Advertisment

தீவிர இலக்கியத்திற்காக தனி செயலி; எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் புது முயற்சி

தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், தீவிர இலக்கியத்திற்காக ஒரு தனி செயலியைத் தொடங்கியுள்ளார். இதில் இலக்கியம் இலக்கியம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. வேறு எந்த உள்ளடக்கத்திற்கும் இடமில்லை.

author-image
Balaji E
New Update
Writer Gouthama Siddarthan, Aalaa app, Tamil modern literature, கௌதம சித்தார்த்தன், ஆலா ஆப், ஆலா செயலி, தீவிர இலக்கியத்திற்காக தனி செயலி, ஆலா செயலி, ஆலா ஆப், இலக்கியத்துக்காக ஆலா ஆப், எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் புதிய முயற்சி, எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், Gouthama Siddarthan hosts Aalaa app, serious Tamil literature

கவிஞர்களின் வார்த்தைகளும் எழுத்தாளர்களின் ஒரு நல்ல கட்டுரைக்கான கச்சா வரிகளும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளாக இழிந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், இருந்து வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தீவிர இலக்கியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் ஒரு புதிய முயற்சியை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் முன்னெடுத்திருக்கிறார்.

Advertisment

தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், தீவிர இலக்கியத்திற்காக ‘ஆலா’ (Aalaa) என்ற ஒரு தனி செயலியைத் தொடங்கியுள்ளார். இதில் இலக்கியம், இலக்கியம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. வேறு எந்த உள்ளடக்கத்திற்கும் இடமில்லை.

கவிதை, கட்டுரை, சிறுகதை, சினிமா விமர்சனம் என்று தொடர்ந்து இயங்கி வரும் கௌதம சித்தார்த்தன், தான் நடத்திய உன்னதம் என்ற இலக்கியப் பத்திரிகையின் பல இளம் எழுத்தாளர்களையும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார். ‘தமிழி’ என்ற வலைதளம் மூலம் நல்ல இலக்கியப் படைப்புகளை இலக்கிய வாசகர்களுக்கு விருந்தாக அளித்து வந்துள்ளார். இன்று பலரும் அச்சுப் புத்தகங்களைவிட தங்கள் மொபைல் போன்களில் படிக்கத் தொடங்கியிருக்கும் காலத்தில் தீவிர இலக்கியத்திற்காக, தீவிர இலக்கிய மனநிலையை உருவாக்குவதற்காக கௌதம சித்தார்த்தன் உருவாக்கியுள்ள செயலிதான் ‘ஆலா’. இதில் தமிழ் எழுத்தாளர்கள் முதல் உலக எழுத்தாளர்கள் வரை பல தீவிர எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் தீவிர இலக்கியத்திற்காக தனி செயலி உருவாக்கி இருப்பது இதுவே முதல் செயலியாக உள்ளது. ‘ஆலா’ செயலி வாசகர்கள் எழுத்தாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ‘ஆலா’ செயலி குறித்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் உடன் பேசியதை இங்கே தருகிறோம்.

‘ஆலா’ செயலியைத் தொடங்குவதற்கான காரணம் என்ன?

கௌதம சித்தார்த்தன்: இனிமேல் எதிர்காலத்தில் வாசகர்கள் உள்பட எல்லோருமே அச்சுப் பிரதியை விட்டுவிட்டு ஆன்லைனில் விர்சுவல் உலகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் சொல்வது இளம் தலைமுறை வாசகர்கள் மட்டுமல்ல வயதானவர்களும் யாரும் அச்சுப் பிரதியைப் படிக்காமல் எல்லோரும் ஆன்லைனில் படிப்பதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் எல்லாமே இணையம் சார்ந்த விஷயங்களாகத்தான் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், இது ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும் சொல்லலாம். இதில் ஒரு துயரமும் இருக்கிறது. கவிதை மனம் சார்ந்தவர்களும் எழுத்தாளர்களும் வாசகர்கள் எல்லோரும் எங்கே நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றால், வீண் அரட்டை, வெட்டிப் பேச்சு, வெட்டி விவாதம் இந்த மாதிரியான விஷயங்களை மட்டுமே முன்னிலைப் படுத்தக்கூடிய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். இதனால், என்னவானது என்றால், அந்த மாதிரியான மனநிலையிலேயே எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வாசகர்களும் அந்த மாதிரியான மனநிலையிலேயே இருக்கிறார்கள். இதனால், நாம் ஒரு 50 வருடமாக இலக்கியத்தை கொஞ்சம் கொஞ்சாமாக ஒரு தீவிரத் தன்மை கொண்ட, ஒரு மாற்றுப்பார்வை கொண்ட பல்வேறு விதமான, ஒரு நல்ல இலக்கியத் தன்மையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றால், இன்றைக்கு இருக்கிற இந்த சமூக ஊடகங்கள் எல்லாத்தையுமே உடைத்து காலி செய்கிறது.

இலக்கியத்துக்காக நீங்கள் வலைதளம் தொடங்கினால் கூட யாரும் வந்து படிக்கமாட்டேங்கிறார்கள். எல்லோரும் தங்களுடைய மொபைல் போனில் என்ன வருகிறதோ அதை அப்படியே படித்துவிட்டு போகிறார்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்று படிக்கிறார்கள். அதனால், இந்த வாசகர்களை நாம் நேரடியாக சென்றடைய ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தேன். அந்த செயலி முழுக்க முழுக்க தீவிர இலக்கியத்துக்கான செயல்பாடு கொண்ட ஒரு செயலி. அதில் எந்தவிதமான பாப்புலர் தன்மையும் வரக்கூடாது. வீன் அரட்டை, வெட்டிப் பேச்சு, வீண் விவாதம், இதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு நல்ல ஒரு நல்ல இலக்கிய மனநிலையை உருவாக்க வேண்டும்.

1980களில் இருந்து 2000-2010 வரை தமிழ் இலக்கிய உலகம் ஒரு அற்புதமான தீவிரத் தன்மையுடன் போய்க்கொண்டிருந்தது. அந்த இலக்கிய மனநிலையை நாம் மறுபடியும் உருவாக்கி அதை நான் எதிர்கால இலக்கிய தலைமுறையிடம் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அதற்கு ஒரே வழி நீங்கள் இந்த மாதிரியான தன்மை கொண்ட ஒரு தீவிர இலக்கிய செயலியை உருவாக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். அவர்கள் இந்த செயலிக்குள் வந்து ஐந்து நிமிடம் அல்லது அரை மணி நேரம் பார்க்கும்போது, அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள் ஒரு இலக்கிய மனநிலை உருவாகிறது.

இதை அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது இந்த செயலிக்கு சென்று படிக்கலாம். இவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து விலகி, இந்த மாதிரியான இலக்கிய செயலிக்குள் நுழையும்போது அவர்களுக்கு ஒரு பழைய மாதிரி ஒரு இலக்கிய மனநிலை அவர்களுக்குள் உருவாகிறது. அப்படியான, ஒரு இலக்கிய மனநிலையை உருவாக்குவதற்காகத்தான் நான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறேன்.

செயலிக்கு ‘ஆலா’ என்று பெயர் வைத்திருக்கிறீகள். உண்மையில் ‘ஆலா’ என்றால் என்ன?

‘ஆலா’ என்பது ஒரு பறவை. இந்த பறவை என்ன பறவை என்றால், கிராமத்தில் சொல்வார்கள், ‘எதுக்கெடுத்தாலும் ஆலாப் பறக்காதடா’ என்று சொல்வார்கள். ஆலா பறக்கிறது என்றால், அந்த பறவை அதிகப்பட்சமான உயரங்களை நோக்கி போய்கொண்டிருக்கும். அதனுடைய இலக்கே சிகரங்களுக்கு அப்பால் பறந்து செல்வதுதான். அது மாதிரி, நம்முடைய தமிழ் இலக்கியத்தை சிகரங்களைத் தாண்டி தமிழ்ச் சூழலினுடைய பல்வேறு விதமான பரிமாணங்களைத் தாண்டி உலக அரங்கில் கொண்டு வந்து நிறுத்தும்படியான ஒரு இலக்கியத்தை உருவாக்குவது. அது மாதிரியான இளம் வாசகர்களை, எழுத்தாளர்களை உருவாக்குவது என்ற படிமத்தின் கீழ்தான் நான் இந்த ‘ஆலா’ என்ற பெயரை வைத்தேன்.

‘ஆலா’வுக்கு படைப்பாளிகள் எப்படி படைப்புகளை அனுப்புவது, எந்த மாதிரியான படைப்புகளை அனுப்பலாம்.

ஆலா முழுக்க முழுக்க ஒரு செயலி மட்டும்தான். நீங்கள் பிளே ஸ்டோருக்கு சென்று டவுன்லோட் செய்து அதன்மூலமாகத்தான் படிக்க முடியும். இது வலைதளம் கிடையாது. இதில் முழுக்க முழுக்க புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறேன்.

நிறைய கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். பதிவிட்ட என்ன ஆகிறது என்றால், ‘கம்மென்ட்’ செய்பவர்கள் அதனுடைய தீவிரத் தன்மையை அப்படியே குலைத்துவிடுகிறார்கள். அதை ஒரு கலாய்ப்பு மனநிலையாக மாற்றிவிடுகிறார்கள். நீங்கள் ஒரு அற்புதமான விஷயத்தை எழுதுகிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை அவர்கள் அப்படியே ஒரு பெரிய ‘காமெடி’யாக மாற்றுவார்கள். யாரோ ஒரு வாசகன் லைக், ‘கம்மென்ட்’ செய்வதற்காக வருகிறான் என்று எழுத்தாளர்களும் அந்த கலாய்ப்பு மனநிலைக்கு இறங்குகிறான். இப்படியே இறங்கி இறங்கி, அற்புதமான அந்த படைப்பு ஒரு மிகப்பெரிய ‘காமெடி’ படைப்பாக மாறுகிறது.

ஏனென்றால், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் ஒரு கலாய்க்கிற மனநிலையை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் நீங்கள் ஒரு மாற்றுப் பார்வையையோ, மாற்று சிந்தனையையோ உருவாக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல், ஃபேஸ்புக்கில் முழுக்க முழுக்க 24 மணி நேரமும் சாதியைப் பற்றியே பேசுகிறார்கள். எல்லோரும் தங்களுடைய சாதிகளை முன்னிறுத்தி தங்கள் சாதிதான் பெரியது பேசி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல கலை மனம் கொண்டவன், கலாப்பூர்வமான சிந்தனை கொண்டவன் ஃபேஸ்புக்கிற்குள் இருக்கவே முடியாது. ட்விட்டர் இன்னும் படுபோசமாக இருக்கிறது. இவையெல்லாம் மூன்றாம் உலக நாடுகளின் மீது வைக்கிற ஒரு அடக்குமுறை என்றுதான் சொல்ல முடியும்.

சமூக ஊடகங்கள் முழுக்க முழுக்க ஒரு ஏகாதிபத்திய சிந்தனை கொண்டது. மூன்றாம் உலக நாடுகள் மீது ஒரு காலனியவாத ஒடுக்குறையை வைத்துக்கொண்டுள்ளது. இங்கே ஆட்சி செய்கிறவர்களுக்கு அது ஒரு விஷயமே கிடையாது. ஏனென்றால், அவர்கள் சொல்கிற அதே சிந்தனைதான் இங்கே ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களிடமும் உள்ளது. நம்மை சிந்தனை ரீதியாக அடிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தலை முழுவதும் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக ஒரு மிகமிக ஒரு சின்ன எதிர்ப்பு குரல், ஒரு மாற்று இலக்கியக் குரல்தான் ‘ஆலா’.

‘ஆலா’ செயலி வாசகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது?

‘ஆலா’ செயலியை இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் தங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து படிக்கிறார்கள். ‘ஆலா’வுக்கு ஒரு சின்ன வெளியீட்டு விழா வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இதில் எல்லா குரல்களையும் நான் உள்ளே கொண்டு வருகிறேன். எந்த தடைகளும் கிடையாது. ஆனால், அது ஒரு இலக்கியமாக இருக்க வேண்டும்.

நாம் புதுமைப்பித்தனை மட்டுமே பேசாமல், மௌனி, கு.ப.ரா, கு.அழகிரிசாமி, ந.பிச்சைமூர்த்தி, பிரமிள் போன்ற நம்முடைய முன்னோர்களைக் கொண்டுவந்து இளம் தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது. அப்போதுதான், இலக்கியம் மேலும் மேலும் வளரும். கட்டுரைகளில் மிக மிக முக்கியான தமிழ் எழுத்தாளர்களையும் உலக எழுத்தாளர்களையும் கொண்டுவருகிறோம். அதனால், இலக்கியத்தை விரும்பும் எவரும் தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பிளே ஸ்டோரில் ‘ஆலா’ (Aalaa) செயலியை டவுன்லோட் செய்து படிக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment