‘மரப்பாச்சியின் கனவுகள்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் யாழினி ஸ்ரீ தமிழ் இலக்கிய உலகில் கவனத்தைப் பெற்றுள்ளார். இவருடைய கவிதைத் தொகுப்பை அண்மையில் திரைப்பட இயக்குனர் கவிஞர் குட்டி ரேவதி வெளியிட்டுள்ளார். அதோடு யாழினி ஸ்ரீயின் கவிதைகளை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி படித்து பாராட்டியுள்ளார். இத்தனை பாராட்டுதல்களுக்கு உரிய யாழினி ஸ்ரீ தனது 7 வயதிலேயே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். மிகுந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு இடையே பத்தாம் வகுப்புவரை படித்த அவர் தனது தனிமையை புத்தகங்கள் கவிதைகளின் துணையோடு இந்த பிரபஞ்சத்தோடு மரப்பாச்சியின் கனவுகள் மூலம் தனது கனவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். கவிஞர் யாழினி ஸ்ரீயுடன் ஒரு நேர்காணல்.
கேள்வி: வணக்கம் யாழினி ஸ்ரீ, உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்?
வணக்கம். என்னுடைய பெயர் யாழினிஸ்ரீ என்கிற யோகேஷ்வரி. எனக்கு 30 வயதாகிறது.
பிறந்தது படித்தது எல்லாம் கோத்தகிரியில்தான். அம்மா சுந்தரி வயது 60. அப்பா முத்துசாமி வயது 74. நான் அவர்களின் ஒரே பெண். இப்போ மேட்டுபாளையம் அருகில் தென் திருப்பதியில் வசிக்கிறோம். நான் 2004ல் 10ம் வகுப்பு படிக்கும்போது ஆரம்பத்திலேயே உடல்நிலை காரணமாக படிப்பை நிறுத்திட்டேன். பிறகு 2007-2008ல் எங்கள் ஊராட்சியில் இலவச கணிணி பயிற்சியில் சேர்ந்து டிடிபி கற்றுக்கொண்டேன்.
கேள்வி: உங்களின் உடல் வளர்ச்சி குறைபாடு, நோய்மை பிறந்ததிலிருந்தேவா? இல்லை இடையில் ஏற்பட்டதா?
யாழினி ஸ்ரீ: ஆமாம்.. இடையில் ஏற்பட்டது தான். எனக்கு 1999 ஜூலையில் ''கைபோஸ்காலியாஸிஸ்'' மற்றும் "ருமட்டைட் ஆர்த்ரைட்டிஷ் " நோயால்
முதன்முறையாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோர் தங்களால் இயன்றவரையில் சிகிச்சை அளித்து பார்த்தனர். பயனில்லை. எனக்கு என்ன நோய் என்பதைக்கூட சில வருடங்கள் வரை தெரியாமல்தான் இருந்தோம். அதன்பிறகே, இப்போது எனக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ''கைபோஸ்காலியாஸிஸ்'' மற்றும் "ருமைட்டட் ஆர்த்ரைட்டிஷ் " என்பதை உறுதி செய்தார். எனக்கு மேற்கொண்டு உயர்சிகிச்சை அளிக்க பொருளாதார ரீதியாக அவரால் இயலவில்லை.
தற்போது என் உடலில் சிறு அதிர்வைகூட தாங்கும் சக்தி இல்லை. 5 நிமிடம் கூட நிற்க முடியாத அளவிற்கு வலியுடன் இருக்கிறேன். சிறு அதிர்வுகூட வலியை உண்டாக்கும். சாதாரண சக்கர நாற்காலியில்கூட அமர முடியாது. கால்கள் வீக்கம் ஆகி மடக்க முடியாததாலும் முதுகெலும்பு அதிகம் வளைந்ததாலும் மூச்சுத்திணறல், வாகனப் பயணமும் செய்ய முடியாது. இப்போது வயதான காரணத்தால் அப்பாவால் என்னை தூக்ககூட முடிவதில்லை. அம்மாவும் வேறு வழியின்றி தன் வலியை பொறுத்துகொண்டு என்னை தூக்கி சுமக்கிறார். எனக்கு உயர் சிகிச்சை கிடைத்து வலி குறைந்தால் என் தேவைகளை நானே செய்துகொள்வேன்.
பெற்றோர்க்கு கஷ்டம் தராமல் இருப்பேன். என் உடலுக்கு பொறுத்தமான சக்கரநாற்காலி இல்லாததால் அதிகநேரம் படுக்கையிலேயே இருக்கிறேன். அதனால், உடலில் பல தொல்லைகள் ஏற்படுகிறது. பெற்றோரால் உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய பொருளாதார ரீதியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், முதலுதவி சிகிச்சையோடு வாழ்கிறேன்.
கேள்வி: யாழினி இந்த உடல்நிலையில் எப்படி பத்தாம் வகுப்பு வரை படித்தீர்கள் ?
எப்படி படித்தேன் என்று சொல்லனும்னா.. எனக்கு உடல்நலம் பாதிக்கபட்ட பிறகு பள்ளி செல்வது என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்தது. நோய்மையோடு எதிர்காலத்தை சமாளிப்பது கஷ்டம் என்று கூறி... என் தாய் தந்தையே இரண்டு கிலோமீட்டர் தொலைவுள்ள அரசுப் பள்ளிக்கு மலைமேல் சுமந்து சென்று படிக்க வைத்தனர். காலையில் அம்மா என்னை பள்ளியில் விட்டுவிட்டு அதன்பிறகு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்வார். மாலையில் அப்பா கிளி ஜோசியம் பார்த்துவிட்டு வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அப்பா வர தாமதமானால் ஆசிரியர்கள் நண்பர்கள் துணையோடு பயணிப்பேன். பள்ளியில் என் தேவைகளை நண்பர்கள் கவனித்துகொள்வார்கள். ஒவ்வொரு நாளும் என்னை தயார்செய்து பள்ளிக்கு கொண்டுபோய் விட அம்மா ஒரு குடும்ப தலைவியாக பெரும் கஷ்டபடுவார். பல நாட்கள் அவர் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட நேரமில்லலாமல் என்னை தூக்கிசென்று பள்ளிக்கூடம் விட்டுவிட்டு வேலைக்கு ஓடுவார். இப்படி பள்ளிப் படிப்பை முடித்தேன். பிறகு, தென்திருப்பதி வந்ததும் வீல்சேர் மூலம் அப்பா கணிணி வகுப்புக்கு அழைத்து சென்றார்.
கேள்வி: உங்களுக்கு கவிதை எழுத வாசிக்க கவிதை மீதான ஆர்வம் எப்படி வந்தது ? ஏனென்றால், படிக்காத பெற்றோர்கள் வீட்டில் கண்டிப்பாக கவிதை புத்தகம் வாசிப்புக்கான வெளி இருந்திருக்காதில்லையா? அது எப்படி நிகழ்ந்தது?
யாழினி ஸ்ரீ: எனக்கு கவிதை ஆர்வம் எப்படி வந்தது என்றால், அம்மா, அப்பா வேலைக்கு போனதும் வீட்டில் தனியாக இருந்த எனக்கு புத்தகங்களும் வானொலியும் தான் துணையானது. பண்பலை கேட்பதும் புத்தகம் வாசிப்பதும் பிடித்த ஒன்றானது. அதன் வழி கற்ற தமிழால் உருவான எதையும் அழகியல் நேர்த்தியுடன் செய்யும் குணம்தான் மன ஓட்டங்களை கவிதைகளாக எழுதத் தூண்டியது.
அப்படி எழுதும் வரிகளை எஸ்.எம்.எஸ் வழியாக நண்பர்களுக்கு அனுப்புவேன். அவர்கள் வாசித்து அளித்த பாராட்டும் ஊக்கமும்தான் என்னை மேன்மேலும் எழுத வைத்தது.
கேள்வி: உங்களின் கவிதை உலகம் எப்படியானது? நீங்கள் இந்த உடல்நிலையில் எப்படி எழுதுவீர்கள்?
யாழினி ஸ்ரீ: எனது கவிதை உலகம் இந்த பிரபஞ்சம்தான். இந்த பிரபஞ்சத்தில் இருந்த, இருக்கும், இருக்கபோகும் அனைத்தும் என் எழுத்துகளுக்கானதே... உடலுக்குதான் நோய்மையே தவிர என் சிந்தனைகள் ஆரோக்கியமானது. அதை முடக்கிவிடமாட்டேன். கை வலித்தாலும் எழுதிவிடுவேன். அல்லது தட்டச்சு செய்வேன்.
கேள்வி: மரப்பாச்சி கனவுகள் கவிதை தொகுப்பு உருவானது எப்படி ?
யாழினி ஸ்ரீ: என்னுடைய மரப்பாச்சி கனவுகள் கவிதை புத்தகம் பலவருட எண்ணங்களின் தொகுப்பு. வலைதளத்தில் பதிந்த ஒரு கவிதையைப் படித்துவிட்டு பொன்னுலகம் பதிப்பகத்தாரான எழுத்தாளர் ஜீவா அவர்கள் கவிதை தொகுப்பு கொண்டுவர முன்வந்தார். அதை தொடர்ந்து பேரன்புமிக்க கவிஞர் தனசக்தியால் சில வரிகள் நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் கண்ணிலும், கவிஞர் குட்டிரேவதி கண்ணிலும் பட்டு பாராட்ட...
இந்ததொகுப்பு உருவானது.
கேள்வி: இதுவரை எத்தனை கவிதைகள் எழுதியுள்ளீர்கள் ?
யாழினி ஸ்ரீ: இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன்.
கேள்வி: நமக்கு ஏன் இப்படி ஒரு பிரச்சினை என்று என்றாவாது அயற்சியாகியிருக்கிறீர்களா?
யாழினி ஸ்ரீ: அயற்சி இல்லை... பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியாதுதான். தீராத சிலவற்றை ஏற்றுகொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார் யார்?
யாழினி ஸ்ரீ: எனக்குப் பிடித்த கவிஞர்கள் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் கல்கி
கேள்வி: உங்களால் இப்பொழுது எழுந்து நடக்க முடிந்தால் முதல் வேலையாக என்ன செய்வீர்கள்?
யாழினி ஸ்ரீ: அப்படி ஒரு அதிசயம் நடந்தால் என் அம்மாவிற்கு ஒரு கப் டீ போட்டு தந்துவிட்டு அவர்கள் மடியில் சாய்ந்துகொள்வேன்.
கேள்வி: உங்களின் கனவு லட்சியம் என்ன ?
யாழினி ஸ்ரீ: என்னுடைய கனவு லட்சியம் என்றால் வெயில்மழை பாதிப்பற்ற கழிவறை வசதியுடன் கூடிய படுக்கையறையும் கரி புகை அற்ற சமையலறையும்... அடிப்படை செலவுகளுக்கு குறைவில்லாத ஒரு வாழ்க்கையை அம்மாவிற்கு பரிசளிக்க வேண்டும் என்பதுதான்.
கேள்வி: உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?
யாழினி: எனக்கு இயற்கை சார்ந்தவை பிடிக்கும். இசை, புத்தகம், நட்பூக்கள், அம்மா...
என நிறைய பிடிக்கும்.
கேள்வி: உங்களுக்கு எழுத்து தவிர வேறென்னவெல்லாம் தெரியும் ?
யாழினி ஸ்ரீ: எழுத்து தவிர...கொஞ்சம் ஓவியம் வரைவேன், எம்ராய்டரி பண்ணுவேன், உல்லன் பின்னல், காகித வடிவமைப்பு, சமையல் தெரியும்
கேள்வி: இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகமாக இருக்கிறதா? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
யாழினி ஸ்ரீ: இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கானதாக நிச்சயமாக இல்லை. சிறுசிறு உரிமைகளைக்கூட போராடித்தான் பெற வேண்டி உள்ளது. அதிலும் தன் குறைகளை தானே மறந்து செயல்பட்டாலும் அதை சொல்லியே நம் வேகத்தை குறைக்கும். கண்முன் அநியாயம் நடந்தாலும் அமைதியாக மூலையில் முடங்கி இருக்க வேண்டும். அதிலும் தாயில்லாத மாற்றுதிறனாளி பெண்ணாக இருந்துவிட்டால் ஒவ்வொரு நொடியும் கடப்பது கொடுமைதான். இவ்வுலகில் இவ்வாறு துயருற்று வாழும் மாற்றுதிறனாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நல்ல வாழ்வாதார சூழலை உருவாக்கித்தர மனிதநேயமிக்க நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.