நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கட்டுரை, கவிதை, சினிமா விமர்சனம், இலக்கிய விமர்சனம் என தீவிரமாக இயங்கி வருபவர் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். இவர் இதற்கு முன்பு உன்னதம் என்ற தீவிர இலக்கிய நடதியுள்ள நிலையில், தற்போது தமிழி என்ற பெயரில் நாளிதழ் வடிவிலான இலக்கிய இதழைத் தொடங்கியுள்ளார்.
தமிழ் இலக்கிய சிறுபத்திரிகை வரலாற்றில் நாளிதழ் வடிவில் இலக்கிய இதழ் வெளியாவது இதுவே முதல் முறையாகும். எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் தனது தமிழி இதழை பழங்குடியினர், விளிம்புநிலை மக்களை வெளியிடச் செய்து வருகிறார். இப்படி விளிம்புநிலை மக்களை இலக்கிய இதழை வெளியிடச் செய்வது தமிழ் இலக்கிய உலகில் முற்றிலும் ஒரு புதிய நிகழ்வாகும்.
எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனிடம் தமிழி இதழ் குறித்தும் இந்த இதழ் தொடங்கப்பட்டதற்கான நோக்கம் குறித்தும் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து பேசினோம்.
கௌதம சித்தார்த்தன்: “பத்திரிகை என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் மயமாகிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாம் எளிய விளிம்புநிலை மக்களின் குரலை எதிரொலிக்கிற மாதிரி ஒரு பத்திரிகை கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் உயர் சாதி மற்றும் ஆதிக்க சாதிகளின் கையில்தான் இருக்கிறது. அதனால்தான், இணையப் பத்திகையைவிட அச்சுப் பத்திரிகை கொண்டுவருவதுதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். இணைய செய்தி அடுத்த நொடியே காணாமல் போய்விடுகிறது. அதற்கு ஆவணத் தன்மையோ வரலாற்றுத் தன்மையோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இணைய பத்திரிகைகளில் ஒரு தார்மீக பத்திரிகை தர்மம் இல்லை. அதனால், விளிம்புநிலை மக்களின் குரலை ஒலிக்கும் வகையில் இந்த தமிழி பத்திரிகையைக் கொண்டுவந்திருக்கிறேன்.
கேள்வி: நாளிதழ் வடிவத்தில் வெளியாகி உள்ள தமிழி இதழ் இலக்கியப் பத்திரிகையா? இது எத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்?
கௌதம சித்தார்த்தன்: தமிழி இலக்கிய இதழ்தான். ஆனால், இங்கே பொதுவாக காலம்காலமாக பொதுவான ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட இலக்கிய பத்திரிகைகள் முன்வைக்கிற பார்வையில் இந்த இந்தப் பத்திரிகை இருக்காது. இங்கே பொதுவாக இலக்கியம் என்பது ஒரு மேட்டுக்குடி பார்வையில்தான் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கிற இலக்கியப் பார்வைகள் மேலை நாட்டினுடைய இலக்கிய வடிவங்களைத்தான் முன்வைக்கிறார்கள்.
இவர்கள் விளிம்புநிலை மக்களுடைய இலக்கிய வடிவங்களை பெருமளவில் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியே முன்னிலைப்படுத்தினாலும் ஒரு ஆதிக்க சாதியினரின் பார்வையில்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள்.
உதாரணமாக காலச்சுவடு பத்திரிகையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துகளை தலித் இலக்கியம் என்ற பெயரில் முன்னிலைப்படுத்தும்போது அது ஆதிக்க சாதியின் கண்ணோட்டமாகத்தான் வெளிப்படுகிறது. அவர் அருந்ததியர் சமூகத்தின் வாழ்க்கைப் பாடுகளை கூலமாதாரி என்றுதான் முன்வைப்பார். அந்த சமூகத்தினுடைய வாழ்வியலை கேலியாகவும் கிண்டலாகவும்தான் முன்வைப்பார். அது இலக்கியத்தில் அவல நகைச்சுவை (Black Comedy) என்கிற பெயரில் அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தையும் கூடவே சேர்த்து உருவாக்கி விடுவார்கள்.
அந்த சமூகத்தினுடைய போராட்டம் நிறைந்த உணர்வுகள் காயடிக்கப்பட்டு மேலோட்டமாக மட்டுமே அவை முன்வைக்கப்படும். அதனால்தான், இலக்கியம் என்ற பெயரில் இங்கே வந்துகொண்டிருக்கிற பெரும்பாலான இலக்கியப் பத்திரிகைகளை நான் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுகிறேன்.
மேலைநாட்டு இலக்கியப் பத்திரிகைகளை அறிமுகப்படுத்தும்போது வெறுமனே மார்குவெஸையும், ஓரான் பாமுக்கை மட்டுமே அறிமுகப்படுத்துவது சர்வதேச இலக்கியம் அல்ல. இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிற இலக்கிய வகையில் இருந்து மாறுபட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக இலக்கியமாக முன்வைக்கிறேன்.
22ம் நூற்றாண்டு இலக்கியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளுடன் இருக்கும். அதனால்தான் இதுபோன்ற விஷயங்களை முன்வைத்து தமிழி இதழை கொண்டுவந்திருக்கிறேன்.
கேள்வி: தமிழி இலக்கிய இதழை நாளிதழ் வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என எப்படி முடிவு செய்தீர்கள்?
கௌதம சித்தார்த்தன்: நாளிதழ் வடிவம் என்பது பொதுவாக எளிய மனித வாழ்வியலில் பெரும் அங்கம் வகிக்கிறது. அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக எளிதாக இருக்கிறது. இங்கே சிறுபத்திரிகை என்பது தமிழ் வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்டுப்போன ஒரு பார்வையை முன்வைத்து சொல்லிக்கொண்டிருந்தன. அதனால், அந்த ரீதியில் இல்லாமல் ஒரு சரியான இலக்கிய பார்வையை, தமிழ் வாழ்வியலை தமிழி முன்வைக்கிறது.
உதாரணமாக தமிழி இதழில் வெளியான பாசிமணியர் என்ற கட்டுரை மிக முக்கியமான கட்டுரை. வரலாற்று ஆவணம். இந்து போன்ற கட்டுரைகளும், படைப்புகளும், செய்திகளும் கலந்த ஒரு புதுவிதமான வடிவத்தில் தமிழி இதழைக் கொண்டுவர தீர்மானித்துள்ளேன். தமிழி இதழ் நிச்சயமாக கடந்த அரை நூற்றாண்டு நூற்றாண்டு இலக்கியப் பார்வையில் இருந்து மாறுபட்டு புத்தம் புதியதாக வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இருக்கும்.
கேள்வி: விளிம்புநிலை மக்களைவைத்து தமிழி இதழை வெளியிட்டு வருகிறீர்கள் இந்த யோசனை எப்படி வந்தது?
கௌதம சித்தார்த்தன்: தமிழில் காலம்காலமாக இலக்கியவாதிகளாகட்டும், பெரிய பத்திரிகையாளர்களாகட்டும் அவர்கள் எப்போதுமே தங்கள் நூல்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துகொண்ட சினிமாக்காரர்களை வைத்தும் அரசியல்வாதிகளையும் வைத்தும் வெளியிட்டு வருகிறார்கள். இத்தகைய செயல் இந்த சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை; இது ஒரு ஆதிக்கப்பார்வை.
இவர்கள் எளிய மக்களைப் பார்த்து நீங்கள் இதற்கு லாயக்கு அற்றவர்கள் இதை இன்னார்தான் வெளியிட வேண்டும் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆதிக்க படிமங்களைத்தான் உடைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அரசியல் நூல் ஒன்றை ஒரு பூம்பூம் மாட்டுக்காரர்தான் வெளியிட்டார். இவர்களோடுதான் என்னையும் என் படைப்புகளையும் என் வாழ்வியலையும் அடையாளம் காண்கிறேன். விளிம்புநிலை மக்கள், நாதியற்றவர்களாக உள்ள மக்களுடன்தான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதனால்தான், எளிய மனிதர்களைத் தேடிச்சென்று இந்த புத்தகத்தை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லும்போது இந்த வாழ்வியல் பெரும் அற்புதமாக மாறுகிறது. ஒரு மகத்தான காவியத்தின் நாயகர்களாக அந்த கணம் தொன்றுவதை அவர்கள் முகம் காட்டுகிறது.
தமிழி இதழை வெளியிடுவதற்கு ஒரு அருந்ததியர் பெண்மணியை சந்தித்து இந்த இதழை நீங்கள் வெளியிட வேண்டும் என்று சொன்னேன். அவரிடம் உங்களுடைய பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘என்னுடைய பெயர் குஞ்சால்’ என்று கூறினார். நான் அப்போது அவரிடம், உங்களுடைய பெயர் குஞ்சால் அல்ல, குஞ்சம்மாள் என்றுதான் சொல்ல வேண்டும் என்றேன். அப்போது அவருடைய முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் ஒரு கோடி சூரியனின் பிரகாசம் தெரிந்தது.
இது போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வியலில் மட்டுமல்லாது அவர்களுக்கு இந்த சமூகம் சூட்டியுள்ள பெயர்களிலும்கூட ஒரு ஆதிக்க அரசியல் இருக்கிறது.
கேள்வி: தமிழி இதழுக்கு எப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது?
கௌதம சித்தார்த்தன்: தமிழி இதழ் பொதுவாக ஒரு சிறிய பொருளாதார அடிப்படையை வைத்துதான் ஆரம்பித்திருக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு எதுவும் இல்லாமல் தொடங்கியிருக்கிறேன். முகமறிந்த, முகமறியாத பல நண்பர்கள் தமிழி வளர்ச்சிக்கு சிறு பங்கை உதவி செய்கிறோம் என்கிறார்கள். அவர்களிடம் இப்போதைக்கு வேண்டாம். ஒரு சரியான அடிப்படையை உருவாக்கிவிட்டு அதன் பிறகு உங்களிடம் வருகிறென் என்று சொல்லியிருக்கிறேன். மற்றபடி, தமிழி இதழ் பல்வேறு மக்களின், செயல்பாட்டாளர்களின் கவனத்திற்கும் போயுள்ளது. பா.கல்யாணி, சுப. உதயகுமாரன், வி.பி.குணசேகரன் போன்றோர் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் இருந்து ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டார்கள். இப்படி பல்வேறு விஷயங்களைச் சொல்லலாம்.
கேள்வி: தமிழி முதல் இதழ் எப்படி வந்திருக்கிறது? வரும் காலங்களில் தமிழி மாத இதழாகத்தான் வருமா அல்லது வேறும் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா?
கௌதம சித்தார்த்தன்: ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பார்வையை உடைத்து நிறப்பிரிகை இதழ் வந்தது. அதே போன்ற ஒரு பார்வையில், தமிழி தனது காலடியை பதித்திருக்கிறது.
தமிழி இதழ் இப்போதைக்கு மாத இதழாகத்தான் வெளிவருகிறது. ஜனவரிக்கு மேல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை என வெளிவரும். ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தமிழி வார இதழாக வெளிவரும். தமிழி இதழுக்கான அடிப்படை கட்டமைப்பு, பொருளாதார நிலை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு இப்படியான ஒரு தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.