Advertisment

பெண் விடுதலைப் புலிகளை நான் கொச்சைப் படுத்தினேனா? ஷோபா சக்தி

'அந்த நாவலை, நான் பாலச்சந்திரனுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன். இனவெறுப்பும் இனப்பகைமையும் அற்ற உலகத்தைக் குழந்தைகளது உலகில் மட்டுமே என்னால் சித்திரிக்க முடிந்தது.': ஷோபா சக்தி

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
எழுத்தாளர் ஷோபா சக்தி (Photo credit: இளவரசன் தேவராஜன்)

எழுத்தாளர் ஷோபா சக்தி (Photo credit: இளவரசன் தேவராஜன்)

இச்சா, box, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபா சக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது.  

Advertisment

இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது?

இலங்கையின் வடதிசையில் 'பாக்' நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான 'லைடன்' தீவில் அமைந்துள்ள  'அல்லைப்பிட்டி'  கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் எரிக்கப்பட்டுவிட்டது. வீடிருந்த காணியோ காடு பற்றிக் கிடக்கிறது. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் துணைப்படைகளாலும் மூன்று கூட்டுப் படுகொலைகள் எனது கிராமத்தில் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிக் கிராமவாசிகள் கொல்லப்பட்டார்கள். கிராமத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்த சனங்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் ஊருக்குத் திரும்பவேயில்லை. கிராமத்தைச் சுற்றி இராணுவமும் கடற்படையும் நிலைகொண்டுள்ளன. மக்கள் இருந்தால்தானே அது ஊர். இப்போது அதுவொரு மிகப் பெரிய இடுகாடு.

உங்களது குழந்தைப் பருவம் குறித்து எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

என்னுடைய குழந்தைப் பருவம் அப்படியொன்றும் இனிய நினைவுகளைக் கொண்டதல்ல. பசியும் பட்டினியும் ஊரில் பொதுவாகப் பரவியிருந்த காலமது. சுட்ட பனம் பழத்தையும், அரசாங்கம் இலவசமாக வழங்கும் அரிசியையும், 'திரிபோசா' சத்து மாவையும் நம்பியே ஊரில் பல குடும்பங்கள் இருந்தன. கல்வியறிவு குறித்துக் கிராம மக்களிடையே விழிப்புணர்வில்லாத நாட்கள். ஆண் குழந்தைகளுக்குப் பத்து வயது வந்தாலே, கடைப் பையன்களாக சிங்கள நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிடுவார்கள். நானும் இத்தகைய குடும்பப் பின்னணியில் வந்தவன்தான். படிப்பில் நான் கெட்டிக்காரனாக இருந்ததால் என்னை வேலைக்கு அனுப்பாமல், தொடர்ந்தும் படிக்க அனுமதித்தார்கள்.

ஆனாலும், நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருந்த இனப் பிரச்சினை படிப்பிலே முழுமையாகக் கவனத்தைச் செலுத்த என்னை அனுமதிக்கவில்லை. மிகச் சிறிய வயதிலேயே தமிழ்த் தேசிய அரசியலால் ஈர்க்கப்பட்டுவிட்டேன். தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இன்பமும் அவரது மைத்துனர் செல்வமும் காவல்துறையால் கொடூரமாகக் கொல்லப்பட்டு, என்னுடைய கிராமத்தின் வாயிலிலே அவர்களது சிதைந்த உடல்கள் வீசப்பட்ட போது எனக்குப் பத்து வயது. யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது எனக்குப் பதின்மூன்று வயது. ஓர் இலட்சம் நூல்களிலிருந்தும் ஓலைச் சுவடிகளிலிருந்தும் எழுந்த தீயை எனது கிராமத்துக் கடற்கரையில் நின்று நான் பார்த்திருக்கிறேன். நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போதுதான், 1983-இல் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்செயல்களை இலங்கை அரசும், சிங்கள இனவெறியர்களும் நிகழ்த்தினார்கள். இந்தத் தொடர் போக்குகளின் விளைவாகவே, நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தேடிச் சென்று அவர்களோடு இணைந்துகொண்டேன்.

அப்போது பல போராளி இயக்கங்கள் இருந்தபோதும், ஏன் விடுதலை புலிகள் இயக்கத்தைத் தேர்வு செய்தீர்கள்?

எல்லாப் போராளி அமைப்புகளுமே வர்க்க ஒடுக்குமுறையற்ற, சாதியற்ற, சமதர்ம சோசலிஸத் தனித் தமிழீழம் என்ற பிரகடனத்தையே அப்போது முன்வைத்தார்கள். அதை அடையும் வழியாக ஆயுதப் போராட்ட வழிமுறையை முன்னிறுத்தினார்கள். ஆயுதச் செயற்பாடுகளிலும், அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களிலும் புலிகள் இயக்கமே மற்றைய இயக்கங்களைக் காட்டிலும் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்களை விட, உறுப்பினர்களின் எண்ணிக்கையளவில் புலிகள் சிறிய இயக்கமாக இருந்தால் கூட, ஒரு கெரில்லா அமைப்புக்குரிய எல்லாவிதக் கட்டமைப்புகளையும் புலிகள் அப்போதே உருவாக்கியிருந்தார்கள். 'சோசலிஸ தமிழீழத்தை நோக்கி', 'சோசலிஸ சித்தாந்தமும் கெரில்லா யுத்தமும்' என இரண்டு நூல்களைக்கூட புலிகள் வெளியிட்டிருந்தார்கள். இவைதான் என்னைப் புலிகள் அமைப்பில் இணையச் செய்தன.

தேடிச்சென்று சேர்ந்த புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கள் வெளியேறக் காரணம் என்ன?

நான் ஏதோ உணர்ச்சி வேகத்தில் சென்று புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவன் அல்ல. கிடைத்த நூல்களையெல்லாம் வாசிக்கும் பழக்கமிருந்ததாலும், வயதில் பெரியவர்கள் பேசுவதை வாய் பார்க்கும் வழக்கமிருந்ததாலும் சோசலிஸம், தமிழ்த் தேசியம், வியட்நாம் போன்ற நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள்  குறித்தெல்லாம் சாடைமாடையாக அறிந்து வைத்திருந்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சோஸலிச முன்னோக்குடைய விடுதலை இயக்கம் என்ற நம்பிக்கையோடுதான் நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். என்னிடம் மிகத் தீவிரமான தமிழ்த் தேசியப் பற்று இருந்தாலும், அந்தத் தமிழ்த் தேசிய அரசியல் ஒருபோதும் தீவிலிருக்கும் பிற இன மக்களைப் பகைமையாகக் கருதக்கூடாது, இலங்கை இனவாத அரசும் அதன் ஏவல் படைகளுமே நம்முடைய எதிரிகள் என்பதுவே என்னுடைய எண்ணமாகயிருந்தது. அதேநேரத்தில் நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் உள்ளுறைந்திருக்கும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற தீமைகளுக்கு எதிராகப் போராடி அவற்றைத் தகர்ப்பதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செயற்பாடே என்றுதான் கருதினேன். இயக்கமும் அப்படித்தான் சொல்லியது. அதுதான் தன்னுடைய கொள்கை என்றது.

ஆனால், இயக்கத்தின் உண்மையான நடைமுறை அதுவல்ல என்பது எனக்குத் தீர்க்கமாகப் புரியத் தொடங்கியபோதுதான், என்னுடைய இயக்க விசுவாசத்தில் கீறல் விழத் தொடங்கியது. அப்பாவிச் சிங்கள மக்களைப் புலிகள்  இயக்கம் கொலை செய்தது, தமிழ் மக்களுக்குள்ளிருந்து எழுந்த சனநாயகத்தைக் கோரிய விமர்சனக் குரல்களை இயக்கம் அழித்தொழித்தது, விளிம்புநிலை மக்களைத் திருடர்கள், விபச்சாரிகள் எனக் குற்றம்சாட்டி மின்கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்றது. புலிகளின் இதுபோன்ற  கொடுஞ்செயல்களால் என்னுடைய அதிருப்தி வளர்ந்துகொண்டே சென்றது. சகோதரப் போராளி இயக்கங்களைப் புலிகள் தாக்கி அழித்தபோது, அந்த அதிருப்தி உச்சத்திற்குச் சென்றது. நான் இருந்த புலிகளின் அணியொன்றைத் தலைமை தாங்கிய பொறுப்பாளர்களினது அடாவடியும், எதேச்சாதிகார நடவடிக்கைகளும் இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை எனக்கு உடனடியாக ஏற்படுத்தின.  அடிமட்டப் போராளியான என்னுடைய எதிர்ப்பையோ, கருத்தையோ தெரிவிப்பதற்கான எந்தச் சனநாயக வெளியோ, வாய்ப்போ இயக்கத்திற்குள் கிடையாது. சனநாயகப் பண்பே இல்லாமல், தலைமை வழிப்பாட்டுடன் மேலிருந்து கீழாகக் கட்டப்பட்டிருந்த புலிகள் இயக்கம் மற்றைய போராளி இயக்கங்களையும், சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளையும், பிற அரசியல் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் தடை செய்ததன் மூலமாகத் தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றை இயக்கமாக, இறுக்கமான அதிகார மையமாக மாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் நான் இயக்கத்திலிருந்து வெளியேறினேன்.

எந்தச் சூழ்நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறினீர்கள்?

நான் இயக்கத்திலிருந்து வெளியேறி, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமலேயே இருந்தேன். எனக்கு இயக்கத்தின் நடைமுறைகளில் பிரச்சினை இருந்ததே தவிர, சிறுவயது முதல் என்னிடமிருந்த தமிழீழக் கனவை என்னால் கைவிட முடியவில்லை. ஆனால், ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான தொடர்புகளோ, அரசியல் தெளிவோ என்னிடமிருக்கவில்லை. எனினும், எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற உறுதியோடிருந்தேன். செயலூக்கமுள்ள புலிகள் இயக்கத்தின் தவறான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தமிழீழக் கனவுக்கும் இடையே என்னுடைய மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலே, நான் 'புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்' என்ற ட்ராட்ஸ்கிய அமைப்பை அய்ரோப்பாவில் சந்தித்து அவர்களோடு இணையும்வரை இந்த ஊசலாட்டம் எனக்குள் இருந்துகொண்டேயிருந்தது.

நான் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஆறு மாதங்களில், இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையே போர் தொடங்கியது. போர் உக்கிரமான போது, என்னை மறுபடியும் இயக்கத்தில் இணையுமாறு என்னுடைய முன்னாள் சகாக்கள் கேட்டார்கள். யாழ்ப்பாணக் கோட்டைக்கு மிக அருகிலிருப்பதால் என்னுடைய கிராமமும் கடலும் இராணுவரீதியாக முக்கியமான பகுதிகள்.  கோட்டை இராணுவ முகாமிலிருந்து தீவுப்பகுதிக்குள் இராணுவம் நுழைவதைத் தடுப்பதற்காக  பண்ணைப் பாலத்தின் முனையில், என்னுடைய கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் காவலரண் என்னுடைய பொறுப்பில்தான் நீண்டகாலமாக இருந்தது. எனவே என்னுடைய அனுபவ அறிவும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. நான் உறுதியாக மறுத்துவிட்டேன். இந்தியாவுடன் மோதுவது நமக்கு மிகப் பெரும் அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றியது. இது ஏதோ என்னுடைய அரசியல் தீர்க்கதரிசனத்தால் தோன்றியதல்ல. ஒரு எளிய கிராமத்து மனிதரிடம் அப்போது இதைக் கேட்டிருந்தால் கூட அவரும் இதையேதான் சொல்லியிருப்பார்.

அமைதிப் படையினருடனான போர் மிகப் பெரும் அழிவுகளை எங்களுக்குக் கொண்டுவந்தது. அந்த யுத்தத்தில்தான் முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதித் தோல்விக்கான முதல் ஆணி அறையப்பட்டது.'ஸலாம் அலைக்' நாவலில் அந்த இருண்ட காலங்களைக் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். இந்திய அமைதிப் படையினர் காட்டுமிராண்டித்தனத்தை எங்களது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டார்கள். எண்ணற்ற கொலைகளும், கொள்ளைகளும், பாலியல் வல்லாங்குகளும் அமைதிப் படையினரால் நிகழ்த்தப்பட்டன. சந்தேகப்பட்ட இளைஞர்களையெல்லாம் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். புலிகளை மட்டுமல்லாமல், முன்னாள் புலிகளையும் தேடித் தேடி அழித்தார்கள். இந்தச் சூழலில்தான் நான் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்புக்குத் தப்பிச் சென்றேன். சில காலங்களுக்குப் பின்பாக, இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டேன். நான் சிறையிலிருந்து வெளியே வந்த 1990-ஆம் வருட நடுப்பகுதியில், போர் உச்சக்கட்டத்திலிருந்தது. கொழும்பிலிருந்த தமிழ் இளைஞர்களை அரச படையும் துணைப்படைகளும் வேட்டையாடிச் சுட்டு, உடல்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தன. என்னால் யாழ்ப்பாணத்திற்கும் திரும்பிச் செல்ல முடியவில்லை. பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. நான் எனது உறவினரான பயண முகவர் ஒருவரின் உதவியோடு, தாய்லாந்துக்குத் தப்பிச் சென்று, அங்கே  அய்.நா. நிறுவனம் அகதிகளுக்கு மாதாமாதம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்று வாழ்ந்தேன். அங்கேயும் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். அகதிகளுடைய விசாவுக்கு அய்.நா. நிறுவனம் பொருப்பெடுக்காது. பல தடவைகள் 'பாங்கொக்' குடிவரவுச் சிறையில் அடைக்கப்பட்டேன். 1993-இல் பிரான்ஸுக்கு அகதியாகச் சென்றேன்.

அப்போதைய உங்களது மனநிலை பற்றிச் சொல்ல முடியுமா?

இரண்டு வருடங்களில் நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் என்னுடைய புலப் பெயர்வுகள் ஒவ்வொரு தடவையும் நிகழ்ந்தன. தமிழீழக் கனவு என்னுள் உயிர்ப்போடு இருந்தது. ஆனால், நாட்டுக்குத் திரும்பிச் செல்ல நீண்ட நெடிய முப்பத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதுவும் அந்நியனாக, பிரஞ்சுக் குடிமகனாக சுற்றுலா விசாவில் சென்று திரும்பியிருக்கிறேன்.

பிரான்ஸில்  உங்களை தக்கவைத்து கொள்ள முதலில் பார்த்த வேலை பற்றி சொல்லுங்கள்?

முதலில் செய்த வேலை சட்டவிரோதமானது. விளம்பர அட்டைகளை வீடுகளுக்குப் போடுவது. அதன் பின்பு பொருட்காட்சி மண்டபங்களில் தூய்மைப் பணி செய்தேன். வேலை செய்வதற்கான  விசா எனக்குக் கிடைக்க ஒரு வருட காலமானது. பின்பு உணவகத்தில் சமையலறைப் பணிக்குச் சட்டப்படி சென்றேன்.

எழுத வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது?

வாசிப்பின் மீதும், தமிழ் சினிமா மீதும் எனக்கிருந்த இயல்பான ஆர்வமே என்னை எழுதுவதை நோக்கி இட்டுச் சென்றது. சிறுவனாக இருந்தபோதே கிராமத் திருவிழாக்கள் நடத்துவதற்காக நாடகங்களை எழுதி நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய பதினேழாவது வயதில் முதல் கவிதை 'ஈழமுரசு' பத்திரிகையில் வெளியானது. அந்தக் கவிதையின் தலைப்பு 'விசாக்கள்' என்றிருக்கும். வடபகுதித் தமிழ் மக்கள் வவுனியாவைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்றொரு சட்டம் அப்போது அரசால் போடப்பட்டிருந்தது. அதைக் குறித்தது அந்தக் கவிதை.

உங்களது BOX நாவலின் பாத்திரமான ரேமன் பக்ததாஸ் பின் நாட்களில் கிறிஸ்தவ ஊழியராக மாறியிருந்தார் என்றும், அவர் அங்கே இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்ததாகவும் எழுதியிருப்பீர்கள். கிறிஸ்துவ அமைப்புகள் தமிழ் மக்களுக்கு நிஜமாகவே உதவியிருக்கின்றனவா?

கிறிஸ்துவ திருச்சபையும், கிறிஸ்துவ அமைப்புகளும் மக்களை முட்டாள்தனத்திலும் மூட நம்பிக்கைகளிலும் ஆழ்த்தி வைக்கவும், உழைப்பைச் சுரண்டவும் நுட்பமாகச் செயற்படுபவை. அதேவேளையில் மதம் பரப்பும் நோக்கத்தோடு கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அவை சேவையும் செய்துள்ளன. எல்லா அமைப்புகளிலும் விதிவிலக்காகச் சில உண்மையான மக்கள் ஊழியர்கள் இருப்பார்கள். கிறிஸ்துவ அமைப்புகளிலும் அவ்வாறு சில பாதிரிகள் இருக்கிறார்கள். யுத்தகாலத்தில் பொதுமக்களைக் காக்கும் முயற்சியில் சில பாதிரிகள் தீவிரமாக இறங்கிச் செயற்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடமிருந்து மட்டுமல்லாமல், புலிகளிடமிருந்தும் அவர்கள் மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிகளில் சில பாதிரிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் வெளியுலகம் அறிய அறிக்கையிட்டிருக்கிறார்கள்.

 கிறிஸ்துவத்தை பரப்புரை செய்ய வந்தவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரவிக் கிடந்த சாதியத்தை உடைக்க முயற்சி செய்ததையும் அந்த நாவலில் சொல்லியிருக்கிறீர்கள். இதை விரிவாகச் சொல்ல முடியுமா?

கிறிஸ்துவ மதத்தில் ஏட்டளவில் சாதி கிடையாதுதான். ஆனால், கிறிஸ்துவர்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாணக் கிறிஸ்துவர்களிடையே- சாதியம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காலனிய காலத்தில் இலங்கைக்கு வந்த வெள்ளையின கிறித்துவ மத போதகர்களுக்குச் சாதி கிடையாது. ஆனாலும், அவர்களில் பலர் இலங்கையிலிருந்த சாதிய முறைமையையும், தேச வழமைச் சட்டத்தையும் அனுசரித்துப் போனார்கள். அவர்களில் மிகச் சிலர், சாதிவெறி வெள்ளாளர்களின் எதிர்ப்பையும் மீறி,  தங்களது மிஷன் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் உறுதியாக நின்றார்கள். அப்படியான ஒரு பாதிரியாரைத்தான் நான் BOX  நாவலில் குறிப்பிடுகிறேன். ’பிக்னல்’ என்ற பெயருடைய அந்தப் பாதிரியார் என்னுடைய கற்பனையல்ல. வரலாற்றில் வாழ்ந்த உண்மையான மனிதர்.

ஆனால், இன்றைக்கு ஈழத்திலிருக்கும் சுதேசிப் பாதிரிகளுக்கும், ஆயர்களுக்கும் சாதி இருக்கிறது. 'உன்னை நீ நேசிப்பதைப் போலவே அயலானையும் அன்பு செய்' என்பவர்கள் தேவாலயத்திற்குள்ளேயே ஊடுருவியிருக்கும் சாதியைக் களையும் செயல்களில் இறங்குவதில்லை.  பக்தகோடிகளுக்குப் பல மணிநேரம் நன்னெறிப் வாழ்க்கைப் பிரசங்கங்களைச் செய்யும் இவர்கள் சாதிய அநீதிக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. ஈழத்தில் கிறிஸ்துவம் என்பது இந்துமதச் சடங்குகளையும் சாதியையும் ஆழமாக உள்வாங்கிக்கொண்ட இந்து பினாமி அமைப்புத்தான். 

சில மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஷர்தார் ஜமீல் நடத்தும் 'கதைப்பமா' என்ற You Tube தொடரில் கலந்து கொண்ட கத்தோலிக்கப் பாதிரியார் ஏ.ஏ. நவரட்ணம் நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த போது, கிறிஸ்துவத்தில் சாதியம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறித்து நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். கிறிஸ்துவத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவே செய்தார். சாதியத்தைக் கடைப்பிடிப்பவன் ஒருபோதும் கிறிஸ்துவனாக இருக்கவே முடியாது என்று பதிலளித்தார். பாதிரியார் சொல்வதுபடி பார்த்தால், ஈழத்தில் கிறிஸ்துவனை  மலத்தில் அரிசியைப் பொறுக்குவதைப் போலத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

BOX நாவலின் மையக் கதாபாத்திரம் வாய் பேசத் தெரியாத சிறுவன். முதலில் அவனைப் பார்க்க பிரபாகரன் மகன் போல் உள்ளார் என்று கூறி கதையை நகர்த்திவிட்டு,இறுதியாக அவனை  இளம் புத்த துறவி என்று காண்பித்து நாவலை நிறைவு செய்யக் காரணம் என்ன?

அந்த நாவலை, நான் பாலச்சந்திரனுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன். நாவலின் போக்கில் குழந்தைத் துறவியில் பாலச்சந்திரனைப் பொருத்திப் பார்க்க முயன்றேன். இந்த இருவேறு இனக் குழந்தைகளையும் வேறு வேறாகத்தானே அதிகார சக்திகள் பார்க்கின்றன. தீர்ப்பிடுகின்றன. இனவெறுப்பும் இனப்பகைமையும் அற்ற உலகத்தைக் குழந்தைகளது உலகில் மட்டுமே என்னால் சித்திரிக்க முடிந்தது.

இலங்கையில் பாலியல் விடுதிகளில் பெண் புலிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் அந்த நாவலில் வருகிறதே. இது கதையின் போக்கில் வலுகட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறதா?  

இல்லை. சரணடைந்த போராளிகளில் ஒரு பகுதியினர் எவ்விதம் நடத்தப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது குறித்துப் பல்வேறு சாட்சியங்களும் காணொளிகளும் வெளியாகியிருக்கின்றன. இயக்கத்தோடு எந்தத் தொடர்புமில்லாத சாதாரணமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூட இராணுவத்தினரால் அவமானங்களும், சித்திரவதைகளும் நிகழ்ந்தன. இலங்கை அரசினதும், சிங்கள இனவெறியர்களதும் அருவருக்கத்தக்க வெற்றிக் கொண்டாட்ட மனநிலையைச் சித்திரிக்கவே நாவலில் அந்தப் பகுதி எழுதப்பட்டது.

வீரதீரமான பெண்புலிகள் விடுதியில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என இவர்கள் பொய் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள், உண்மையில் அங்கே வைக்கப்பட்டிருந்தவர்கள் சாதாரண ஏழைப் பெண்களே என்றுதான் நாவலில் தெளிவாக எழுதியுள்ளேன். ஆனால், இதைக் கூடப் பொறுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள இயலாமல், பெண் புலிகளை நான் கொச்சைப்படுத்திவிட்டதாக அ.இரவி போன்ற சிலர்  விமர்சித்தார்கள்.

ஆனால், உண்மையில் பெண் புலிகளை - குறிப்பாக பெண் புலிகளின் தலைவி மறைந்த தமிழினியை- பாலியல் கொச்சைப்படுத்திக் கேவலமான ஆபாசச் சிறுகதையை 'சாகாள்' என்று எழுதிய,  தமிழ்நாட்டுக்கான சுத்தசைவ இலக்கியத் தூதுவரான அகரமுதல்வனையோ, 'திருமதி செல்வி' என்று கதையெழுதி, இப்போது அய்ரோப்பாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளியைக் கதைத் தூஷணம் செய்த சாத்திரி என்ற வதந்தி மன்னனையோ கபட விமர்சகர்கள் நைஸாகக் கடந்து சென்றார்கள். நானோ தமிழினிக்கும் செல்விக்கும் இந்த எழுத்தாளர்கள் இழைத்த அநீதியைக் கடுமையாகச் சாடி எழுதிக்கொண்டிருந்தேன்.

(இலங்கை தமிழர்கள் சந்திக்கும் தற்போதைய சிக்கல், ’பா.ஜ.க. ஈழத் தமிழர்களின் நட்புசக்தி’ என்று கட்டமைக்க என்ன காரணம் என்பது தொடர்பான முக்கிய விஷயங்கள் அடுத்த தொகுப்பில் வெளியாகும்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment