நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது. மக்கள் வேலை தேடி உள்நாட்டிலேயே மாநிலம் விட்டு மாநிலம் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்லும்போது, ரயில் மோதி இறந்துபோகிறார்கள். பாதி வழியிலேயே ஒரு குவளை தண்ணீர் இன்றி நாவறண்டு இறந்துபோகிறார்கள். இந்த மக்கள் கோருவதெல்லாம், வயிற்றுக்கு 3 வேளை உணவு, அதை பெறுவதற்கு ஒரு வேளை. ஆனால், அதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாதவர்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்கள் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம், அரசை நோக்கி யாரேனும் கேள்வி எழுப்பினால், அவர்கள் தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படும் காலத்தில்தான், எழுத்தாளர் அழகிய பெரியவனின் ‘யாம் சில அரிசி வேண்டினோம்” நாவல் வெளி வந்திருக்கிறது.
மாபெரும் புனைவுகளை வரலாறாக முன்வைத்து அவற்றையே அரசியல் வரலாறாக்கி அதிகார உற்பவமாக நிறுவப்படுகிறது. அதை விமர்சிக்கும் குரல்களை அடக்கம் செய்கிற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், அரசு அதிகாரத்தின் ஆணவத்துக்கு புனைவுகள்தான் எளிய மனிதர்களின் சார்பில் நீதி கேட்கும் குரலாக சரியான எதிர்வினைகளை ஆற்றும் வலிமையையும் உத்திகளையும் பெற்றிருக்கின்றன.
பெரும்பாலும் எளிய மனிதர்கள் சம அதிகாரத்தைக் கோருவதில்லை. சமத்துவத்தைக்கூட கோருவதில்லை. பல நேரங்களில் அவர்களுக்கு அவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவர்கள் வேண்டுவதெல்லாம், 3 வேளை வயிறார உணவு, அந்த உணவை சம்பாதிப்பதற்காக ஒரு மரியாதையான வேலை. அதுவும் கிடைக்காதபோதுதான் மனிதர்கள் நீண்ட புழுக்கத்திற்குப் பிறகு கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்கள்.
அப்படி தானும் தனது குடும்பமும் பசியின்றி வாழ, தனது படிப்புக்கு ஏற்ற மரியாதையான ஒரு வேலையைக் கேட்கும் எளிய மனிதனை அரசு இயந்திரத்தின் அதிகாரி தாக்குவதும், வழக்கு போட்டு அவனை வஞ்சிப்பதும், குற்றவாளியாக்கி அவன் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குவதும் நடக்கும்போது, அவன் நீதி கேட்டு போராடுவதை அவனுடைய வாழ்க்கை மற்றும் குடும்பம், சமூகப் பின்புலங்களுடன் இந்த நாவலில் விவரித்துள்ளார் அழகிய பெரியவன். அதை ஏதோ ஒரு கவசிநாதன் (நாவலின் மையப் பாத்திரம்) என்ற தனிமனிதனுக்கு நடந்த அநீதி அதற்கான போராட்டமாக சுறுக்கிவிடாமல் அது ஒட்டுமொத்தமாக எல்லா மனிதர்களுக்குமானது என்று தனது பரப்பை இந்த நாவல் விரித்துக்கொள்கிறது.
மொத்த சூழலும், மொத்த அரசு இயந்திரமும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கானதாக இருந்தாலும், எளிய மனிதர்களுக்கு குரல் கொடுக்க உறுதியான மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் விதைக்கிறது. பெரியவர் கதாபாத்திரம் உள்ளூர் அளவில் செயல்படும் சமூக செயல்பாட்டாளர்களின் பணிகளையும் அவர்களின் லட்சியமும் உறுதியும் எல்லா காலங்களிலும் மனிதன் தழுவிக்கொள்ள வேண்டிய பண்பு என்று பரிந்துரை செய்கிறார்.
கவசிநாதனின், குடும்பப் பின்னணி, குடும்பத்தின் வறுமை, இடப்பெயர்வு, பீடி சுருட்டும் வேலை, தோல் பதனிடும் வேலை அதை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை சாதியால் ஒடுக்கப்படும் சமூக நிலை என்று எல்லாவற்றையும் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார். இப்படியான பின்புலத்தில் வளரும் ஒருவன் படித்து பட்டம் பெறுவது என்பது எளிதானது இல்லை என்பதை கவசிநாதனின் வாழ்க்கை மூலம் எடுத்துரைத்துள்ளார்.
படிப்பதற்கு, பாட்டி வீட்டுக்கு செல்லும் கவசிநாதன் மாமனின் நண்பர் மூலம் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும்போது அதில் இருந்து தப்பிப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒரு சிறுவனின் பள்ளி படிப்பு கால கட்டத்தையும் அப்போது சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறார்.
அதே நேரத்தில், கவசிநாதன் ஒரு நிலையான வேலை இல்லாமலும் போதிய ஊதியம் இல்லாமலும் திருமணமாகி குழந்தைகளுடன் திண்டாடும் வாழ்க்கையை வாசகனுக்கு மிகவும் நெருக்கமாக்கி கவசிநாதன் மீது கொள்ளும் கழிவிறக்கம் வாசகன் தன் மீது கொள்ளும் கழிவிறக்கமாக உணரச் செய்கிறார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதிகாரியால் தாக்கப்படும் கவசிநாதனுக்கு ஏற்பட்ட அவமானம் எல்லா வேலை இல்லா பட்டதாரிகளுக்குமானது என்பதை இந்த படைப்பு அடங்கிய குரலில் சொல்கிறது.
அரசு இயந்திரத்தில் பணி செய்யும் ஒரு ஆணவமிக்க அதிகாரி எளிய மனிதர்களை காயப்படுத்தும்போது, அவமானப்படுத்தும்போது அத்தகைய அதிகாரிகளை கண்டிப்பதற்கு பதிலாக, அத்தகைய அதிகாரிகள் அரசு இயந்திரத்தின் அங்கம் என்று கருதும் அரசாங்கம், அத்தகைய அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீதே வழக்கு போட்டு அவர்களை எதிரிகளாக சித்தரித்து தண்டிக்கும் இரக்கமற்ற நடைமுறையைக் காட்டுகிறார் அழகிய பெரியவன்.
இந்த அரசுகளிடம் மனிதர்கள் மிகுந்த நம்பிக்கையுடன், குறைந்தபட்சமாக குடும்பத்தை நடத்துவதற்கும் ஜீவிப்பதற்கும் ஒரு வேளையை கேட்கின்றனர். அது கிடைக்காத போது, ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை அரசு அடித்து வீழ்த்தி அவமானப்படுத்துகிறபோதும், அவர்கள் அப்போதும் தங்கள் நிலையை கீழே இறக்கிக்கொள்ளாமல், கழிவிறக்கம் கொள்ளாமல் தங்களை, அரசுக்கு நிகரான கண்ணியமான நிலையில் நிறுத்தி, அரசிடம் நாங்கள் வேறொண்டும் கேட்கவில்லை, யாம் சில அரிசி வேண்டினோம் (பட்டினி இல்லாமல் 3 வேளை உணவை சம்பாதிப்பதற்கு ஒரு வேலை) அவ்வளவுதானே. அதற்காகவா இப்படி அவமானப்படுத்துவது என்று இந்த நாவல் உறத்துக் கேள்வி எழுப்புகிறது.
உண்மையில் அரசியலற்ற புனைவு ஒன்று இல்லை. எல்லா புனைவுகளும் அதனதன் அளவில் ஒரு அரசியலைக் கொண்டிருக்கின்றன. அழகிய பெரியவனின் தகப்பன் கொடி, வல்லிசை ஆகிய முந்தைய நாவல்களைப் போல இதுவும் அரசியலைப் பேசுகிறது. சம கால அரசியல், சமூக, பொருளாதார சூழலில் அரசின் அதிகார ஆணவப் போக்குக்கு பிரச்சார நெடி இன்றி, ஒரு புனைவாக மறைமுகமாக இந்த நாவல் எதிர்வினையாற்றுகிறது.
யாம் சில அரிசி வேண்டினோம் நாவல் வாசிப்பில் ஒரு தன் வரலாற்று நாவலைப் போன்ற ஒரு தன்மையை உணர முடிகிறது. அதே நேரத்தில், அதை உடைத்துக்கொண்டு இல்லை புனைவுதான் என்று பிரவாகம் கொள்ளவும் செய்கிறது. வழக்கறிஞர் முருகையன் நீதிமன்றத்தில் வாதிடும்போதும் சாட்சிகளை விசாரிக்கும்போதும் நாவல் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் போல விறுவிறுப்பானதாக மாறுகிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு அழகிய பெரியவன் வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அதிகாரியால் தாக்கப்பட்டார். அதற்கு எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து காலச்சுவடு இதழில் எழுத்தாளர்களின் ஒரு அறிக்கை வெளியானதாக நினைவு. அந்த நிகழ்வே ‘யாம் சில அரிசி வேண்டினோம்’ நாவலுக்கு உந்துதலாக இருந்திருக்க வேண்டும் என்பது துணிபு. வாசகனை பேரணாம்பட்டுவை பெரிய பேட்டையாகவும் கோட்டையூரை வேலூராகவும் (வேலூர் கோட்டை) உருவகித்துக்கொள்ளத் தூண்டுகிறது. இதனால், இந்த நாவல் தமிழ் வாசகனுக்கு மேலும் நெருக்கமாகிறது.
ஒரு எழுத்தாளன் தனக்கும் தனது குடும்பத்துக்குமான ரொட்டியைப் பெறுவதற்கு போராடிக்கொண்டே, ஒட்டுமொத்த மனிதகுலமும் பசியாறவும் சிந்திக்கிறான். ஆனால், இந்த அரசும் சமூகமும் எழுத்தாளனை எத்திவிட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவன் வாழ்வின் கரடுமுரடான பாதைகளில் அல்லாடியபடியே எளிய மனிதர்களின் குரலாக ஒலிக்கிறான்.
யாம் சில அரிசி வேண்டினோம் நாவல் சம கால அரசியலை நேரடியாக பேசாவிட்டாலும், வேலையின்மை, கேள்வி கேட்பவர்களை அவதூறு செய்து அவமானப்படுத்துகிற சமகால அரசியல் சூழலின் போக்குக்கு ஒரு புனைவாக எளிய மனிதர்களின் குரலாக இருந்து எதிர்வினையாற்றுவதை உணர முடிகிறது.
(யாம் சில அரிசி வேண்டினோம் நாவலை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நாவலின் விலை: ரூ.250, தொலைபேசி: 044 - 28481725)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.