scorecardresearch

யுவ புரஸ்கார் விருது அரசியல்… ஜெயமோகன் விமர்சனமும் எதிர் கருத்துகளும்!

இது மிகவும் வேதனை அளிக்கிறது. அரசு சார்பாக வழங்கப்படும் இந்த விருதுகள் இப்படி ஒரு தலைபட்சமாக இருப்பது சரியான போக்காக இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திருக்கும் விமர்சனம் முற்றிலும் சரியானது. அவரது அரசியல் செயல்பாடுகளில் , கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. இலக்கிய உலகில் இது புதிதாக நடைபெறவில்லை- ச. துரை

யுவ புரஸ்கார் விருது அரசியல்… ஜெயமோகன் விமர்சனமும் எதிர் கருத்துகளும்!

சாகித்ய அகாதமி, சமீபத்தில் யுவ புரஸ்கார் விருதுகளை அறிவித்தது. கவிஞர் பா. காளிமுத்து எழுதிய கவிதை நூலான ”தனித்திருக்கும் அரளிகளின் மதியம்”என்ற கவிதை தொகுப்புக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் விருது ’மல்லிகாவின் வீடு’ நூலுக்கு ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள தானாவயல் கிராமம் பா. காளிமுத்துவின் சொந்த ஊராகும். ’தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ நூல் இவருடைய முதலாவது கவிதைத் தொகுப்பு ஆகும்.

இந்நிலையில் விருதுகள் அறிவிப்பு இலக்கிய உலகில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைபக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் அரிசங்கர், ராம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி ஆகியோர் இலக்கியத் தகுதி கொண்டவர்கள் என்றும் தற்போது விருது பெற்றிருக்கும் காளிமுத்து இனிதான் கவிதைகள் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு முன்பு அவர் தமிழில் எழுதப்பட்ட  புதுக்கவிதைகளை வாசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் “நடுவர்களாக இருந்த முனைவர் ஆர்.ராஜேந்திரன், டி.பெரியசாமி, எம்.வான்மதி ஆகியோருக்கு தமிழ் கல்வித்துறையின் மரபின்படி தினத்தந்தி அளவுக்குக் கூட வாசிப்புப்பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. பயணப்படி, கௌரவஊதியம் தவிர சாகித்ய அகாதமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்கவும் நியாயமில்லை. அவர்களை நடுவர் குழுவுக்கு பரிந்துரைத்தவர்கள் ஆணையிட்டதைச் செய்திருப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த விமர்சத்திற்கு இலக்கிய வட்டாரத்தில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயமோகன் சொல்வதுதான் சிறந்த இலக்கியமா?. அவர் கைகாட்டும் நபர்தான் சிறந்த இலக்கியவாதி என்று நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கண்டனக்குரல்கள் ஒலிக்கின்றன. மேலும் ஜெயமோகனின் அரசியல் மற்றும் அவர் செயல்படும் கருத்தியலை முன்வைத்து இந்த கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் இடதுசாரி எழுத்தாளர் மற்றும் சிறார் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் உதய் சங்கர் சாகித்ய அக்காதமி யுவ புரஸ்கார் விருதுகள் தொடர்பாக ஒரு ஆழமான விமர்சனப் பதிவை அவரது முகநூலில் எழுதியுள்ளார்.

”தமிழில் பால சாகித்ய புரஸ்கர் திருமதி. ஜி.மீனாட்சி எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் என்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ’மல்லிகாவின் வீடு’ நூல், பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘அப்பாவை ஏன் பிடிக்கும்?’. இதற்கு மிகச் சாதாரணமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையின் முடிவாக ஒரு மாணவர்,”எங்கப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஏன்னா, அவர் எங்கம்மாவைக் கல்யாணம் செய்துக்கிட்டாரே!” என்று சொல்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்கு போன்ற இதை, சிறுவர் கதை என்கிற முடிவுக்கு தேர்வுக் குழுவினர் எப்படி வந்தனர்?

இப்படி இத்தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கதைகளில் கதைத்தன்மையே இல்லை. மொத்தத் தொகுப்பும் ஆரம்பகட்ட சிறார் கதைகள் எழுதுபவரின் முயற்சியைப் போலுள்ளது. 1980களில் வந்த புத்தகத்தினைப் போல எந்த வகையிலும் நவீனத்துவம் (இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவது நவீனத்துவம் ஆகி விடாது) சிறிதும் இல்லாத தொகுப்பாக இருக்கிறது. புதிய முயற்சியாகவோ, புதிய கதை சொல்லும் பாணியிலோ, இதுவரையில் யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல முற்பட்டதாகவோ தெரியவில்லை.

விருது என்பது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டால்தான் அந்தத் துறை வளர்ச்சிபெறும். ஆனால், பால சாகித்ய புரஸ்கார் தேர்வுக் குழுவினரோ, தமிழில் நவீன சிறார் இலக்கியம் வளரக் கூடாது என நினைப்புடன் இந்நூலைத் தேர்ந்தெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் எதிர்காலத்தில் சாகித்ய அகாதமியின் பால சாகித்ய விருதுத் தேர்வு மேம்பட சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.

1. சமகாலச் சிறார் இலக்கியத்தோடு நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே விருதுத் தேர்வுக் குழுவுக்குத் தேர்வுசெய்ய வேண்டும்.

2. தற்போது இறுதிக் குறும்பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறது. அதே நேரம், இறுதிப்பட்டியலுக்கான நூல் தேர்வு செய்யப்பட்ட முறை, அவற்றைப் பரிந்துரைத்த தேர்வாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும்.

3. சாகித்ய அகாடமி அலுவலர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு சமகாலத்தில் என்ன மாதிரியான சிறார் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

4. விருதுத் தேர்வு முறை நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உத்திரவாதப்படுத்த, வெளிப்படைத்தன்மை வேண்டும்.

5. விருதுக்குரிய நூல் இறுதிப் பட்டியலிலுள்ள மற்ற நூல்களைவிட எந்த வகையில் தகுதியானது என்பது குறித்து விருதுக் குழு நடுவர்களின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த கண்டனங்கள் தொடர்பாக சமகாலத்தில் இயங்கி வரும் கவிஞர் ச. துரையிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம் “ இது மிகவும் வேதனை அளிக்கிறது. அரசு சார்பாக வழங்கப்படும் இந்த விருதுகள் இப்படி ஒருதலைபட்சமாக இருப்பது சரியான போக்காக இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திருக்கும் விமர்சனம் முற்றிலும் சரியானது. அவரது அரசியல் செயல்பாடுகளில், கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. இலக்கிய உலகில் இது புதிதாக நடைபெறவில்லை.  எனது மூத்தோர்களின் படைப்புகளும் இப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இயங்கி வரும் எழுத்தாளர்களுக்கு இங்கே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை ”என்று கூறினார்.

இதற்கு ஏன் பல எழுத்தாளர்களும் அமைதியாகவே இருக்கிறார்கள் எதிர்குரல்கள் குறைவாக இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ச.துரை “ பல எழுத்தாளர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருகின்றனர். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதால் அவர்கள் சலித்துவிட்டனர். நாங்களும் இதுபோன்ற ஒரு மனநிலையில்தான் இருக்கிறோம்”என்கிறார்.

மேலும் பேசிய அவர் “ தேர்வுக்குழுவில் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்களை தேர்ந்தெடுக்கும் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுபோன்ற தட்டையான படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும்போது, தமிழின் கவிதை உலகு இவ்வளவு தரம் குறைந்ததா? என்று அவர்கள் நினைத்துவிடக்கூடும். எனது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு முன்பு கூட நண்பர் ஒருவர் கூறினார்.  இப்போது நீ எதிராக எழுதினால் எதிர்காலத்தில் விருது கிடைக்காது என்று. அப்படி ஒரு விருது எனக்கு தேவையில்லை என்பதாலேயே எனது விமர்சனத்தை முகநூலில் பதிவு செய்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக தரமான படைப்புகளுக்கு  சாகித்ய அக்காதமி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பதுதான் மன வேதனை அளிக்கிறது. மேலும் ஜெயமோகன் என்பதற்காகவே பலரும் அவரை தனிப்பட்டரீதியாக விமர்சிக்கின்றனர். ஆனால் எழுத்தாளர் உதய சங்கரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.  பலரும் இதற்கு எதிரகாக பேசி வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Yuva puraskar 2022 writer jeyamohan criticism with sa durai interview