரங்கின் முன்னோட்டமாக ‘டிரான்ஸ்லேஷன் டாக்ஸ்’ Translation Talks என்ற ரிங்டோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரிங்டோனை நீங்கள் விரும்பினால் உங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்வதேச மொழிபெயர்ப்புப் படைப்புகளின் பால் தீராத ஈடுபாடும் ஆர்வமும் கொண்டுள்ள நவீன இலக்கியம் சார்ந்த தமிழ்ச் சூழலின் தற்கால இலக்கிய செயல்பாடுகளில் கவனம் ஏற்படுத்தும் விதமாக, எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் உன்னத இலக்கிய இயக்கம் அக்டோபர் 30-ம் தேதி மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஒரு கருத்தரங்கை நடத்துகிறது.
கூகுள் மொழிபெயர்ப்பு செயலியில் ஒருபோதும் ஒரு உயிரோட்டமான மொழிபெயர்ப்பை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், இலக்கியத்தில் நல்ல படைப்புகள் புதிய வார்த்தைகளையும் புதிய நடையுடனும் வந்துகொண்டிருக்கிறது. அதனால், கூகுல் மொழிபெயர்ப்பு செய்திகளையும் சின்னசின்ன தொடர்களையும் புரிந்துகொள்ள பயனர்களுக்கு உதவலாம். ஆனால், கூகுள் மொழிபெயர்ப்பை வைத்து இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணியின் முக்கியத்துவம் அறியப்படாமல் போகிறது. அதனால், தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் உன்னதம் இலக்கிய இயக்கத்தின் மூலம் ஒரு கருத்தரங்கை நடத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த மொழிபெயர்ப்பாளர்கள் கருத்தரங்கத்தை கவனப்படுத்தும் வகையில் டிரான்ஸ்லேஷன் டாக்ஸ் என்ற ரிங்டோனை உருவாக்கி அதை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் ஜேட்ஜ் தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பாளர்கள் கருத்தரங்கம் குறித்து கௌதம சித்தார்த்தன் கூறியதாவது: “கடந்த 40 வருடங்களாக உன்னதம் இதழ் உலகளவிலான இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து மொழிபெயர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் பெருமளவில் செயல்பட்டு வந்துள்ளது.
இணைய வளர்ச்சியில்லாத காலகட்டங்களில், சிறந்த தரமான படைப்புகளைத் தேடி அலைந்தது, அதற்குரிய மொழி பெயர்ப்பாளர்களைத் தேடியது, பொருள் விரயம், நேர விரயம், இப்படிப் பல்வேறு இன்னல்களையும், அல்லல்களையும் கடந்தே தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உருவாகின. இந்த உருவாக்கத்தின் விளைவாக தமிழின் படைப்பு மொழி பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, தற்போதைய கால கட்டம் இணையத் தொழில்நுட்பமும், மொழிமாற்றச் செயல்பாடுகளும் மிக மிக வளர்ச்சியடைந்து, அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அபரிமிதமான கால கட்டம். ஒரு காலத்தில், பெரும் போராட்டங்களுடன் தேடி அலைந்த உலகளாவிய படைப்பு, இன்று கைச் சொடுக்கில், நம் முன்னே வந்து விழுகிறது. தமிழ் படைப்புகள் அண்டை மாநில மொழியான மலையாளம் போன்ற மொழியில் வருவதே ஆகப்பெரிய ஜென்ம சாபல்யம் என்று கொண்டாடிய காலங்களைப் பின்னுக்குத் தள்ளி, உலக மொழிகளில் எல்லாம் தமிழ் படைப்புகள் வருவதற்கான தருணங்கள் உருவாகின்றன. இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு, எதிர் வருகின்ற அக்டோபர் 30 ஞாயிறு அன்று, உன்னதம் மொழிபெயர்ப்பு சம்பந்தமான ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது.
உன்னதம் இந்தக் கருத்தரங்கை Translation Talks மொழிபெயர்ப்பு உரையாடல்கள் என்ற தலைப்பில் நடத்துகிறது.
மொழிபெயர்ப்பின் அடுத்த கட்டத்தை நோக்கி..
இணையத்தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக மொழிபெயர்ப்புக் கலை எதிர்கொள்ளும் சவால்கள்.
மொழிபெயர்ப்புப் பதிப்புரிமைகளின் சிக்கல்களும், அவைகளை எதிர் கொள்ளும் வழிகளும்.
சர்வதேச மொழிகளில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு நகரும் தருணங்கள்.
மொழிபெயர்ப்புச் சந்தைகளில் குமியும் சர்வதேச ஜோடனைகளினூடே அற்புதமான மலரைத் தேடும் தீவிர வாசகனின் தேடுகை என்பது என்ன?
சர்வதேச இலக்கிய அரங்கில் தமிழ்மொழியின் இடம் என்ன?
இப்படியான மொழிபெயர்ப்பு சார்ந்த பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசும் உரையாடல்களை உள்ளடக்கிய ஒரு அடையாளச் சின்னமாக இந்தத் தலைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை இளம்தலைமுறை வாசகர்களிடம் கவனப்படுத்துவதற்காக Translation Talks என்ற ரிங் டோன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
இது Zedge இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரிங் டோனை தமிழின் மூத்த தமிழிசை ஆய்வாளரான புகழ்பெற்ற இசை அறிஞர் நா.மம்மது அவர்களும் இளந்தலைமுறை இசை எழுத்தாளர் லலிதாராம் அவர்களும் வெளியிட்டார்கள். இசை எழுத்தாளர் ஷாஜி அறிமுகப்படுத்தினார்.
விழாபற்றிய லோகோவை மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களும், இளந்தலைமுறை மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா அவர்களும் வெளியிட்டனர்.
மேலும், உன்னதம் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டாடுவோம் என்கிற தலைப்பில், மறைந்த முன்னோடி மொழிபெயர்ப்பாளர்களின் படங்களை புகழ்பெற்ற தமிழ் ஓவியர்களால் வரையப்பட்டு சமூக ஊடகங்களில் ஒரு தொடராக வெளியிட்டு வருகிறது
ந.மு.நடேஷ், ரஃபீக் அகமது, ராஜன், ஜீவா, தனராஜ், மு.சுந்தரன், ரவி பேலட், தமிழ்ப்பித்தன், ரவிசங்கரன் போன்ற நவீன ஓவியர்கள் இந்த தொடரில் பங்கு கொண்டு ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஓவியங்களை விழா நிகழ்வில், நூலாக வெளியிட இருக்கிறது உன்னதம். மேலும், இந்த விழாவில், இடாலோ கால்வினோ நாவல், ஆங்கில நாவல், ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு தற்கால மலையாளக் கதைகள், தற்கால சர்வதேசக் கவிதைகள்.. உட்பட 6 நூல்களை வெளியிடுகிறது உன்னதம்.
இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைக்க சாகித்ய அகாடமி விருதாளரும் மூத்த மொழிபெயர்ப்பாளருமான சா.தேவதாஸ் வருகை தருகிறார்.
மூத்த மொழிபெயர்ப்பாளர்களான எத்திராஜ் அகிலன், எஸ்.பாலச்சந்திரன், வேங்கட சுப்புராய நாயகர், அசதா, சமயவேல், கார்த்திகை பாண்டியன், ஷஹிதா, லதா அருணாசலம், இல.சுபத்ரா, கணேஷ்ராம், பாலகுமார் விஜயராமன் …. உள்ளிட்ட தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களும், இளம்தலைமுறையைச் சேர்ந்த தற்கால புதிய மொழிபெயர்ப்பாளர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.” என்று கூறினார்.
மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்கும் இந்த கருத்தரங்கில், யார்யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் என்று கேட்டதற்கு, “மொழிபெயர்ப்பு சார்ந்த படைப்பாக்கங்களில் ஆர்வமும் அதீத ஈடுபாடும் கொண்டுள்ள வாசகர்களும் படைப்பாளிகளும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க அழைக்கிறோம்” என்று இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil