இன்றைய தலைமுறையினர் பலரும் எல்லாவற்றையும் யூடியூப் வழியாகவே பார்த்து தெரிந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் சமையல் வீடியோக்கள்தான் அதிகம் பார்க்கப்படுபவையாக உள்ளன. அதனாலேயே பலரும் சமையல் வீடியோவை பதிவேற்றுகிறார்கள். சமையலுக்கு அடுத்து சினிமா வீடியோக்கள்தான் அதிகம் பார்க்கபடுபவையாகவும் பதிவேற்றப்படுபவையாகவும் இருக்கின்றன.
சமையல், சினிமா தாண்டி, அறிவியல், இலக்கியம், இசை கற்பித்தல், ஓவியம் கற்பித்தல் என பல வகையான வீடியோக்களும் யூடியூபில் பதிவிடப்படுகின்றன. இதற்கான பார்வையாளர்கள் மிகவும் குறைவானவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் நிலையான பார்வையாளர்கள். யூடியூப் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களில் இலக்கியம் என்றால் ஓரளவு படித்த அல்லது ஆர்வம் இல்லாதவர்கள் விலகி ஓடும் நிலைதான் உள்ளது. இலக்கியத்தை மிக சுவாரஸ்யமாக எளிமையாக அறிமுகப்படுத்தினால் நிச்சயமாக எல்லோரும் கேட்பார்கள். அப்படி எல்லோரையும் ஈர்க்கும் விதமாக இலக்கியத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் தனது கருமாண்டி ஜங்ஷன் யூட்யூப் சேனலில் அறிமுகப்படுத்துகிறார் பத்திரிகையாளர், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா.
சங்க இலக்கியங்களில் வருகிற புகுரி இசைக்கு ஆடும் அசுண பட்சி, வரலட்சுமி விரதம் ஏன் அய்யங்கார் வீடுகளில் கும்பிடுவது இல்லை என்ற கேள்வியின் மூலம் எந்த கிழவியையும் அலட்சியப்படுத்தாதீர்கள், மதுரை அழிந்ததற்கு கண்ணகி காரணம் இல்லை ஒரு வணக்கம்தான் காரணம் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை எழுத்தாளர் அமிர்தம் சூர்யா தனது கருமாண்டி ஜங்ஷன் யூடியூப் சேனலில் மிகவும் சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறார். இந்த வீடியோக்களைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக இலக்கியங்களைப் படிக்க ஆவல் கொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
எழுத்தாளர் அமிர்தம் சூர்யா, கடவுளைக் கண்டுபிடிப்பவன், பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு, வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம், முக்கோணத்தின் நாலாவது பக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பெரும்பாலும் இலகியம் குறித்து எழுதவும், பேசுவதற்கு இலக்கிய மேடைகளையுமே பயன்படுத்திவரும் சூழலில், உங்களுக்கு எப்படி யூடியூபில் பேச வேண்டும் என்ற சிந்தனை தோண்றியது என்று ஐஇ தமிழில் இருந்து எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவிடம் பேசினோம்.
அமிர்தம் சூர்யா அவருக்கே உரிய உற்சாகமான மனநிலையில் பேசினார், “யூடியூபில் என்னுடைய 40 உரைகள் இருக்கிறது. ஒவ்வொரு உரையும் 30-40 நிமிடம் பேசியிருப்பேன். சிலர் அமிர்தம் சூர்யா பேச வருகிறார் என்ற பிறகே அரங்கத்தையே பதிவு செய்வார்கள். நான் பேசுகிற நிகழ்ச்சிகளில் ஸ்ருதி டிவி என் உரையை மட்டும் பதிவு செய்து யூடியூபில் போடுவார்கள். அதற்கு முக்கியமான காரணம் நான் எப்போதும் எந்த புத்தகத்தைப் பற்றியும் தரக்குறைவாகவோ மட்டம்தட்டியோ பேசமாட்டேன். எந்த புத்தகமாக இருந்தாலும் ஒரு இரண்டு விஷயமாகவாவது நல்ல விஷயம் இருக்கும். அதை மட்டுமே பேசுவேன். இது இலக்கியம் ஆகல, இது கவிதையாக ஆகல, இது நல்லா வளரனும் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். இது நல்லா இருக்கிறது, அருமையாக இருக்கிறது என்று சொல்வேன். அதனாலேயே நம்மை நிறைய பேர் பேசுவதற்கு கூப்பிடுவார்கள். ஒரு மாதத்துக்கு 4 கூட்டங்களுக்கு போய்க்கொண்டிருந்தேன். என்னுடைய உரையை பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய பிளாகில் எழுதினார். அமிர்தம் சூர்யாவின் இலக்கியப் பேச்சு தமிழ்ச்சூழலுக்கு முக்கியமானது என்று எழுதினார். அப்படி பேர் வாங்கிய சூழலில்தான் இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் முடக்கி விட்டது.
நானும் கல்கி பத்திரிகையை விட்டு வெளியே வந்துவிட்டேன். அப்போது நிறைய பேர், மாசத்துக்கு 4 புதிய விஷயமாவது கேட்போம். அது இப்போது இல்லை என்று கூறியபோதுதான், நாம் பேசுவதை யூடியூபில் போட்டால், நமது குரல் உருவத்துடன் போய் சேரும் என்று தொடங்கினேன். இரண்டாவது யூடியூபில் எங்கே போனாலும், ஒன்னு சினிமா, இன்னொன்னு சமையல் இதுதான் இருக்கிறது. சினிமாவும் சமையலும் இல்லாமல், 7 நிமிடத்தில் இலக்கியம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த 7 நிமிட வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரு இலக்கிய செய்தியை தெரிந்துகொண்டு போக வேண்டும். இலக்கியம் சார்ந்த விஷயத்தைதான் நாம் செய்ய வேண்டும் என்பதோடு வெவ்வேறு விஷயங்களைப் பேசியுள்ளேன். உதாரணமாக, மதுரை அழிந்தது கண்ணகியால் அல்ல, ஒரு வணக்கத்தாலதான், இலக்கியத்தில் அசுண பட்சி என்று ஒரு பறவை இருக்கிறது, நவீன நாடகம் போடுகிற பகு அநாதை பிணங்களை அடக்கம் செய்கிறார். எந்த கிழவியையும் தப்பா நினைக்காதீர்கள், அதனால், வரலட்சுமி விரதத்தை ஐயங்கார்களே கும்பிட முடியாமல் போய்விட்டது பாருங்க என இப்படி இலக்கியம் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை சொல்வதற்காக இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தொடங்கினேன். நமது நண்பர்களும் இலக்கியத்தைதான் விரும்புகிறார்கள்.
அதே நேரத்தில், இலக்கியத்தில் முக்கால் மணி நேரம் எல்லாம் யாரும் கேட்க தயாராக இல்லை. 7 நிமிடத்துக்குள் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்கிறார்கள். அதனால், 7-8 நிமிடங்களில் ஒரு இலக்கிய செய்தியை சொல்லாம் என்று திட்டமிட்டேன்.
அதன் பிறகுதான், இந்த கருமாண்டி ஜங்ஷன் என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கினேன். அமிர்தம் சூர்யா என்ற பெயர் செட் ஆகவில்லை. என்னுடைய நிறைய தோழிகள் என்னை கருமாண்டி, கருவாயானு கூப்பிடுவார்கள். அதனால், நம்மை கிண்டலாக கூப்பிடும் பெயரான கருமாண்டி என்பதை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். ஜங்ஷன் என்பது ஜோலார்பேட்டை ஜங்ஷன், அரக்கோணம் ஜங்ஷன் என்பது மாதிரி, ஜங்ஷன் என்றால் ஒருவர் இறங்கி ஏறுகிற இடம் என்ற அர்த்தத்தில், இங்கே வந்தால் இலக்கியத்தையும் ஆன்மீகத்தையும் தெரிந்துகொள்ளலாம். அதனால், ரயில்வே தடத்தில் இருக்கிற போர்டையே லோகோவாக மாற்றி கருமாண்டி ஜங்ஷன் என்று வைத்தேன்.
கருமாண்டி ஜங்ஷன் யூடியூப் சேனல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. சரியாக 6,000 பேர் பார்த்திருக்கிறார்கள். 320 பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். இது பெரிய விஷயம்தான்.” என்று கூறினார்.
இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து கேட்டபோது, “இலக்கியம் என்பது பெரிய உண்ணதம் எல்லாம் இல்லை. சாதாரண மனிதனை நோக்கி சென்றடைய வேண்டிய விஷயம். இப்போது இருக்கிற காலகட்டத்தில் அவன் புத்தகம் வாங்கியோ 100 பக்கம் 200 பக்கம் படித்து இலக்கியத்தை தெரிந்துகொள்ள அவன் தயாராக இல்லை. 7 நிமிடத்துக்குள் தமிழ் இலக்கியத்தையும் தமிழ் இலக்கியம் சார்ந்த பிரம்மாண்டத்தையும் உண்ணதத்தையும் அவனுக்கு சொல்லிவிட வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறினார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவின் ‘கருமாண்டி ஜங்ஷன்’ யூடியூப் சேனல் மிக எளிமையாக சுவாரஸ்யமாக இலக்கியத்தையும் ஆன்மீகத்தையும் அறிமுகப்படுத்துகிறது. நீங்களும் அமிர்தம் சூர்யாவின் யூடியூப் சேனல் கருமாண்டி ஜங்ஷனுக்கு ஒருமுறை போய் பாருங்கள். பிறகு நீங்கள் அடிக்கடி போகும் இடமாக மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”