Advertisment

யுவ புரஸ்கார் சர்ச்சை: விருது தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை!

தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் எங்களை போன்ற படைப்பாளர்கள் முழு நேரப் பணியாக இதை கொண்டிருக்கவில்லை. ஒருவர் ஊடகத்தில் வேலை செய்கிறார். ஒருவர் மளிகை கடை வைத்திருக்கிறார். நான் ஒரு டிசைனராக இருக்கிறேன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை செய்துகொண்டுதான், எழுதிக்கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து எழுதுவதே இங்கே போராட்டமாக இருக்கும்போது, எப்படி ஒன்று திரண்டு குரல் கொடுப்பது- கவிஞர் நெகிழன்

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
யுவ புரஸ்கார் சர்ச்சை: விருது தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை!

யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பான ஒரு ஆழமான பார்வையை பெற  சமகாலத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக நாம் தொடர்புகொண்டோம்.

Advertisment

முதலாவதாக ’வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி, சதுரமான மூக்கு என்ற கவிதை நூல் உள்ளிட்ட  11 நூல்களை எழுதிய கவிஞர் பூவிதழ் உமேஷ் பகிர்ந்துகொண்ட கருத்துகளை காணலாம். “யுவ புரஸ்கார் விருதுக்கு அனுப்பபட்ட தகுதி வாய்ந்த படைப்புகள் முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறதே அதை பற்றி ?

publive-image

” பரவலாக கவனம் பெற்ற இளம் படைப்பாளிகள் குறும்பட்டியலில் இடம்பெறாத போது அப்படி நினைக்கவும் தோன்றுகிறது. உலகளவில் பொதுவாக இலக்கிய விருதுகளுக்கான அறிவிப்பு வரும்போதே, விருது தேர்வுக் குழுவில் உள்ள நடுவர்கள் பற்றி அறிவித்துவிடுகிறார்கள். மேலும் எத்தனை கட்டங்களாக தேர்வு முறையிருக்கும். அதில் எந்த நடுவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறிவிடுவர். ஆனால் இந்தியாவில் இளம் எழுத்தாளர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும், யுவ புரஸ்கார் விருது வழங்கும்போது இதுபோன்ற முறையை கடைபிடிப்பதில்லை. இம்முறையில் மாற்றம் வேண்டும்.  அப்படியான வெளிப்படைத்தன்மை வரும் போது குறும்பட்டியலில் இடம்பெறுவதையும் ஏறக்குறைய விருது வாங்கிய பெருமையோடு குறிப்பிடுவார்கள்.

விருதுக்கு எத்தனை பேர் படைப்பை அனுப்பினார்கள் என்பதும் வெளிப்படையாக இங்கே அறிவிக்கப்படுவதில்லை. விருது அறிவிக்கும் முன்பே, சிலருக்கு மட்டும் தனியாக அழைத்து உங்கள் படைப்பு பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி தனக்கு அழைப்பு வந்தது என்றும் தாங்கள் ஏமாற்றம் அடைந்த தாகவும் குறும்பட்டியலில் முன்பு இடம்பெற்ற நபர்களே கூறுகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான போக்கு இல்லை.

இதில் கட்சி சார்ந்த அரசியல் தலையீடு இருக்கிறாதா?

அரசியல் தலையீடு இருக்கிறதா ? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நடுவர்கள் குழுவை தேர்வு செய்யும்போது அவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்து இயங்குபவர்களாகவே இருகின்றனர். ஒரு நடுவர் குழு கலவையாக இருக்க வேண்டும். அதில் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என கலவையாக இடம் பெற வேண்டும். கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம கால இலக்கியத்தை பற்றிய புரிதல் இல்லை என்று இலக்கியவாதிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் தேர்வு குழுவை எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதே இங்கே தெரியவில்லை. பொதுவாக நடுவர்கள் குழுவில் இடம் பெறுபவர்கள்  பற்றிய வெளிப்படைத் தன்மை  வேண்டும்.

எழுத்தாளர் ஜெயமோகன் இது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கும்போது, யார் சிறந்த இலக்கியவாதி என்று கூற ஜெயமோகன் யார்  என்றும் இதை வாசகர்கள்தானே முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறதே அது பற்றி உங்கள் கருத்து !

அப்படி சொல்பவர்களில் பலர் முதலில் ஜெயமோகனை நான் வாசித்ததேயில்லை என்று கூறியே எதிர்க்கிறார்கள் இது, தமிழ் சினிமாவை நான் பார்க்க மாட்டேன் ஆங்கில சினிமாவையே பார்ப்பேன் என்று சொல்வதைப் போன்றதுதான். ஜெயமோகனிடம் எனக்கு கருத்தியல் ரீதியாக முரண்பட்ட கருத்துக்களும் உண்டு, ஆனால் ஒரு படைப்பாளியாக அவரது இலக்கிய பங்கு மிகப்பெரியது. அவருடன் அப்படி முரண் இருப்பதாலேயே அவர் சொல்வதை ஏற்க மறுப்பது சரியல்ல ? தமிழ்க் கவிதைக் குறித்து அவர் எழுதிய அளவுக்கு கவிஞரல்லாத யாரும் எழுதவில்லை அந்தப் புள்ளியிலிருந்து அவர் வைக்கும் வாதத்தைக் கவனிக்க வேண்டும்.

 இந்த குறும்பட்டியலில் உள்ள மற்ற படைப்புகள் பற்றி  இலக்கிய மேடைகளில் விவாதிக்கப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது என்றும் ஆனால் காளிமுத்துவின் புத்தகம் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளர் எழுதுவதுபோல் இருக்கிறது என்று ஜெயமோகன் கூறுகிறார். இதில் தவறொன்றும் இல்லை. பொதுவாக ஆரம்ப நிலையில் புத்தகம் வெளியிடும் இளம் எழுத்தாளர்களை இலக்கிய உலகில் உள்ள மூத்தவர்கள் வாழ்த்துவார்கள், வரவேற்பார்கள் பாராட்டுவார்கள், அது இலக்கிய உலகின் நல்ல பண்பு. அதற்காக அது சிறந்த படைப்பாக மாறிவிடாது.

யுவ புரஸ்கார் விருது குறித்து எதிர் கருத்துகள் தொடர்ந்து முன்வைப்பட்டு வருகிறது என்று கூறுகிறீர்கள் ஆனால் இந்த நிலை மாற எழுத்தாளர்கள் சார்பாக எந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது?

பால சாகித்ய புரஸ்கார் விருது தேர்வு குறித்த அதிருப்தியை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒரு அறிக்கையை தயார் செய்து சாகித்யா அகாதமிக்கு அனுப்பியிருக்கிறது. குழந்தை இலக்கியத்தில் தொடர்ந்து இயக்குபவர்கள் ஒரு அமைப்பாகக் கூடியிருக்கிறார்கள். ஆனால் சம காலத்தில் இலக்கியத்தில் இதுபோன்ற ஒற்றைக் குரல் இல்லை. தனித்தனியே சிலர் தங்கள் கருத்துக்களை அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் அவர் கூறுகையில் “ பொருளாதார பிரச்சனை வெகுவாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் முக்கிய விருதுகளுக்கு வெறும் ரூ.50  ஆயிரம் அல்லது ஒரு இலட்சம் கொடுப்பது சரியா ? தாகூர் இலக்கிய விருதுக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது நிச்சயம் மாற வேண்டும்.

 இருபத்தைந்து இலட்சம் முதல் ஒரு கோடிவரை  விருதுத் தொகை வழங்க வேண்டும். அரசுக்கு அது பெரிய செலவில்லை.  ஏனெனில் மற்ற நாடுகளில் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்கவே பல அறக்கட்டளைகள் இருக்கின்றன. அரசாங்கமே உதவித் தொகை கொடுத்து, எழுத உதவுகிறது.  விருது தொகை அதிகமாகும்போது  எழுத்தாளர் மீதான சமூகத்தின் கவனமும் மரியாதையும் அதிகமாகும். அது வாசிப்பை மக்களிடம் பெரிதும் பரவலாக்கும் “ என்று அவர் கூறினார்.

'பூஜ்ய விலாசம்' என்ற கவிதை நூலை எழுதியிருக்கும் சேலத்தை சேர்ந்த கவிஞர் நெகிழனிடம் நாம் உரையாடியபோது;

publive-image

சாகித்திய அகாதமி விருது பெற்ற இமயம் கூறியபோது, “ நீங்கள் கொடுத்திருந்தால், கோவேறு கழுதைக்கே கொடுத்திருக்கவேண்டும். இப்போது ஏன் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டார். சமீபத்தில் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி கூறமுடியுமா?

தமிழ்ச் சூழலில் விருதுகள் தகுதியான நபர்களை தவிர்த்துவிட்டு மூன்றாம் தர நபர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இந்த வருடம் யுவ புரஸ்கார் விருது காளிமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடையது  தொடக்க நிலை எழுத்து. காளிமுத்துவின் கவிதைகளை படிக்கையில் அவை வெறும் காட்சிகளாகவே எஞ்சுகின்றன. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவரும் கவிதையைப்போல்தான் அது இருக்கிறது.

 ஜெயமோகனை எதிர்ப்பதாக காளிமுத்துவை ஆதரிப்பது, இலக்கிய சூழலை மேலும் மோசமாக கொண்டு செல்லும். எளிமை, அடி மட்டதிலிருந்து ஒருவர் வருவது ஜெயமோகனுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் எழுத்து உலகில் இயங்கி வரும் அனைவரும் ஜமீன்தார்களின் வாரிசுகள் இல்லையே. எல்லோரும் பொருளாதாரத் தடுமாற்றம் கொண்டவர்கள்தான். 

காளிமுத்துவின் படைப்பில் உள்ள குறைகள் பற்றி கூற முடியுமா?

காளிமுத்துவின் கவிதைகள் புதுக்கவிதைக்கும் – நவீன கவிதைக்கும் இடையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் மெல்லுணர்ச்சியை தூண்டக்கூடியதாகவும், மிகைதன்மை நிறைந்ததாகவும் இருக்கின்றன. மேலும் இவை வாசகர்களை உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கில் மட்டுமே எழுதுப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் வெறும் காட்சிகளாகவே இருக்கின்றன. அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. அப்படி நகர்ந்தால்தான் அது கவிதையின் பூரணத்துவத்தை அடையும். மேலும் அவர் கையாண்ட மொழியின் தன்மை 20 வருடங்களுக்கு முன்பிருந்த மொழி. அதிலிருந்து நவீனக் கவிதை எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டது. சொற் றொடர்களை  அமைப்பதிலேயே    காளிமுத்துவிற்கு சிக்கல் இருக்கிறது. சிந்தனை ரீதியாகவே அவரிடம் வளம் குறைவாகவே இருக்கிறது. பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன் ஆகியோர் எழுதிய காலகட்டத்தில் அவர்களோடு சேர்ந்து பலரும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்கள், நாம் ஏன் அவர்களை விட்டுவிட்டு இவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறோம். ஏனெனில் இவர்கள் மட்டுமே மொழி ரீதியாகவும், வடிவ ரீதியாகவும் தனித்துவமான படைப்புகளை தந்திருக்கிறார்கள்.

தேர்வு குழு குறித்தும், தேர்வு செய்யப்பட்ட படைப்பு குறித்தும்  உங்கள் கருத்து ?

தேர்ந்த நவீன இலக்கிய வாசிப்புடையவர்கள் தேர்வு குழுவில் இடம் பெற வேண்டும். இறுதி பட்டியலில் இடம் பெற்ற றாம் சந்தோஷுக்கோ  அல்லது  வேல்முருகன் இளங்கோவிற்கோ கொடுத்திருக்கலாம். இவர்களைப் போன்ற  தகுதியான படைப்பாளர்களை பட்டியலில் வைத்துக்கொண்டே காளிமுத்து மாதிரியான ஒரு நபருக்கு விருது கொடுத்திருப்பது ஒரு சர்வாதிகாரப் போக்கு.

எதிர்கருத்துக்களை தெரிவித்து வந்தாலும். இதற்கு ஒன்று திரண்டு ஏன் குரல் கொடுக்கவில்லை? குறைந்தது இந்த குறைகளை முதல்வரிடம் சென்று முறையிட்டிருக்கலாமே ?

தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் எங்களை போன்ற படைப்பாளர்கள் முழு நேரப் பணியாக இதை கொண்டிருக்கவில்லை. ஒருவர் ஊடகத்தில் வேலை செய்கிறார். ஒருவர் மளிகை கடை  வைத்திருக்கிறார். நான் ஒரு டிசைனராக இருக்கிறேன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை செய்துகொண்டுதான், எழுதிக்கொண்டு இருக்கிறோம். பத்திரிக்கையில் எங்களது படைப்பு வெளியானால் ஆயிரம் ரூபாய் தருவார்கள். இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது. இங்கே சிற்றிதழ்கள் நடத்தி இலக்கியத்திற்கு பங்காற்றிய பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த பணத்தைதான் செலவிட்டனர். தொடர்ந்து எழுதுவதே இங்கே போராட்டமாக இருக்கும்போது, எப்படி ஒன்று திரண்டு குரல் கொடுப்பது’ என்று பகிர்ந்துகொண்டார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment