Advertisment

இந்து என்ற கதையாடல் அடிப்படையில் ஈழத்தை வென்று விட நினைப்பது முட்டாள்தனம்: ஷோபாசக்தி

'இந்தியாவில் சாதிய அமைப்பு முறைக்கு எதிராக, காலத்துக்குக் காலம் எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் தத்துவவாதிகளும் தோன்றியுள்ளார்கள். புத்தர், சித்தர்கள், ஜோதிபா பூலே, நாராயணகுரு, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் என ஒரு நீண்ட வரலாற்று வரிசையுண்டு. ஈழத் தமிழர்களிடையே இப்படி எந்த முதன்மைச் சிந்தனையாளரும் சீர்திருத்தவாதியும் தோன்றவேயில்லை'.: ஷோபா சக்தி

author-image
Vasuki Jayasree
New Update
எழுத்தாளர் ஷோபா சக்தி (Photo credit: இளவரசன் தேவராஜன்)

எழுத்தாளர் ஷோபா சக்தி (Photo credit: இளவரசன் தேவராஜன்)

இச்சா, box, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபா சக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது.

Advertisment

 ‘பாக்ஸ்’ நாவலில் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கிறீர்கள். இலங்கை இனப்பிரச்சினையை இலங்கைக் கம்யூனிஸ்டுகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அவர்களால் கம்யூனிஸத்தையே புரிந்துகொள்ள முடியவில்லையே. ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காதவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கவே முடியாது.இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அவர்களே முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். அவர்கள் இழைத்த தவறுகளாலும், சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகளாலும்  அதிருப்தியுற்ற செயலூக்கமுள்ள சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பி. என்ற இடது முகமூடியணிந்த சிங்கள இனவாத அமைப்பிலும், தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தேசியவாத இயக்கங்களிலும் தஞ்சமடைந்தார்கள். ஒருகாலத்தில் இலங்கை வரலாற்றில் மக்களிடையே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இவ்வாறுதான் தங்களைச் சிதைத்துக்கொண்டு இலங்கை இனவாத அரசின் தொங்குசதையானார்கள். அதேவேளையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஆதரித்தும்,சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து பேசும் சின்னஞ்சிறிய, மக்கள் ஆதரவற்ற இடதுசாரிக் குழுக்களும் இலங்கையில்  இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

 ‘பாக்ஸ்’ நாவலில் சாதியக் கொடுமைகளைக் குறித்து எழுதியுள்ளீர்கள். சாதிய அமைப்பைப் பொறுத்தவரை ஈழத்தை இந்தியாவுடன் ஒப்பிடலாமா?

ஒப்பிட முடியாது. இந்தியாவில் சாதிய அமைப்பு முறைக்கு எதிராக, காலத்துக்குக் காலம் எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் தத்துவவாதிகளும் தோன்றியுள்ளார்கள். புத்தர், சித்தர்கள், ஜோதிபா பூலே, நாராயணகுரு, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் என ஒரு நீண்ட வரலாற்று வரிசையுண்டு. ஈழத் தமிழர்களிடையே இப்படி எந்த முதன்மைச் சிந்தனையாளரும் சீர்திருத்தவாதியும் தோன்றவேயில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதியொழிப்பில் அக்கறை காட்டியிருந்தால் கூட சாதி ஒழிப்பல்ல அவர்களது முதன்மையான இலக்கு. வர்க்கப் பார்வையுடனும், சாதி என்பது நிலப்பிரபுத்துப் பண்பு என்ற மூடுண்ட கருத்துடனும்தான் அவர்கள் சாதியை அணுகினார்கள். சாதி ஒழிப்புக் குறித்து எந்த அரசியல் வேலைத்திட்டமும் அவர்களிடமில்லை. இந்து மதத்திற்கும் சாதிக்குமுள்ள வலுவான அடிப்படைத் தொடர்பு குறித்தெல்லாம் அவர்கள் பேசவேயில்லை. இலங்கையில் தலித்துகளுக்கும், பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுகள் கிடையாது. சமூகநீதியிலான அதிகாரப் பகிர்வு குறித்தெல்லாம் இடதுசாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சியும் பேசியதில்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஈழத்தில்  சாதியத்திற்கு எதிரான உரையாடல்களும் சில மெல்லிய செயற்பாடுகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன. காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களால் தொடக்கப்பட்ட 'யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்' சமபந்தி போசனம் போன்ற சில செயற்பாடுகளை முன்னெடுத்தது. காந்தியாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து, தீண்டாமைக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதற்குப் பின்பாக ஜோவல் போல், ஜேக்கப் காந்தி போன்றவர்களால் தலித்துகளுக்கான விடுதலை அமைப்பாக 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' உருவாக்கப்பட்டு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும், இவர்களது போராட்டங்கள் பெரிய வெற்றிகளைச் சாதிக்கவில்லை. 1960-களில் இடதுசாரிகள் தீண்டாமை ஒழிப்பில் அக்கறை காட்டினார்கள். இவர்களது வழிகாட்டுதலோடு தொடக்கப்பட்ட 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' தீவிரமாகச் செயற்பட்டு ஆலய நுழைவு, தேநீர்கடை நுழைவு போன்ற சில வெற்றிகளைச் சாதித்தது. 1970-களில் தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டப் பேரலை எழுந்தபோது, இடதுசாரிக் கட்சிகளும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் அந்த அலையில் சிதறிப் போயின. தமிழ் அரசியல் புலத்தில் போராளி இயக்கங்கள் தீர்மானகரமான சக்திகளாக தங்களை நிறுவிக்கொண்டார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் சாதிய இரும்புக் கோட்டையில் சில ஓட்டைகளைப் போட்டது. போராளி இயக்கங்களுக்குள் எல்லா சாதி இளைஞர்களும் உள்வாங்கப்பட்டார்கள். ஒருசில சம்பவங்களைத் தவிர போராளி இயக்கங்கள் சாதியை மீறியே செயற்பட்டன. ஆனால், இவர்களிடமும் சாதியை ஒழிப்பதற்கு எந்த அரசியல் வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. 'தமிழீழம் அமைந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும்' என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாதி ஒழிப்பைக் கொள்கைரீதியாக இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் ஆதிக்க சாதியான வெள்ளாளர்களை பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற இரட்டை நிலைப்பாடு இவர்களிடம் இருந்தது. சாதிய முரண்களை இப்போது ஆழமாகப் பேசுவது விடுதலைப் போராட்டத்துக்குக் கேடாகலாம் என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிலேயே இவர்கள் இயங்கினர்கள். எனினும் கூட, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த பல சம்பவங்களில் போராளிகள் சாதியத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். அதுபோலவே யாழ்ப்பாண நூலகத் திறப்பு போன்ற சாதிய முரண் சம்பவங்களில் நழுவியும் போயிருக்கிறார்கள். இந்த நழுவல் போக்கு ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக முடிந்தது.

நேரடியான சாதி ஒடுக்குமுறைகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. இன்றைய தலித் இளைஞர்கள் முப்பது வருடப் போருக்குள்ளால் உருவாகி வந்தவர்கள். அவர்கள் நேரடிச் சாதிய ஒடுக்குமுறைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் அதிகாரம், கல்வி, நீதி, பொருளாதாரம், ஊடகம், மதநிறுவனங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இன்னும் வெள்ளாளரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. இந்த அதிகாரங்களின் ஊடாக மிக நுட்பமாகவும் மறைவாகவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிலை நிறுத்தப்படுகின்றன. புறக்கணிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன.

உங்களது மெய்யெழுத்து சிறுகதையில் "பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன" என்ற வரிகள் வரும். போரினால் ஏற்படும் உளவியல் சிக்கலைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

இதற்கு ஒரு பொதுவான பதிலை நான் சொல்லிவிட முடியாது. யுத்தத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு தனிமனிதரின் தன்நிலையையும், சமூக நிலையும் வெவ்வேறுவிதமாக உளவியல் சிக்கல்களை அவர்களில் ஏற்படுத்தும். யுத்தம் பொதுச் சமூகத்தில் உண்மை, சத்தியம், தோழமை, சகோதரத்துவம், அஞ்சாமை போன்ற மானிட உயர் பண்புளையே முதலில் கொல்கிறது. அதன் பின்பே மனிதர்களைக் கொல்கிறது.

பொருளாதாரரீதியாக உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு போரின் தாக்கம் குறைவாக இருந்ததா? அடிமட்டத் தமிழ் மக்களைத்தான் போர் அதிகம் பாதித்ததா?

ஆம். பொருளாதாரத்தில் வசதி, வாய்ப்புள்ளவர்கள் பெருந்தொகையாக வெளிநாடுகளுக்கும், போர் நடக்காத கொழும்பு போன்ற நகரங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். வறியவர்களும் எளியவர்களும்தான் போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதிக்கட்டப் போரில் வன்னிக்குள் சிக்கயிருந்த மக்களில் கணிசமான தொகையினர், வன்னியில் குடியேறிய வறிய மலையக மக்களாக இருந்தார்கள்.

சிங்கள பவுத்த அடிப்படைவாதம்தான் தமிழின அழிப்பின் மையக்காரணம். இதுபோன்ற ஒரு நிலை இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினருக்கும் இந்து மத வெறியால் ஏற்படுமா?

மத அடிப்படைவாதம் எந்த எல்லைக்கும் செல்லும். பவுத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்ற எந்த அடிப்படைவாதமானாலும் அது பாஸிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை இலங்கையில் மட்டுமல்லாமல், உலக வரலாறு முழுவதுமே கண்டுள்ளோம். மத அடிப்படைவாத அரசியல் நவீன சனநாயக அரசியலிலிருந்து விலக்கப்பட்டே ஆகவேண்டும். இந்து அடிப்படைவாத அரசியல் இப்போது இந்திய சனநாயகம் எதிர்கொள்ளும் முதன்மை ஆபத்து மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அது அபாயங்களை விளைவிக்கிறது. குஜராத் வன்செயல்கள், குடியேற்றச் சட்டத்திருத்தங்கள், மாட்டுக் கறிக்குத் தடை, மதச்சார்பற்ற அரசியலாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சிறை, எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, கலாசாரக் கண்காணிப்பு என்று அபாயம் விரிந்தே செல்கிறது. இதை எதிர்கொள்ள இன்னொரு மத அடிப்படைவாதத்தைப் பற்றிப்பிடிப்பது நிலைமையை மேலும் அபாயமாக்கும். நவீன இந்தியாவுக்கு காந்தியார், அம்பேத்கர் போன்றவர்கள் அளித்த மதச்சார்பாற்ற பெருமைமிகு முகம் இருக்கிறது. அதைக் காப்பாற்றியே தீர வேண்டும்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?

என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இல்லை. விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவப் போகிறார்கள் என்று பல வருடங்களுக்கு முன்பே நான் அனுமானித்திருந்தேன். அதைப் பல கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் குறிப்பிடவும் செய்தேன். புலிகள் வெற்றி பெறுவார்கள் எனக் கோஷம் போட்டுக்கொண்டிருந்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தேன். ஏனெனில் அவர்கள் மக்களிடம் உண்மையை மறைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளின் தலைவரின் உடல் இலங்கைப் படையினரின் கையில் சிக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது எப்படி நிகழ்ந்தது என எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. புலிகளின் தலைவர் நினைத்திருந்தால் தன்னுடைய உடலை முழுமையாக அழிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். யோசித்துப் பார்த்தால், போரின் இறுதி நாட்கள் நாம் நினைப்பதைவிடக் கடுமையாகவும் மர்மமாகவும் இருந்திருக்கின்றன என்பதே உண்மை.

இந்த முறை பழ. நெடுமாறனை இயக்கியது பா.ஜ.க. என்று பேசப்படுகிறதே?

பழ. நெடுமாறன் 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என அறிவித்தபோது, அவரருகே இருந்தவர் காசி. ஆனந்தன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரிடம் ஒரு முழுமூட நம்பிக்கையுண்டு. பா.ஜ.க. ஈழத் தமிழர்களின் நட்புசக்தி, இந்து என்ற அடிப்படையில் பா.ஜ.க இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் என அவர்கள் நம்புகிறார்கள். வன்னி இறுதிப் போரின் போது, பா.ஜ.க தேர்தலில் வென்றால் போர் நிறுத்தப்படும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றெல்லாம் அறியாமைக் குரல்கள் எழுந்தன. ராஜீவ் காந்திக்குப் பின்னான இந்திய அரசியலில், இந்திய ஒன்றிய அரசு எப்போதுமே மிக வெளிப்படையாக இலங்கை அரசுக்குச் சார்பாகவே உள்ளது. இலங்கை அரசைத் தனது கைக்குள் வைத்திருப்பதன் மூலம், இலங்கையில் இந்தியாவின் அதிகாரத்தையும் முதலீடுகளையும் நிலைநிறுத்துவதே இந்திய ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. எனவே இந்து என்ற கதையாடலின் அடிப்படையில் ஈழத்தை வென்றுவிடலாம் என நினைப்பது அடி முட்டாள்தனமும் மிகத் தவறான அரசியலுமாகும். இதை வேறுமாதிரியும் விளக்கலாம். இந்தியாவில் பட்டியல் சாதியினரில் பெரும்பாலோனோர் இந்துக்கள் தானே. இந்துக்கள் என்ற அடிப்படையில் பா.ஜ.க. அவர்களிடம் கரிசனை கொள்கிறதா என்ன? சநாதனத்தையும் சாதியத்தையும் சாஸ்த்திரங்களையும் பேணி வளர்ப்பதிலும், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை அழித்து ஒழிப்பதிலும்தானே பா.ஜ.க. கரிசனை காட்டுகிறது.

பெண் விடுதலைப் புலிகளை நான் கொச்சைப் படுத்தினேனா? ஷோபா சக்தி

( எழுத்தாளர் ஷோபா சக்தி நேர்காணலின்போது பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்கள் முதல் தொகுப்பில் நேற்று வெளியானது. அதன் தொடர்ச்சியான 2ம் தொகுப்பு இன்று வெளியாகி உள்ளது. இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சிக்கல், சீமானின் தமிழீழ அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த மூன்றாவது தொகுப்பு நாளை வெளியாகும்)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment