ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் இலக்கிய மோசடியா? ஒரு சாட்சியின் வாக்குமூலம்

உண்மையில் மோசடியொன்றின் சாட்சியமாக இருப்பதென்பது ஒரு மோசமான அனுபவம். நாம் எமது மனச்சாட்சியினை எப்போதுமே மூட்டை கட்டி வைத்து விட முடியாது.

By: Updated: August 28, 2020, 09:01:36 AM

வாசன்

நான் என் வாசிப்பு அனுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பகிர்ந்து வருவதுண்டு. அவைகள் யாவும் எத்தனை பேரால் கவனங்கொள்ளப்படுகின்றது என்பது குறித்தெல்லாம் எனக்குப் பெரிதாக கவலை ஏதும் இல்லை. ஆயினும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் மட்டும் நான் எப்போதுமே அவதானமாக இருந்து வருகின்றேன். ஏற்கனவே ஈழவிடுதலைப் போரினாலும், அதன் உள்ளக முரண்பாடுகளினாலும், அதன் பகை முரண்பாடுகளினாலும் ஏற்படுகின்ற சர்ச்சைகளினாலும் அதன் குத்து வெட்டுக்களினாலும் ஏற்கனவே பல நட்புக்களினதும் உறவுகளினதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதே எனது மனநிலை. இந்த என்னுடைய அவதானத்தையும் மீறி ஒரு தடவை மட்டும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன். அது நான் சுமார் 5 வருடங்களுக்கு முன்பு சேனனின் ‘லண்டன்காரர்’ குறித்து ‘லண்டன்காரரும் BMM புரட்சியும்’ என்ற கட்டுரையினை எழுதியபோது ஏற்பட்டிருந்தது. அதில் ஒரு இடத்தில், “—ஆனால் இவர் (சேனன்) பல ஆண்டுகளுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு அகதியின் வாக்குமூலமாகஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான பரிச்சயம் உள்ள இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்றுஷோபாசக்தியின் மக்கள் விரோத அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம்.” என்ற வகையில் விவரித்திருந்தேன். இதனை நான் கசியவிடப்பட்ட தகவல்களின் மூலமாகவே அறிந்து கொண்டிருந்தாலும் அது குறித்து எந்தவிதமான ஆதாரங்களும் என்னிடம் இருக்கவில்லை. இந்த கட்டுரையானது வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் இருந்து வெளிவரும் ‘பதிவுகள்’ சஞ்சிகையில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இத்தகவல்கள் குறித்து பலரும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்திருந்ததை அக்கட்டுரைக்கு கிடைத்த எதிர்வினைகள் மூலமாக அறிந்துகொண்டேன். கனடாவில் இருந்து கவிஞர் கற்சுறா முகநூலில் என்னை தேடி வந்து நட்புடன் அளவளாவி இத்தகவல் உண்மையானதே என்று கூறி சேனனது படைப்புத்திறனை விதந்தோதிச் சென்றார். அதன் பிறகே சேனனுடனான நட்பும் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆயினும் இது எல்லோருக்கும் உவப்பானதாக அமைந்திருக்கவில்லை. பாரிசில் இருந்து கவிஞர் தர்மினி சீற்றத்துடன் எதிர்வினை ஆற்றியிருந்தார். அவர் ஷோபா சக்தியின் சகோதரி என்பதினை பின்னர் அறிந்து கொண்டேன். அத்துடன் சேனனுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். தர்மினி, இவ்விருவரின் நாவல்களிற்கும் எப்போதுமே முதல் வாசகி தான்தான் என்றும், இது ஒரு ஆதாரமற்ற தகவல் என்றும், முகமற்ற ஒரு மனிதனின் (என்னுடைய முகநூல் Profile இல் என்னுடைய படம் இருப்பதில்லை. எப்போதுமே ஆல்பெர் காம்யூ மட்டும்தான் வீற்றிருப்பார் ) பிதற்றல்களை நாம் கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்று அவர் எதிர்வினை ஆற்றியிருந்தார். உள்பெட்டியில் வந்த ஒருவர் ‘ஆதரமற்ற எழுத்துக்களை எழுதும் பட்சத்தில் அதற்குரிய பின் விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும்’ ஒரு மிரட்டல் பாணியில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இங்கு இலண்டனில் இயங்கும் இலக்கிய வட்ட நண்பர்களும் ‘தேவையல்லாத சச்சைகளில் ஏன் ஈடுபடுகிறாய்’ என்று நட்புடன் கடிந்து கொண்டனர். இது இயல்பிலேயே பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கும் என்னை வெகுவாகப் பாதித்திருந்தது. அதன் பின்பு நான் எந்த விதமான சர்ச்சைகளிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதியாகத் தீர்மானித்துக்கொண்டேன். பின்பு எனது வாசக அனுபவங்களை நான் பகிரும் போதெல்லாம் சர்ச்சைக்குரிய தகவல்களை, தவறுகளை கண்டு கொண்ட போதும், அவையெல்லாம் மனச் சாட்சிக்கு விரோதமாக இருந்திருந்த போதிலும் அவற்றினை எல்லாம் கண்டுகொள்ளாமல் இயலுமானவரை தவிர்த்தே எழுதி வந்தேன்.

ஆனால், விதி வலியது. அது என்னுடன் வேறு வடிவில் விளையாடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது என்னை மாபெரும் தவறொன்றின், மோசடியொன்றின் சாட்சியாக என்னை உருமாற்றியிருதது. உண்மையில் மோசடியொன்றின் சாட்சியமாக இருப்பதென்பது ஒரு மோசமான அனுபவம். நாம் எமது மனச்சாட்சியினை எப்போதுமே மூட்டை கட்டி வைத்து விட முடியாது. அது ஒரு சுமையாக எப்போதுமே துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். எனது இந்த சுமையினை இறக்கி வைக்கும் செயலாகவே இந்தக் கட்டுரை அமைகின்றது. எனவே நடந்த அந்த மோசடியினை அதன் சாட்சியங்களை இங்கு சம்பவங்களாக முன் வைக்கின்றேன்.

காட்சி 1

சுமார் 3 வருடங்களுக்கு முன்பு (எனது கணினியின் தரவின் படி 08.11.2016) சேனன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்து இருப்பதாகவும் அதன் ஆரம்ப அத்தியாயங்களை Pdf வடிவில் அனுப்பிவிடுவதாகவும், அதனை செம்மைப் படுத்தி தரும்படியும் கேட்டிருந்தார். ‘அல்லி’ என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த நாவல் ஆனது ஈழ விடுதலைப் போரினை பின்புலமாக கொண்டு அல்லி என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்நாவல் மீது எனக்கு கடுமையான அதிருப்தி. அந்நாவலின் பல சம்பவங்கள் நம்பகத்தன்மை குறைந்ததாகவும் காலாவதியாகிவிட்ட ஒரு வடிவம் போலவும் எனக்குத் தென்பட்டது. அத்துடன் அந்தப் பாத்திர வடிவமைப்புகள் மிகவும் குழப்பகரமாக இருந்தன. எனவே, அவரிடம் வேறு யார் யாருக்கெல்லாம் இந்த நாவலை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டேன். தோழர் பௌசருக்கும் கவிஞர் தர்மினிக்கும் அனுப்பியுள்ளதாகவும், பௌசர் இந்நாவல் குறித்து நல்ல அபிப்பிராயத்தினை தெரிவிக்கவில்லை எனவும் கூறினார். நானும் எனது கடுமையான அதிருப்தியினை தெரிவித்து பல வடிவங்களை சம்பவங்களை பாத்திரங்களை மாற்ற வேண்டியதின் முக்கியத்தினை தெரிவித்திருந்தேன்.

காட்சி 2

சில மாதங்களிற்கு பின்பு சேனன் அந்நாவலை மீண்டும் அதிகமான திருத்த வெளிப்பாடுகளுடன் அனுப்பியிருந்தார். கிட்டத்தட்ட முழுமையடைந்திருந்தது. ஈழப்போரின் பின்னணியில் வடிவத்திலும் நேர்த்தியிலும் குறைவு படாமலும், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் குழப்பகரமாவே எழுதப்பட்டிருந்தது. ‘அல்லி’ என்ற அந்த நாவலில் ‘அல்லி’ என்ற அந்தப் பெண்ணின் கதையும் சாதனா என்ற பெண்ணின் கதையும் பின்வருமாறு நகர்ந்து சென்றது.

• போர்க்காலப் பின்னணியில் பிறந்த அல்லி சிறுவயது அவளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அவள் பல்வேறு துன்பங்களையும் கொடுமைகளையும் அனுபவிக்கின்றாள்.

• பின் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயதப்பயிற்சி பெறுகிறாள். இறுதி யுத்தத்தில் மரணிக்கிறாள். இறுதி யுத்தத்தில் சாதனா என்ற ஒரு பாத்திரம் உள் நுழைகின்றது. அவள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்படுகின்றாள்.கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றாள்.

• கொழும்பில் வசிக்கும் ஒருவர் வந்து அவளை விடுவிக்கிறார். அவர் அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார்.

• பின் மேற்குலக நாடொன்றில் தஞ்சம் கோருகின்றாள். அங்கும் அவள் கணவனால் கடுமையாக கொடுமைப் படுத்தப்படுகின்றாள்.

கதை குறித்து எனது அபிப்பிராயத்தை சேனன் கேட்டார். எப்போதுமே யதார்த்தவாதப் படைப்புக்களையும், யதார்த்தவாதத்தின் தீவிர நிலையான இயல்புவாதப் படைபுக்களையுமே உன்னதமாகக் கருதி, பின் நவீனத்துவ அல்லது மாயா யதார்த்தவாதப் பாணியில் எழுதப்படும் கதைகளை இலக்கியப் பம்மாத்துக்கள் என்று ஏளனம் செய்யும் எனக்கு , இதில் சேனன் எமது தொன்மங்களையும், மரபார்ந்த கதைகளையும் இணைத்து மாயா யதார்த்தவாதப் பின்னணியில் சில அத்தியாயங்களை நகர்த்தியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. நான் அது குறித்துக் கேட்டு, இது இந்நாவலிற்கு அவசியமா என்று கேட்டேன். அதற்கு அவர் இப்போது மேலைத்தேய நாவல்கள் அனைத்தும் இப்படியான வகையில்தான் எழுதப்படுவதாக பதில் அளித்தார். அதன் பின் நான் அந்த நாவலினை தொடர்ந்தும் எழுதும்படி ஊக்கப்படுத்தினேன். ஆனால், பௌசரும் மற்றவர்களும் இன்னும் இந்நாவல் குறித்து அதிருப்தியே கொண்டிருப்பதாகச் சொன்னார். யார் அந்த மற்றவர்கள் என்று நான் கேட்கவில்லை. அதில் ஒருவர் கவிஞர் தர்மினி என்பது மட்டும் எனக்குத் தெரியும். பின்பு அவரைச் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் நாவல் எழுதி முடித்தாயிற்றா என்று கேட்டு வைப்பேன். அவரும் இல்லை என்ற பதிலினையே எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார். ‘லண்டன்காரர் என்ற சுமார் 100 பக்க நாவலையே எழுதி முடிக்க 4 வருடம் பிடித்த ஒரு மனிதனின் இலக்கியச் சோம்பல் தனமும் அசிரத்தையும் பற்றிய புரிதல்கள் என்னிடம் இருந்தது. மேலும், அவர் பிரித்தானிய அரசின் மைய அரசியலிலும், ‘தமிழ் சொலிடாறிற்றி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கி வருவதினால் அவர் அமைப்பு ரீதியான பணிகளில் அதிக கவனம் செலுத்துவதையும் நான் உணர்ந்து கொண்டேன். ஆனபடியினால் நான் பின்னர் அது குறித்து கேட்பதினை தவிர்த்து வந்தேன். திடீரென ஒருநாள் தனது முகநூலில் தான் நாவல் எழுதுவதைக் கைவிட்டு விட்டதாகவும் இனி தான் தனது எழுத்து வேலைகளை தொடரப்போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். பின்பு 6,7, மாதங்களுக்கு பின்பு தனது நாவல் எழுதி முடிந்துவிட்டதாகவும் விரைவில் புத்தகமாக வெளிவர இருப்பதாகவும் சொன்னார். அவரது அசிரத்தை, சோம்பல்தனம் குறித்து அதிருப்தி கொண்டிருந்த நான் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

காட்சி 4

காலம்: 23 நவம்பர் 2019 (சனிக் கிழமை) இடம்: Trinty Centre, East Ham, London.

விம்பம் அமைப்பினரால் ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் அறிமுக விழா ஒன்று நடைபெற இருந்தது. அவரது எழுத்தின் வலிமையும், அதன் அங்கதச் சுவையும், என்றுமே என்னை ஆகர்ஷித்து நிற்பவை. அதே நேரம் கொள்கை ரீதியாகவும் அவரது சில தனிப்பட்ட தகிடுதித்தங்கள் காரணமாகவும் அவர் மீது ஒரு கசப்புணர்வு என்னிடம் இருந்தது. ஆயினும் என் வாழ்வின் ஒரு தருணத்தில் என் வாழ்வை மீட்டுத் தந்த எனது நண்பன் உருத்திரன் (தோழர் ராஜேஷ்) அவரது நண்பன் என்று உருத்திரனிட்கு அவர் எழுதிய அஞ்சலிக் குறிப்புக்கள் வாயிலாக அறிந்த பின்பு, எனக்கு அவர் மீதான ஒரு மதிப்பு எப்போதுமே இருந்தது. எனவே அங்கு அந்த விழாவிற்கு நேரத்துடனேயே சென்றேன். அங்கு ஷோபா, பௌசருடன் உரையாடிக் கொண்டிருந்தார். நானும் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். பேராசிரியர் நித்தியானந்தன் அறிமுக உரையை நிகழ்த்தினார். அனோஜன் பாலகிருஷ்ணனும் சிவா கிருஷ்ணமூர்த்தி, ரா.கிரிதரன் போன்ற தமிழக இலக்கிய நண்பர்களும் அநேகம் பேர் வந்திருந்தார்கள். அன்று இரவு குடும்ப வைபவம் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருந்ததால் ‘இச்சா’ நூலை மட்டும் வாங்கி விட்டு, விழா முடிவடைவதற்கு முன்னரேயே வீடு திரும்பி விட்டேன்.

காட்சி 5

அடுத்த நாள் நான் ‘இச்சா’ நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். ஷோபா சக்தியின் வசீகரமான எழுத்துக்கள் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. நான் எனது வாழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்து முடித்திருந்த போதும் ஒரே நாளில் வாசித்து முடித்த நாவல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் ஷோபாவின் ‘கொரில்லா’ ‘ம்’ என்ற இரு நாவல்களும் கூட அடங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை. வேலையும் இல்லை. எனவே இன்றே படித்து முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் வீட்டில் ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தி விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயங்களிலேயே அவரது வசீகரம் மிளிர ஆரம்பித்தது. கிழக்கிலங்கையை பின்புலமாகக் கொண்ட ஆலா என்ற சிறுமியின் சிறுபிராய வாழ்க்கையுடன் கதை சுவாரஷ்யமாகவே ஆரம்பமாகியது.

ஆலாவின் சிறுவயது வாழ்க்கை அவளுக்கு உவப்பானதாக இல்லை. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறாள். விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராளியாக மாறுகிறாள். இராணுவத்தினரால் கைது செய்யப்படுகின்றாள். பலத்த சித்திரவைகளுக்கு உள்ளாகிறாள். பின்பு வெளிநாட்டில் இருந்து வரும் ஒருவரால் மீட்கப்படுகின்றாள். நாவலினை வாசிக்கும்போதே, இதனை ஏற்கனவே எங்கேயோ படித்தது போன்றதொரு உள்ளுணர்வு ஏற்படுகின்றது. ஆயினும் சட்டை செய்யாமல் தொடர்ந்தும் படிக்கின்றேன். பின்பு, ஆலா மேற்கத்தேய நாடொன்றிற்கு வருகின்றாள். அங்கும் அவளது வாழ்க்கை இன்பமயமானதாக இல்லை. அங்கும் அவள் அவளது கணவனால் கடுமையாக துன்புறுத்தப்படுகின்றாள். மீண்டும் எனக்குள் ஓர் அருட்டுணர்வு. இந்நாவலை எங்கோ படித்துள்ளேன். இப்போது எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே புரிந்து விட்டது. இதுதான் சேனனின் நாவல். நாவலை முடிக்கு முன்னரே எனது கணினியில் உள்ள சேனனின் நாவலையும் தட்டிப் பார்க்கிறேன். தொடர்ந்து, இதன் மூலக் கதை ஒன்றுதான். ஆனால், எனக்குள் அப்போது எந்தவித சந்தேகமும் எழவில்லை. ஒரே பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த, பிரான்சில் ஒரே காலப்பகுதியில் வாழ்ந்து, பலவிதமான இலக்கியப் பணிகளை ஒன்றாக மேற்கொண்ட இரு படைப்பாளிகள் ஒரே அகத் தூண்டலினால் ஒரே அலைவரிசையில் சிந்துத்துள்ளார்கள் என்று மட்டும் எண்ணிக் கொண்டேன். இது பற்றி நான் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.

காட்சி 6

காலம்: 26 ஜனவரி 2020, ஞாயிறு, பிற்பகல் 3 மணி இடம்: தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், ஈஸ்ட் ஹாம். நிகழ்வு: கலாமோகனின் ‘நிஷ்டை’ நூல் குறித்த உரையாடல்

அன்று நடந்த கலாமோகனின் நூல் குறித்த கலந்துரையாடலுக்கு பௌசர் என்னையும் கட்டாயம் வருமாறு அழைத்திருந்தார். உரைகள் ஹரி ராஜலட்சுமி, மாஜிதா, அனோஜன் பாலகிருஷ்ணன் மூவரினினாலும் நிகழ்த்தப்பட இருந்தன. நானும் நேரத்துடனேயே போயிருந்தேன். அங்கு சேனனும் வந்திருந்தார். நான் சேனனிடம் “நீங்கள் எல்லாம் இலக்கியச் சோம்பேறிகள். வேலைக்குதவாத ஆக்கள். ஒரு நாவல் எழுதுவதற்கு இத்தனை வருடம். பார், அவன் உன் நாவலையே கொப்பியடித்து இத்தனை விரைவாகக் கொண்டுவந்து விட்டான்.” என்று பகிடியாச் சொல்லி வைத்தேன். அவர் நான் சொல்வது குறித்து புரியாமல் நின்றது மட்டும் எனக்குப் புரிந்தது. நிகழ்வின் முடிவில் அவர் வந்து என்னைச் சந்தித்தார். ‘என்ன நடந்தது’ என்று கேட்டார். அப்போதுதான் புரிந்தது, அவர் இன்னும் ‘இச்சா’ படிக்கவில்லை எனபது. நான் இரண்டு நாவல்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை பற்றிச் சொன்னேன். அவர் கொஞ்சம் அதிர்ந்து போய் நிற்பது தெரிந்தது. அப்போது நான் கேட்டேன், ‘உங்கள் நாவலை ஷோபா படிப்பதற்குரிய சந்தர்ப்பம் ஏதாவது இருந்ததா?’ என்று. ‘தர்மினிக்கு அனுப்பியதை அவன் படித்திருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு’ என்று சொல்லி விட்டு மிகவும் மனம் குழம்பிய நிலையில் எதுவும் பேசாமல் போய் விட்டார்.

காட்சி 7

இது நடந்து 4,5, நாட்களுக்குப்பின் இரவு 11 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தேன், மறுபக்கத்தில் சேனன் பதட்டத்துடனும் ஆத்திரத்துடனும் கதைத்தார். ‘இச்சா’ படித்துள்ளதாகவும் இது ஒரு அப்பட்டமான மோசடி என்றும் புலம்பினார். நீங்கள் 4,5 பேர் இதற்கு கண் கண்ட சாட்சி. நீங்கள் மௌனமாக இருக்கக் கூடாது என்றார். ‘நீங்கள் தர்மினியிடம் பேசினீர்களா? அவர்தான் இன்னும் நம்பகமான சாட்சி’’ என்றேன். இல்லை என்றார். இப்படி ஒரு மோசடியினையும் துரோகத்தினையும் புரிந்த ஒருவருடன் நான் எப்படிக் கதைக்க முடியும் என்றார். இந்த ஏமாற்றத்தினையும் மோசடியையும் அனுபவித்தவர்களினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று சொன்னார். அவரது உள்ளக் குமுறல்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

காட்சி 8

காலம்: 30 ஜனவரி 2020 (வியாழன்) இடம்: : தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், ஈஸ்ட்ஹாம்

வருகின்ற ஞயிறு நடைபெற இருக்கின்ற தனது ‘சொற்களில் சுழலும் உலகம்’ நூலினை அறிமுகம் செய்து வைப்பதற்காக காலம் செல்வம் லண்டன் வந்திருந்தார். அதற்கு 2, 3 நாட்களுக்கு முன்னரே அவருடன் உரையாடல் ஒன்றினை மேற்கொல்வதற்காக நாம் 6, 7, பேர் மீண்டும் தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தில் கூடி இருந்தோம். காலம் செல்வத்துடன் பௌசர், கே.கிருஷ்ணராஜா, அனோஜன் பாலகிருஷ்ணன், பேராசிரியர் நித்தியானந்தன் அனைவருமாக கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அனோஜன் பாலகிருஷ்ணன் இந்த பிரச்சினையை பேச ஆரம்பித்தார். ‘கொரில்லா’ இல் தொடங்கிய திருட்டு எப்படி ‘இச்சா’ வரை தொடர்கின்றது என்பதினை விவரித்தார். அனைவருமே திகைத்துப் போயிருந்தனர். ஆனால் எதுவும் பேசவில்லை. நான் அது உண்மை என்றும் அதற்கான முக்கிய சாட்சிகள் நானும் பௌசரும் என்றேன். பௌசரும் ஒப்புக் கொண்டார். செல்வம் மட்டும் நீண்ட நேரமாக தலையைக் குனிந்து கொண்டிருந்தார். இறுதியில் ‘இத்தனை நாவல்கள், இத்தனை அற்புதமான சிறுகதைகள் எழுதிய ஒருவன், இப்படிச் செய்வானா? என்னால் நம்பமுடியவில்லை’ என்று தனது மௌனத்தைக் கலைத்தார். உண்மையில் யாரால்தான் இந்த உண்மையை நம்ப முடியும்?
அன்று முழுவதும் நாங்கள் இந்த மோசடியைப் பற்றியே கதைத்தோம். இந்த இரு நாவல்கள் குறித்தும், அதன் ஒற்றுமை வேற்றுமை குறித்தும் ஆராய்ந்தோம். ‘அல்லி – ஆலா’ – நாவல்களின் முதன்மைப் பாத்திரங்களின் பெயர்களே ஒற்றுமையாக இருக்கின்றது. அத்துடன் மேலே நான் காட்சி 2 இலும் காட்சி 5 இலும் விவரித்தபடியே சம்பவங்களும் 8௦ வீதம் ஒன்றிணைகின்றன. ஆனால் ஷோபா தான் நோயல் நடேசனின் ‘மலேஷியன் எயார்லைன்ஸ் 370’ இல் இருந்து தூண்டுதல் பெற்று இந்நாவலை எழுதியதாக ஒப்புக் கொள்கிறாரே என்ற கேள்வியும் அங்கு முன் வைக்கப்பட்டது. ஆனால், இது ஷோபா சக்தி தனது பெரிய திருட்டினை மறைப்பதற்காக வேண்டுமென்றே ஜோடித்த ஒரு சிறிய திருட்டு என்று எல்லோராலும் ஊகிக்க முடிந்தது.

எல்லோரும் போன பின்பு பௌசருடன் வெளியே பேசிக் கொண்டிருந்தேன். அவர் சிகரெட்டினை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார். ‘நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? இது குறித்து எழுதப் போறீர்களா ? ‘ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இது ஒரு அப்பட்டமான மோசடி என்று எனக்குத் தெரியும். இதனை இப்போது நான் எழுதினால் என்னை எல்லோரும், இந்தப் புகலிட இலக்கிய உலகின் கோமாளியாக்கி விடுவார்கள்.’ என்ற பதிலினை மட்டும் சொல்லி வைத்தார். கலை, இலக்கிய தளங்களில் மட்டுமல்லாமல் சமூக, அரசியல் தளங்களிலும் பல்வேறு விதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் அவர், இச்சர்ச்சையில் ஈடுபட்டு தனது செயற்பாடுகளுக்கு பங்கம் வர விரும்பவில்லை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
இவையெல்லாம் நடந்து முடிந்து இன்று வரை சேனனை பல நிகழ்வுகளிலும் சந்தித்து வருகின்றேன். ஆனால், இப்போதெல்லாம் அவர் என்னுடன் பெரிதாக முகம் கொடுத்து பேசுவதில்லை. வெறும் ‘ஹலோ’ மட்டும்தான். ஒரு தடவை மட்டும் ‘தர்மினியிடம் பேசினீர்களா?’ என்று கேட்டேன். இல்லை என்றும் ஆனாலும் தர்மினி தனக்குத் தெரிந்த பலரிடமும் ‘பல படைப்பாளிகள் ஒரே விதமான அகத் தூண்டுதலில் ஒரே விடயத்தை எழுதுவது இலக்கிய உலகில் சகஜம்’ என சால்ஜாப்பு செய்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் என்னிடம் அதிகம் பேச விரும்பவில்லை என்பது தெரிந்ததும் நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து விலகிக் கொண்டேன். அவரது உள்ளக் குமுறல்கள் எனக்குப் புரிந்தது. எங்கள் எல்லோரையும் அவர் ஒரு கையாலாகாத மனிதர்களாகக் கருதி இருக்கவும் கூடும்.

முடிவுரை

கடந்த 2 நாட்களாக கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வெளி உலக கொரானா வைரஸ் பீதிகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் சிரமப்பட்டு இதனை எழுதி முடித்துள்ளேன். சில வேளைகளில் என்னால் நம்பவும் முடியவில்லை. கடந்த சில நாட்களாக விமலாதித்த மாமல்லன் தொகுத்த ‘புனைவு எனும் புதிர்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக மீண்டும் ஷோபாவின் ‘வெள்ளிகிழமை’ கதையினை வாசிக்கின்றேன். ஒரு அற்புதமான கதை. என்னளவில் தமிழின் மிகச்சிறந்த 10௦ சிறுகதைகளில் இதனையும் ஒன்றாக உள்ளடக்கலாம். இத்தகைய உன்னதமான எழுத்துக்குச் சொந்தக்காரன் இத்தகைய இலக்கிய மோசடியில் ஈடுபடுவானா? ஆனால், இது நடந்துள்ளது. ஆனால் ஈழ-புகலிட இலக்கிய உலகில் இது ஒன்றும் புதிதில்லை. ஈழத்து இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமையான எஸ்.பொ ஒரு தடவை திமிலைத் துமிலனின் கதையொன்றினை அப்படியே ஈயடிச்சான் கொப்பியாக கொப்பி அடித்ததாக எமது ஈழ இலக்கித் தகவல்கள் கூறுகின்றன. ‘தண்ணீர்’ என்ற கதைக்காக கே.டானியலும், டொமினிக் ஜீவாவும் போட்ட குழாயடிச் சண்டைகளும் எமது இலக்கிய வரலாற்றில் தடம் பதிந்தவை. இப்படியான சர்ச்சைகளும் மோதல்களும் எமக்கொன்றும் புதிதானவைகளும் அல்ல. சில வேளைகளில் இத்தகைய சர்ச்சைகள்தான் எமது ஈழ-புகலிட இலக்கிய மரபினை உயிர்ப்பாகவும், சுவாரஷ்யமாகவும் வைத்திருக்க உதவுகின்றன போலும்.

(வாசன், ஈழ இலக்கியத்தளத்தில் விமர்சகராக அறியப்படுகிறார்.)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Writer shoba sakthi ichcha novel controversy writer senan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X